Breaking Newsஇன்றைய தினம் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரிட்டன் அமெரிக்கா உற்பட மேற்குலக நாடுகள் இணைந்து கொண்டு வந்த போர்க்குற்ற தீர்மானம் 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இலங்கை அரசாங்கம் இந்த 46/1 தீர்மானத்தை நிறைவேற்றாது தடுக்க பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டது. இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக எந்தவொரு தீர்மானங்களும் கொண்டுவரப்படமாட்டாது இலங்கை தொடர்பான பிரச்சனை பேசு பொருளாக இருக்காது இலங்கையில் தமிழ் மக்கள் மீது தாம் மேற்கொண்ட இன அழிப்பினை போர்க்குற்றங்களை சர்வதேசம் மறந்துவிட்டது இலங்கை எக்குற்றமும் செய்யவில்லை என உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுவிடும்  என்றே இலங்கை அரசு நம்பிக்கொண்டிருந்தது.

எனினும் இலங்கை அரசின் நம்பிக்கைகள் வாய்ச்சவடால்கள் எல்லாம் இன்றையதினம் புஷ்வானமாகிப்போயுள்ளது. எந்தவொரு பிரேரணை வந்தாலும் சீன+ரஸ்ய கூட்டிணைவு நாடுகளின் ஆதரவோடு அவற்றை நாம் முறியடிப்போம் என்ற மகிந்த+கோத்தா அணியின் கனவுகள் சிதறடிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் தமக்கு ஆதரவாக பெரும்பான்மையான நாடுகள் இருக்கப்போவதில்லையென்ற உண்மை தாமதமாக உறைக்கத்தொடங்கியுவுடன்தான் அவர்கள் சுதாகரித்துக்கொண்டார்கள். ஜெனிவா மனித உரிமை சபையில் அங்கம் வகிகும் முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை பெற அவசர அவசரமாக தீர்மானம் இயற்றி கொரோனாவினால் இறக்கும் இஸ்லாமியர்களின் ஜனாசாக்களை அவர்களின் மரபுகளின் படியே அடக்கம் செய்ய அனுமதி கொடுத்தார்கள் ஓராண்டு காலமாக நீங்கள் தலைகீழாக நின்றாலும் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்றவர்கள் ஒரே மாதத்தில் தம் நிலையை மாற்றிக்கொண்டார்கள். 

மனித உரிமை சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு அவசர அவசரமாக தம் பிரதிநிதிகளை அனுப்பி விழுந்து கும்பிட்டார்கள் அண்டை நாடான பங்களாதேஷ் க்கு பிரதமர் மகிந்தவே நேரில் சென்று ஆதரவு கேட்டார் பாகிஸ்தான் பிரதமருக்கு பட்டுக்கம்பள வரவேற்பளித்தார்கள். எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை தோல்வியடைய வைத்து இனியொரு சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றுக்கு சாத்தியமே இல்லாத நிலையொன்றை தோற்றுவிக்க நினைத்தனர். எனினும் முள்ளிவாய்க்காலில் படுகொலையாகி மரணித்துப்போன ஆன்மாக்களின் பெயரால் அவர்கள் தொடர்ந்தும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிச்செல்ல வழியின்றி சிக்கி இருக்கின்றனர். 

இங்கே ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும் ஐக்கிய நாடுகள் சபை ஒன்றிலே ஒரு நாட்டுக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்வதும் அதை நிறைவேற்றுவதும் இலகுவான காரியம் இல்லை. இது ராஜதந்திர அடிப்படையிலான விடயமாகும். ஒரு நாட்டுக்கு எதிராகவும் ஆதரவாகவும் எடுக்கப்படும் தீர்மானங்கள் என்பது தனி நபர்கள் மீதான விடயங்கள் அல்ல. இவை அந்த நாடுகளுக்கு இடையே மிக நீண்டகால அரசியல் தாக்கத்தை செலுத்தக்கூடியது. ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டுவருகின்றதென்றால் அந்த நாடும் நாட்டு மக்களும் குறித்த நாட்டின் மீது நல்லபிமானம் கொண்டிருக்கவில்லை என்று அர்த்தம். இது உலக ஒழுங்கிலே ஒரு நாட்டை ஒதுக்கி வைக்கவும் ஆதரவளிக்கவும் தம் ஆதரவை வழங்கும் செயலாகும். இதிலே பொருளாதார ரீதியான நலன்களும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டை எதிர்க்கிறதென்றால் அந்த நாடு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் குறித்த நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறதென்று அர்த்தம்.

இன்று இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் 22 நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறதென்றால் அந்த 22 நாடுகளின் ஆதரவை இலங்கை இழந்திருக்கிறதென்றே சொல்லவேண்டும் இது ராஜதந்திர ரீதியில் மிக மோசமான தோல்வியாகும். இலங்கைக்கு ஆதரவாக வெறும் 11 நாடுகளே இருக்கின்றன. அதில் ரஸ்யாவும் சீனாவும் மாத்திரமே பலமான நாடுகள் மற்றையதெல்லாம் இலங்கையை விடவும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள அல்லது இலங்கையை விடவும் பிரச்சனைகளை அதிகம் எதிர்கொண்டுள்ள நாடுகளாகும். ஆனால் இலங்கைக்கு எதிராக உள்ள நாடுகள் பிரித்தானியா பிரான்ஸ் இத்தாலி என பலம் மிக்க நாடுகளாகும் குறிப்பாக இந்த மேற்குலக நாடுகளின் ஏற்றுமதி சந்தையை இலக்குவைத்தே இலங்கையின் பொருளாதாரம் இருக்கின்றது. 

மேற்படி இலங்கைக்கு பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும் நாடுகளின் ஆதரவை இலங்கை பெற முடியாமல் போனதென்பது சிறிய விடயம் அல்ல. எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் இவ்விடயத்தில் தோல்வியடைந்துள்ளனர். ஒரு அரசாங்கம் நாடுகள் தோறும் தூதரகங்களை கொண்டிருந்தும் அந்த நாடுகளின் நன்மதிப்பை இழந்திருக்கிறது. எந்தவொரு அடிப்படை கட்டமைப்பையும் கொண்டிறாத தமிழர் தரப்போ இந்த நாடுகளின் நன்மதிப்பை பெற்று இலங்கைக்கு எதிராக அந்த நாடுகளை வாக்களிக்க வைத்திருக்கிறது. இது சிறிய விடயம் அல்ல இறைமை உள்ள ஒரு நாட்டுக்கு எதிராக அந்த நாட்டில் உள்ள ஒரு சிறிய இனக்குழுமம் சர்வதேச மட்டத்தில் வெற்றியொன்றை பெறுவது சிறிய விடயம் அல்ல. ஒரு நாட்டின் ஒட்டுமொத்த ராஜதந்திர முயற்சிகளை ஒரு சிறு இனக்குழுமம் சிதறடித்திருக்கிறது. அவர்களின் ஆன்ம பலமும் விடாமுயற்சியும் வெற்றியை கொடுத்திருக்கிறது இது மந்திரத்திலே மாங்காய் விழுத்தும் செயல் அல்ல நிராயுதபாணியாக நிற்கும் ஒருவன் முப்படை கொண்டு முற்நிற்பவனை முட்டி மோதி வீழ்த்தும் மதிநுட்ப செயல். இதை புலம் பெயர் தமிழ் சமூகமும் உள்ளூர் சமூகமும் ஒன்றிணைந்து நிறைவேற்றிக்காட்டியிருக்கிறது. 

இந்த வெற்றியை அதே சமூகத்தில் இருக்கும் ஒரு அணி கேலி செய்கிறது. தாம் மறைமுகமாக ஆதரிக்கும் அரசாங்கத்தின் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாமல் இது வெற்றி அல்ல என பிரச்சாரம் செய்கிறது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்படாதிருக்க இலங்கை அரசோடு மறைமுகமாக இணைந்து இப்படியான ஒரு தீர்மானம் எமக்கு தேவையில்லையென கூச்சல் இட்டனர். 

இலங்கை அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகிய இருவரும் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்ட நாளில் இருந்து அதனை எதிர்த்து வருகின்றனர். இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிக்கும் அனைவரையும் துரோகிகள் என்றனர். கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் நாம் ஆதரவற்றவர்களாக இருக்கிறோம் எமக்கு சார்பாக ஒருவன் பேச வந்தால் உடனே அவன் தன்னுடைய நலனுக்காக வருகிறான் துரோகி என்று அவனை ஒதுங்கிப்போக வைக்கும் நபர்கள் எமக்கு சார்பாக என்ன நன்மையை செய்துவிடப்போகின்றனர்? ஒவ்வொருவரும் ஆதரவை தேடிக்கொண்டிருக்கும் போது ஆதரவளிக்க முன்வருவோரை அகன்று போங்கள் என ஆர்ப்பாட்டம் செய்யும் அணி யாருக்கு உரியவர்கள்?  கஜேந்திரகுமாரை பொறுத்தவரை இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்த அமெரிக்கா உற்பட மேற்குலகம் துரோகிகள், இலங்கைக்கு ஆதரவளிக்காமல் நடுநிலை வகித்த இந்தியா துரோகிகள் இலங்கைக்கு ஆதரவளித்த தமிழர் நலனுக்கு எதிராக செயற்படும் சீனா பாகிஸ்தான் நண்பர்கள். 

இலங்கை என்ற நாடு இரவு பகலாக ஓடி வெறும் 11 நாடுகளைத்தான் தமக்கு ஆதரவாக பெற்றிருக்கிறது தமிழர் தரப்போ 22 நாடுகளை தமக்கான நீதி கோரலுக்கு துணைக்கு சேர்த்திருக்கிறது. இந்த தமிழர் தரப்பு பலத்தை சிதைத்து இந்த 22  நாடுகளையும் தமிழ் மக்களுக்கு எதிராக திசைதிருப்ப இலங்கை அரசாங்கத்தால் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்களே கஜேந்திரகுமார் அணியினர். நாளை அவர்கள் இந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு சொல்லப்போகும் கதைகளே அதற்கு சாட்சி.... 

நன்றி 
சு.பிரபா

No comments

Note: Only a member of this blog may post a comment.