Breaking Newsதமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது நேற்றைய நாடாளுமன்ற உரையின் போது, எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி அவர்களுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (10) பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியி் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், பிரசார செயலாளரும் சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

அதில் கஜேந்திரகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

கடந்த வாரம் ஐந்து நாட்களாக பொத்துவிலில் தொடங்கிய பேரணி ஏறத்தாள ஒரு லட்சம் மக்களது பங்களிப்புடன் நகர்ந்து இறுதி நிகழ்வில் ஏறத்தாழ அறுபதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அந்த எழுச்சிப் போராட்டம் நடைபெற்றிருந்தது.

அந்த நடைபயணத்தினுடைய அடிப்படைக் கோட்பாடுகளாக தமிழ் கட்சிகளும் வடக்கு கிழக்கு சிவில் சமூகமும் கடந்த மாதம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கும், மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கும், மனித உரமைகள் பேரவையினுடைய உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பப்பிய அந்தக் கடிதத்தில் கூறப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியே இந்த நடைபயணம் நடைபெற்றது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்கள், வெறுமனே ஒரு சில அரசியற்கட்சிகளதோ, அல்லது ஒரு சில அமைப்புக்களதோ கோட்பாடுகள் அல்ல. மாறாக ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் ஏகோபித்த கோரிக்கையாக இருக்கின்றது என்பதை நிரூபிக்கும் வகையில் தான் இந்த நடைபயணம் நடத்தி முடிக்கப்பட்டது.

அந்த மக்கள் எழுச்சி மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினதும் பார்வையை ஈக்கக் கூடிய அளவுக்கும், மியான்மாரில் நடைபெறும் போராட்டங்கள் போன்றும், இந்தியாவில் நடைபெறுகின்ற போராட்டங்கள் போன்றும் மிகவும் காட்டமான செய்தியை சர்வதேச சமூகத்துக்கு கொடுக்கக்கூடியாதாகவும், அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் இணைந்து அனுப்பிய கடிதத்துக்கு வலுச் சேர்க்கக் கூடியதாகவும் அமைந்தது.

இந்த போராட்டத்தின் உண்மையான நோக்கம் இவையாக இருக்கும்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்றைய தினம் 09-02-2021 செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் மேற்படி போராட்டம் சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கி 10 கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டதாக உண்மைக்குப் புறம்பாக கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

அக் கோரிக்கைகளை அரசிடம் வலுயுறுத்துவதுதான் இந்த போராட்டத்தின் நோக்கம் என்பதாகவும் கூறியதுடன், அந்தப் போராட்டத்தின் மிக முக்கிய அடிப்படைக் கோரிக்கைகளாக, கோட்பாடுகளாக இருக்கக் கூடிய வடக்கு கிழக்கு தமிழ் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுடைய தாயகம் என்ற கோட்பாட்டையோ, தமிழர்களது தனித்துவமான இறைமைகொண்ட தேசம் என்ற கோட்பாட்டையோ
தமிழர்களுக்கு தமிழ்த் தேசத்துக்குரிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்ற கோட்பாட்டையோ, தமிழின அழிப்புக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஊடாகவோ அல்லது வேறு பொருத்தமான சர்வதேச குற்றவியல் நீதி விசாரணையூடாகவோ நீதி கிடைக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையோ வலியுறுத்தாமல், ஒட்டுமொத்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில், பலவீனப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

நாங்கள் சுமந்திரனது கருத்தை சாதாரண தவறாக கருதமுடியாது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதங்கள் எழுதுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சுமந்திரன் அவர்களும் அவரது கட்சியும் பங்குபற்றியிருந்தார்கள். இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்த பொழுதும் அவரது கட்சிக்கு இந்த போராட்டத்தின் உண்மையான நோக்கங்கள் சொல்லப்பட்டிருந்த நிலையிலும், இந்த போராட்டத்தின் மிகமுக்கியமான அடிப்படையான நான்கு கோரிக்கைகளையும் வலியுறுத்தாமல், நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக விசாரணையை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பதை முற்றுமுழுதாக மூடி மறைத்து, சிறிலங்கா அரசாங்கத்தை நம்பி சிறிலாங்கா அரசாங்கத்துக்குத்தான் அந்த பத்து கோட்பாடுகளையும் முன்வைத்தாக சுமந்திரன் கூறியிருப்பது, அந்தப் போராட்டத்தின்போது எத்தனையோ ஆபத்துக்கள், எதிர்ப்புகள், சவால்களை கடந்து பயணித்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களை கொச்சைப்படுத்தி போராட்டத்தை வலிமையை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

இது போராட்டத்தில் கலந்து கொண்ட, ஆதரித்த, போராட்டத்தின் மீது நம்பிக்கைவைத்த மக்களுக்கு செய்த மாபெரும் துரோகமாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம்.

சுமந்திரனது கருத்தை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எமது அமைப்பு ஒற்றுமைக்கு எதிரான அமைப்பு அல்ல. ஆனால், இத்தகைய இரட்டை வேடங்கள் போடுகின்ற முயற்சிகளுக்கும் மக்களை ஏமாற்றுகின்ற முயற்சிகளுக்கும் நாம் துணைபோக முடியாது. இதனையே நாம் எமது மக்களுக்கு கடந்த 12 வருடங்களாக கூறிவருகின்றோம். தமிழ் மக்களுக்கு ஒரு கருத்தையும், சிங்கள மக்களுக்கு இன்னொரு கருத்தையும் சர்வதேசத்துக்கு வேறொரு கருத்தையும் தெரிவிக்கும் சுமந்திரன் போன்ற தரப்புகளோடு எம்மால் பயணிக்க முடியாது என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றோம்.

ஆயினும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சில விட்டுக்கொடுப்புக்களை செய்து, நாங்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில், எம்மை முற்றிலும் நம்பிக்கை இழக்கச் செய்கின்ற வகையில் சுமந்திரனது கருத்து அமைந்திருந்தது. அதுவும் சிறிலங்கா பாராளுமன்றத்தில் அவர் இந்த கருத்தைப் பதிவு செய்திருக்கின்றார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதற்கு நாம் அனுமதிக்க முடியாது.

சுமந்திரன் இந்தக் கருத்தைக் கூறியதற்கு அமைவாக, இந்தியாவின் இந்து பத்திரிகை போன்ற பல சர்வதேச ஊடகங்கள் சுமந்திரனது உண்மைக்குப் புறம்பான கருத்துக்கு மட்டுமே வெறுமனே முக்கியத்துவம் கொடுத்து, இந்தப் போராட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை மூடி மறைத்து, வெறுமனே அந்த 10 உதிரிக் கோட்பாடுகளை மட்டுமே வலியுறுத்தியதாக அந்தந்த நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும், மக்களுக்கு செய்தி சொல்லப்படும் வகையில் நிலைமை இருக்கின்றதென்றால், இந்தப் போராட்டத்தின் நோக்கத்தையே மறுதலித்து இந்தப் போராட்டத்தின் வெற்றியை சிதைக்கும் முயற்சியே இதுவாகும் என்பதை தெளிவாக பதிவு செய்ய விரும்புகின்றோம்.

சுமந்திரன் அவர்கள் பல தடவைகள் இந்த 10 கோட்பாடுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டதாகவும், மேலதிகமாக எந்த கோட்பாடுகளும் முன்வைக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்றத்தில் இந்த 10 உதிரிக் கோட்பாடுகளையும் சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாகவே, தமது கட்சி இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அந்த 10 கோட்பாடுகளும் வடக்கு கிழக்கு சிவில் சமூக சம்மேளத்தினுடைய கோட்பாடுகள் எனவும் அவற்றை அவர்கள் தம்மிடம் வந்து தெளிவுபடுத்திய நிலையிலேயே, தான் இதில் கலந்து கொண்டிருந்ததாகவும் சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். அவ்வாறான ஒரு கடிதத்தை பாராளுமன்றத்தில் காட்டியும் பேசியிருந்தார்.

எமது கட்சி ஆரம்பத்திலிருந்து முடிவுவரை இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கின்றோம். ஏற்பாட்டாளர்களுடன் பேசியும் இருக்கின்றோம். பல விடயங்களில் நாம் எமது ஆலோசனைகளையும் சொல்லியும் இருக்கின்றோம். ஆனால் எந்தவொரு இடத்திலும் இந்த 10 கோட்பாடுகளோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட விடயமாக இந்தப் போராட்டம் இருக்கும் என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

அப்படியாயின் – ஒன்றில் வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூக சம்மேளனம் எமக்கு உண்மைகளை கூறவில்லை. அல்லது சுமந்திரன் அப்பட்டமான பொய்களைக் கூறி இந்த முயற்சிக்கு பின்னாலிருந்து இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருந்த, வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூக சம்மேளனத்தினுடைய நம்பகத்தன்மையை அழிக்கும் நோக்கத்தோடு சுமந்திரன் செயற்படுகின்றார்.

இந்த விடயத்தை வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூக சம்மேளனம் தெளிவுபடுத்தியே ஆக வேண்டும். எம்மைப் பொறுத்த வரையில் சுமந்திரன் போன்ற நபர்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தங்களுடைய செயற்பாடுகளில் தொடர்ந்தும் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்போவதாக இருந்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவ்வாறான செயற்பாடுகளில் கலந்துகொள்ள முடியாத நிலையே ஏற்படும்.

எத்தனையோ ஆபத்துக்கள் இருக்கக்கூடிய நிலையிலும்இ நாமும் எமது ஆதரவாளர்களையும், தமிழ் மக்களையும், இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைத்திருந்தோம். சுமந்திரன் போன்றவர்கள் கொச்சைப்படுத்தும் விதமாக இந்தக் கோரிக்கைகளை திசைதிருப்பி, சர்வதேச அழுத்தங்கள் வராமல் தடுப்பதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்ற கோணத்தில் எடுக்கும் முயற்சிகளுக்கு நாமும் துணைபோக முடியாது. நாங்கள் மக்களது ஆதரவை நாடி நிற்கும் அரசியல் இயக்கம் என்கின்ற வகையிலே எங்களது நம்பகத் தன்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஆகவே, இந்த விடயத்தில் வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூக சம்மேளனம் ஒரு விசாரணை நடத்தி நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிலை எமக்கு தெளிவுபடுத்தியே ஆகவேண்டும்.

இது தமிழ் மக்களது வாழ்வு சம்பந்தப்பட்ட விடயம். ஏத்தனையோ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே தான் இந்த போராட்டங்களில் தமிழ் மக்கள் கலந்து கொள்கிறார்கள். மக்களது நம்பிக்கையை நாம் துஸ்பிரயோகம் செய்து மக்களை நடுத்தெருவில் விடுவதை நாம் அனுமதிக்கப்போவதில்லை. வேலன் சுவாமிகள், அருட்தந்தை லியோ போன்றவர்களிடம் நேரடியாகவே இந்தக்கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பாக விசாரணையை நடத்தி, இந்த 10 கோட்பாடுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக சுமந்திரன் காட்டிய கடிதம் என்ன என்பதையும் வெளிப்படுத்தி, அப்படி ஒன்று இருக்கிறதா? அல்லது சுமந்திரன் பொய் சொல்கின்றாரா? ஏன்பதையும் வெளிப்படுத்தி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என கோரி நிற்கின்றோம் என்றார்

No comments

Note: Only a member of this blog may post a comment.