2021 இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2021.02.25) அலரி மாளிகையில் வைத்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 65 விகாரைகள் மற்றும் 35 அறநெறி பாடசாலைகளை ஒன்றிணைத்து இம்முறை அரச வெசாக் விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களுக்கு அறிவித்துள்ளார்.
பாரம்பரிய வெசாக் விழாவிலிருந்து மாறுபட்டதாக, பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை இம்முறை அரச வெசாக் விழாவின் விசேட அம்சமாகும்.
அச்செயற்பாட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும்.
நாகதீப விகாராதிபதி கலாநிதி தர்மகீர்த்தி ஸ்ரீ நவதகல பதுமகித்தி தேரர், கிழக்கு தம்னகடுவ மாகாணங்களின் பிரதான சங்கநாயக்கர் முங்ஹேனே மெத்தாராம தேரர், அகில இலங்கை சாசனாரக்ஷக பலமண்டலயவின் பிரதான பதிவாளர் கோனதுவே குணானந்த தேரர், மல்வத்து பீடத்தின் மாத்தறை, ஹம்பாந்தோட்டை பிரதான சங்கநாயக்கர் அக்ரஹெரே கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் மேற்படி கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
மஹாசங்கத்தினருடன் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.