Breaking News



பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியின் இறுதியில் வாசிக்கப்பட்ட பிரகடனம் மக்களை ஏமாற்றும் செயல். பேரணிக்கு முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த 10 விடயங்களிற்காக மட்டுமே பேரணி நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் இதை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது ஒரு கவன ஈர்ப்பு பேரணி, வந்து கலந்து கொள்ளுங்கள் என சிவில் அமைப்புக்கள் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அழைப்பு விடுக்கும் போதே, எதற்காக இந்த பேரணி என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

சிவில் சமூகம் விடுத்த அறிவித்தலில் எதற்காக பேரணி செல்கிறோம் என குறிப்பிட்டு, தயவுசெய்து வந்து கலந்து கொள்ளுங்கள் என அழைத்திருக்கிறார்கள். அந்த விடயங்களை ஆங்கிலத்தில் 10 விடயங்களாக நிரல்ப்படுத்தி பல நிறுவனங்களுக்கு, அரசாங்க பிரதிநிதிகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள். சிவில் சமூகத்தின் சிவயோகநாதன், வேலன் சுவாமிகளின் பெயர்களும், தொலைபேசி இலக்கங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கின்ற பொழுது, இது எதற்காக செய்யப்படுகிறது என அறிவித்து, மக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைத்து, அத்தனை பேரையும் திரட்டி, ஐந்து நாட்களாக நடந்து, முடிகிற தருவாயில் வேறு விடயங்களை பிரகடனமாக அறிவிப்பது என்பது அந்த மக்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ளும் ஒரு விடயமல்ல.

அந்த பிரகடனத்தில் படிக்கப்பட்டவை நல்ல விடயங்களாக இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம். அதைப் பற்றி நான் பேசவில்லை. தமிழ் மக்களிற்கு தேவையானவையாக இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம். அதைப்பற்றி பேசவில்லை.

ஆனால், இந்த பத்து விடயங்களிற்காக வந்து சேருங்கள் என அறிவித்து விட்டு, மக்களும் வந்து சேர்ந்து நடந்து முடிகிற தறுவாயில், வேறு விடயங்களை இதுதான் பிரகடனம் என வாசிப்பது மக்களை ஏமாற்றும் செயல்.

நான் துரோகம், காட்டிக் கொடுப்பு என்ற சொற்களை ஒரு நாளும் பாவிப்பதில்லை. மக்களை ஏமாற்றும் செயல் என்றுதான் சொல்கிறேன்.

காட்டிக்கொடுப்பு, துரோகம் என்ற சொற்கள் தமிழ் அரசியலில் கனதி நிறைந்த சொற்கள். அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. யாரையாவது தீர்த்துக்கட்ட வேண்டுமாக இருந்தால் முதலில் அவருக்கு துரோகிப்பட்டம் கொடுப்பது. அது இப்பொழுது கொஞ்ச காலமாக இல்லாமலிருந்தது. எனக்கும் இந்த பெயரை சூடியிருந்தார்கள்.

எனது விசேட பாதுகாப்பு நீக்கப்படும் அதே தறுவாயில் காட்டிக்கொடுப்பு, துரோகம் என்ற சொற்கள் வேகப்படுத்தப்படுவது ஒன்றோடொன்று தொடர்பற்றவையாக நான் கருதவில்லை.

சரத் வீரசேகரவிற்கும், இந்த சொற்களை பாவிப்பவர்களிற்குமிடையில் தொடர்பிருப்பதாகவே நான் சந்தேகிக்கிறேன் என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.