Breaking News



தம்பி துசியின் கொலைக்கு அந்த இரண்டு சிறுவர்கள்தான் காரணமா? இல்லை. ஒரு சமூதாயமாக எங்களை சுற்றி நடைபெறுகின்ற அநீதிகளை தட்டிக்கேட்க வக்கற்று சுயநலத்தோடு வாழுகின்ற நாங்கள் அனைவரும்தான் காரணமாகும்...

ஓருகாலத்தில் எப்படி இருந்தது எங்கள் ஊர்? மிகச்சிறந்த கல்வியாளர்களையும் விளையாட்டு வீரர்களையும் உருவாக்கி சமூகத்துக்கு சிறந்த பிரஜைகளை உருவாக்கி கொடுத்த மண்ணல்லவா வட்டக்கச்சி. எமது கிராமத்துக்கு ஏனிந்த அவலம்? கஞ்சா ஊர் என்றும் கசிப்பு கிராமம் எற்றும் கண்டவனும் சொல்ல மறுக்க முடியாமல் கூனி குறுகி நிற்கின்றோமே இதற்கு என்ன காரணம்.?

நேற்றோ மூன்று பிள்ளைகள் கோவில் கிணற்றில் மூழ்கிப்போக இன்று இரண்டு பிள்ளைகள் தம் இளம் தந்தையை இழந்து எதிர்காலம் அறியாது தவித்து நிற்கின்றது.. இது நாங்கள் விழித்துக் கொள்ளவேண்டிய தருணம். தம்பி துசியின் மரணம் எமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணியாக அமையவேண்டும். இதை இப்படியே விட்டுவிட்டால் இனி எப்பொழுது வேண்டுமானாலும் யார்வீட்டிலும் அடுத்த கொலை நிகழலாம். 

சட்டவிரோத செயற்பாடுகளையும் பொதுவெளி பிரச்சனைகளையும் தட்டிக்கேட்கும் சுபாவம் கொண்டவன் தம்பி துசி.  அவனுக்கு நிகழ்ந்த இந்த கொடூர மரணம் என்பது எனைய சமூக செயற்பாட்டாளர்களையும் மெளனிக்க வைக்கும் முயற்சியாகவே பார்க்கவேண்டும். 

ஆபத்தான கட்டத்தில் வந்துநிற்கின்றது எமது அழகிய ஊர். இப்பொழுதுகூட நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் யாரும் கேட்க நாதியற்ற நரக பூமியாக மாறிப்போகும். சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்த இளைஞன் தான் ஒற்றை மனிதனாக தன் தாய் தங்கைகளோடு தன் குடும்பத்தையும் தாங்கி நின்றவன்.  இன்று அந்த குடும்பத்தின் நிர்க்கதிக்கு ஒரு சமூகமாக நாம் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டியவர்களே. அதை விடுத்து வெறும் இரங்கல் தெரிவிப்பதோடும் துயர்வு பகிர்வதோடும் கடந்து சென்றுவிட போகின்றோமா??? குறிப்பாக வட்டக்கச்சியை சேர்ந்த புலம்பெயர் உறவுகளாவது முன்வந்து அந்த பச்சிளம் பிள்ளைகளிள் எதிர்கால வாழ்வுக்காக உங்களால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும். ஒரு பொறுப்புள்ள சமூகமாக அதனை செய்வீர்களா???

இந்த பிஞ்சுகளின் முகங்களை மறுபடியும் ஒருமுறை உற்று பாருங்கள். கண்முடி உங்கள் பிள்ளைகளை அந்த பிள்ளைகளின் இடத்தில் வைத்து உருவகித்து பாருங்கள். கல்லான மனமும் கரைந்து கண்ணீர் ஊற்றெடுக்கும்.

No comments

Note: Only a member of this blog may post a comment.