Breaking News



தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தாமே நீக்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. சிவில் சமூகம் தலைமை வகித்த இந்தப் பேரணியில், அம்பாறையிலிருந்து புறப்பட்ட 300 பேர் வரையானவர்கள் பொலிகண்டியை வந்தடைந்தனர். ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்கள் கூடி, பேரணியுடன் இணைவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எம்.ஏ.சுமந்திரனும் இந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தார்.

அவரது விசேட அதிரடிப்படை பாதுகாவலர்கள் பேரணியின் இறுதியில் வந்து கொண்டிருந்தனர். அவர்களும் பொத்துவில் தொடக்கம் திருகோணமலை வரை பயணம் செய்தனர். திருகோணமலையில் பேரணியிலிருந்து விலகிய சுமந்திரன், இறுதி நாளில் கிளிநொச்சியில் மீண்டும் இணைந்தார். கிளிநொச்சியிலிருந்து பொலிகண்டி வரை பேரணியின் இறுதியில் விசேட அதிரடிப்படை பாதுகாவலர்கள் வந்திருந்தனர்.

பேரணி முடிந்த அன்று இரவே சுமந்திரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது என்றபடியால் அவருக்கு எஸ்.டி.எப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. உண்மையில் சுமந்திரனுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் இருக்குமானால் அவரால் இவ்வாறான பேரணியில் கலந்துகொண்டிருக்க முடியாது. எனவே, அவருக்கு எஸ்.டி.எப். பாதுகாப்பு எதற்கு?

இருப்பினும் சுமந்திரனுக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.