கிளிநொச்சியில் உண்ணாவிரதமிருக்கும் தாய்மாரும், சிறாரும் அரசுக்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயல்வார்களாயின் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.
விடுதலைப் புலிகளிற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி, அவர்களின் தாய்மார், மனைவிமார், குழந்தைகள் என 23 பேர் கிளிநொச்சியில் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர்-
கிளிநொச்சியில் போராட்டம் நடத்துபவர்கள், விடுவிக்கப்பட வேண்டுமென கோரப்படுபவர்கள் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள். புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயன்ற குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டிருந்தது.
சர்வதேச ரீதியிலுள்ள புலம்பெயர் குழுவினர் காரணமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டதாக காண்பிக்க இத்தகைய ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. காரணமின்றி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது” என்றும் தெரிவித்துள்ளார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.