Breaking News


பருத்தித்துறையில் வீடொன்றுக்குள் விசேட அதிரடிப்படையினர் நுழைந்ததை தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து 5 பேர் பருத்தித்துறை பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 3, 6, 19 வயதுடையவர்களும் உள்ளடங்குவதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

பருத்தித்துறை, தும்பளை, எல்லை வீதியிலுள்ள வீடொன்றில் இன்று காலை 6.45 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் நுழைந்ததை தொடர்ந்து இரு தரப்பிற்குமிடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது, விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீட்டிலிருந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிரடிப்படை சிப்பாயொருவர் வெட்டுக்காயத்திற்கு இலக்கானதாக கூறப்படுகிறது.

அந்த வீட்டில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறியே அதிரடிப்படையினர் திடீரென வீடு புகுந்துள்ளனர்.

இது தொடர்பில் அந்த குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

காலை 6.45 மணி போல திடீரென வீட்டின் பின் பக்கத்தினால் சிவில் உடையில் சிலர் திடீரென புகுந்தனர். எதிர்ப்பட்டவர்களை மிரட்டி நாதன் எங்கே என விசாரித்தனர். முகத்தை மறைத்தபடி ஒருவரை அழைத்து வந்தனர். நாதன் இவரா என வினவ, அவர் நாதனை அடையாளம் காட்டினார்.

நாதனிற்கு அவர்கள் கைவிலங்கிட முயன்றனர். அவர்கள் சிவில் உடையில் இருந்ததால், யார் என்பது எமக்கு தெரியாது. அதனால் வீட்டிலிருந்தவர்கள் அவர்களுடன் முரண்பட, மோதலானது.

மீன் வெட்டும் கத்தி போன்றவற்றையே பயன்படுத்தினர். யாரும் வாள் பாவிக்கவில்லை. வீட்டில் வாளும் இல்லை.

சிவில் உடையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வீட்டின் முன்பக்கம் நின்ற ஹைஏஸ் வாகனத்தில் இருந்து சீருடையை எடுத்து அணிந்து, துப்பாக்கியுடன் வந்தனர்.

பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியதும், நாதன் பயத்தில் ஓடி விட்டார்.

அதிரடிப்படையினர் தள்ளிவிழுத்தியதில் இருதய நோயாளியொருவர் பாதிக்கப்பட்டார். அவரது கணவரும் காயமடைந்தார். இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், இந்த சம்பவம் பற்றி எமது குடும்பத்தினர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டனர்.

சிறிது நேரத்தில் பருத்தித்துறை பொலிசார் எமது வீட்டிற்கு வந்து, யார் முறைப்பாடு செய்தது என விசாரித்து, முறைப்பாடு செய்த பிரான்சில் மெரிசன் (41) என்பவரையும், அவரது மகனான மெடில் ராஜ் (19) என்பவரையும் கைது செய்தனர்.

அதிரடிப்படையினர் வீட்டில் நின்ற போது நடந்த மோதலை கைபேசியில் வீடியோ எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் வீட்டிலிருந்த கிருஷ்ணன் சுபிதா (27) என்பவரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அவரது 6,3 வயதான பிள்ளைகளும் பொலிஸ் நிலையத்திலேயே உள்ளனர் என தெரிவித்தனர்

No comments

Note: Only a member of this blog may post a comment.