Breaking Newsஇலங்கை ஆட்சியாளர்கள் செய்த பாவத்திற்கு நிச்சயம் எதிர்வரும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.இம்முறை கூட்டத்தொடரில் ஜனநாயகத்தை வலியுறுத்தும் சக்திகளின் கை ஓங்கியுள்ள நிலையில் கடுமையான தீர்மானங்களை இலங்கை சந்திக்க நேரிடலாம் என்று தெரிவித்துள்ள பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ண,எந்த பௌத்த- சிங்கள மக்களின் ஆதரவை தளமாகக் கொண்டு இன்றைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததோ அந்த மக்களே இவர்களை விரட்டும் நிலை விரைவில் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி- கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான சர்ச்சையையடுத்து ,இந்தியாவுடனான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறதே…

பதில்- இதை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. இதை எதிர்ப்பவர்கள் குறுகிய வட்டத்துக்குள் நின்று இனவாத போக்கிலேயே விடயங்களை அணுகுகின்றனர். இது தவறான போக்காகும். இதனால் ஏற்படப் போகும் அபாயத்தை இவர்கள் விரைவில் உணர்வார்கள். இலங்கை தனது நாட்டுக்குள் அபிவிருத்தி செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக சர்வதேச சக்திகளின் வரவை எதிர்பார்க்கின்றது. எனவே எத்தகைய சக்திகள் இதில் பங்கேற்க முடியும் என்பதற்கு அளவுகோல்கள் உள்ளன. உலகில் ஜனநாயகத்தை மனித உரிமை மேம்பாட்டை மதிப்பவர்கள் ஒருபக்கமாகவும் ஜனநாயகத்தை சர்வாதிகாரத்தின் மூலம் காலடியில் மிதித்துக் கொண்டு மனித உரிமை மீறல்களை இருண்ட திரைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு வெளி உலகுடன் நட்புக் கரம் நீட்ட முனைகின்ற பகுதியினர் என இரண்டு பிரிவினர் உள்ளனர். அமெரிக்கா ,இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஜனநாயகத்தை மனித உரிமையை மதிப்பவர்கள் உள்ள நிலையில் சீனதேசம் இதற்கு நேர்மாறாக உலகின் பிற்போக்குத் தனங்களை தனக்கு சாதகமாக்கி தனது வர்த்தக நலன்களை மேம்படுத்த முனைகிறது. எனவே கிழக்கு முனையம் இந்த அளவுகோலின் மூலம் அணுகப்படவில்லை. தெற்கு முனையம் 85 விகிதம் சீனாவிடம் உள்ளது . அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் உள்ளது. இதனை தவிர நாட்டின் பல பகுதிகளில் சீன தேசத்தின் பிரசன்னம் காணப்படுகிறது.இது தொடர்பாக எந்தவித விமர்சனங்களையும் முன் வைக்காத எதிர்ப்பாளர்கள் கிழக்கு முனையத்தை இந்தியாக்கு வழங்கப்படுவதை எதிர்ப்பது நகைப்புக்குரியதாகும்.

கேள்வி – ஐக்கிய நாடுகள் சபையின் 46வது மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடர் இலங்கைக்கு எவ்வாறான சவாலானதாக இருக்கும் என கருதுகிறீர்கள்?

செய்த பாவங்களுக்கு பதில் வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இலங்கை ஆட்சியாளர்கள் செய்த பாவத்திற்கு நிச்சயம் முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை கூட்டத்தொடரில் ஏற்படும் . இம்முறை கூட்டத்தொடரில் ஜனநாயகத்தை வலியுறுத்தும் சக்திகளின் கை ஓங்கியுள்ள நிலையில் குறிப்பாக அமெரிக்க மக்களின் எழுச்சி இந்த கூட்டத்தொடரில் அதிக செல்வாக்குச் செலுத்தும். எனவே இக்கூட்டத்தொடரில் கடுமையான தீர்மானங்களை இலங்கை சந்திக்க நேரிடலாம்.

கேள்வி- சிறுபான்மையினரின் உரிமைகள்,சுதந்திரத்தை கண்டுகொள்ளாத அரசாங்கத்தின் போக்கை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்- இன்றைய ஆட்சியாளர்கள் ஊழலுக்கு எதிராகவும் வளங்களை பாதுகாப்பதற்கும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம் என கூறியே பதவிக்கு வந்தனர். இதற்காக சிங்கள பௌத்த மக்களின் ஆதரவையே வேண்டி நின்றனர். அந்த ஆதரவும் கிடைத்தது. நடந்ததென்ன சீனி இறக்குமதி மூலம் பெறப்பட்ட ஊழல் நிதியின் அளவு இலங்கை மக்களுக்கள் அனைவருக்கும் கொரனோ எதிரான தடுப்பு ஊசியை வாங்க போதுமானது எனக் கூறப்படுகிறது. நாட்டின் வளங்கள் தினம் தினம் தாரை வார்க்கும் நிலை தொடர்கிறது. சுற்றுபுறச்சூழல் வரலாற்றில் என்றுமில்லாத அளவில் சூறையாடப்படுகிறது. இயற்கை அழிப்பை வேடுவ தலைவரே கண்டிக்கும் நிலைமையில் விடயங்கள் கைமீறி சென்றுள்ளன. நீதித்துறை நிர்வாகத்துறை சகலதும் தன்னியல்பை இழந்து அரசியல் மயமாகியுள்ளது. சர்வதேசத்தையும் இவர்கள் பகைத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் நன்மைகளைப் பெற நாட்டின் பெரும்பகுதி மக்கள் அல்லல் படும் நிலையை ஏற்பட்டுள்ளது. எந்த பௌத்த சிங்கள மக்களின் ஆதரவை தளமாகக் கொண்டு ஆட்சிக்கு வந்தார்களோ அந்த மக்களே இவர்களை விரட்டும் நிலை விரைவில் ஏற்படும்.

கேள்வி- பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையான போராட்டம் பற்றிய உங்கள் பார்வை…

பதில்-. 1974 ஆம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாட்டு சூழலை இந்தப் போராட்டம் ஞாபகப்படுத்துகிறது. கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்தேசியம் பலவீனப்பட்டு உள்ளது என வாதிட்டவர்களுக்கு இப்போராட்டம் உரிய பதிலை வழங்கியுள்ளது. இலங்கைத் தீவில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்கள் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்கும் நிலை மேலோங்கியுள்ளது . இது இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஆடை விலகிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தேசிய இனங்கள் மீதான ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை செயற்பாட்டை சர்வதேசம் நன்றாகவே விளங்கிக் கொள்ள இந்த போராட்டம் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. யுத்தத்தின் பின்னர் 12 வருடங்களாக நிராகரிக்கப்பட்டு வரும் நல்லிணக்கம் பொறுப்புக் கூறல் அரசியல் தீர்வு இவையாவும் இருட்டுக்குள் தள்ளப்பட்ட நிலையில்இ தமிழ் மக்களின் இந்த உறுதியான போராட்டம் தெற்கு மக்களையும் நிச்சயம் சிந்திக்கச் செய்யும்.

கேள்வி- எதிரணியினர் செயற்பாடுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில் – பேரினவாதத்துக்கு பயந்து தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் போக்கை இன்று காண முடிகிறது. ஜனநாயகத்தை பலப்படுத்த அனைவரும் ஒன்றுபட வேண்டும். இந்த முன்னணிக்குள் தேசிய இனங்களின் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு உரிய சுயாட்சி அங்கீகரிக்கப்பட வேண்டும். தேசிய இனங்களின் உரிமை தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் இலங்கையில் அரசியல் பயணத்தை தொடர முடியாது. தமிழ் தலைமைகளை பொறுத்தவரையில் இலங்கையில் ஜனநாயகம் மேல் வர அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இடதுசாரிகள் என்ற குறுகிய வட்டத்துக்குள் இருந்து கொண்டு இன்றைய பௌத்த பேரினவாத ஆட்சியை எதிர்கொள்ள முடியாது. ஜனநாயகத்தை மேம்படுத்த முயலும் சகல முற்போக்கு எண்ணம் கொண்டவர்களையும் இதில் இணைக்க வேண்டும். இதன் மூலமே இந்தியா உள்ளிட்ட சர்வதேச சக்திகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும்.

No comments

Note: Only a member of this blog may post a comment.