Breaking Newsபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் சாமியாரை முன்னிறுத்தி ரிமோட் கொன்ரோலில் போராட்டத்தை நடத்த வெளிநாட்டவர்கள் முயன்றதாலேயே குழப்பம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பலரது பங்களிப்பில் முடிந்த போராட்டத்தை சுமந்திரனும், சாணக்கியனும் முடித்த விதம் பிழையானது என்றும் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் அரசின் அடக்கு முறைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியின் அறிவிப்பின் பின்னர்தான் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் கட்சிகள் பல தெரிந்து கொண்டனர். எமக்கு அறிவிக்கப்படவில்லை. அவசர அவசரமாக தான் திட்டமிடப்பட்டது.

பெப்ரவரி 1ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் பலர் கலந்து கொண்டோம். சிவில் சமூகம், மத தலைவர்கள் என சிலர்தான் கலந்து கொண்டார்கள். பொலிகண்டியில் முடிப்பதென தீர்மானிக்கப்பட்டாலும், ஏற்பாட்டாளர்களிற்கு பொலிகண்டி எங்கேயிருக்கிறதென தெரிந்திருக்கவில்லை.

பருத்தித்துறைக்கும் வல்வெட்டித்துறைக்கு நடுவில்தான் பொலிகண்டி இருக்கிறது என்பது அவர்களிற்கு தெரிந்திருக்கவில்லை. அதை தெரிந்திருக்காவிட்டாலும் பரவாயில்லை. அதில் நான் எனது விளக்கத்தை அளித்தேன்.

இந்த சர்ச்சைக்குரிய இடத்தை தேர்ந்தெடுத்து சிவாஜிலிங்கம் தான் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பகிரங்கமாக கூறி இருந்ததாக நான் அறிந்தேன். அவர் அப்படிக் கூறி எடுக்காவிட்டால் கூட பரவாயில்லை நடந்த உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விளக்கமளிக்கிறேன்.

பொலிகண்டி ஒரு நீளமான கரையோரத்தை ஒட்டிய பகுதி. மிகவும் குறுகிய இடம். பொலிகண்டி சந்திக்கு பக்கத்தில் கந்தவனம் முருகன் கோயில் அமைந்திருக்கிறது. ஆனால் அது தனியார் கோயில். ஆகவே அங்கே கொண்டுபோய் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

1985 ஆம் ஆண்டு பொலிகண்டி மேற்கில் இராணுவத்தினால் ஒரு மிகப்பெரிய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அன்று அதிகாலை தான் ஒரு இராணுவ முகாமுக்கு எதிராக முதலாவது தாக்குதலை ரெலோ இயக்கம் மேற்கொண்டது. கொக்காவில் இராணுவ முகாம் தாக்கப்பட்டது. இதையடுத்து, புலிகள், ரெலோவினரை மடக்க பொலிகண்டி, வல்வெட்டித்துறையில் அதிகாலையிலேயே இராணுவத்தினர் ஒரு பிரம்மாண்டமான சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். இதன் போது விடுதலைப் புலிகளின் கிரனைட் தாக்குதலில் ஒரு இராணுவ மேஜர் கொல்லப்பட்டார். அவரது உடல் வல்வெட்டித்துறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து வெறியாட்டம் ஆரம்பமானது. வீடுகளில் இருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லோரும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டார்கள்.

பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டு தாய்மார் மனைவிமார் கதறகதற அழைத்துச் செல்லப்பட்டார். அந்த முற்றுகையில் மயிரிழையில் தப்பி சென்றவுடன் அடிப்படையில் அந்த காட்சிகளை நான் கண்டு கொண்டேன். வாய் பேச முடியாதவர்கள் உட்பட 55 இளைஞர்களை கொண்டுவந்து பொலிகண்டி செம்மீன் படிப்பகத்தில் வைத்து இந்தக் கட்டடத்தை இராணுவத்தினர் குண்டு வைத்து தகர்த்தனர்.

மாலை 6 மணிக்கு பின்னர்தான் இராணுவத்தினர் விலகி சென்றனர். அந்த பகுதியில் கை, கால்கள், தலைகள் என உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன.

காயமடைந்தவர்களை மீட்டு இருந்த ஓரிரண்டு வாகனங்களில் ஏற்றி மாட்டு வண்டிகளில் ஏற்றி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். அப்போது கடற்படையும் தாக்கினார்கள்.

இனப்படுகொலை வாரம் என ஒவ்வொரு வருடமும் நாம் அஞ்சலி மேற்கொள்ளும் போது அந்தப் பகுதியிலும் நாங்கள் நினைவேந்தலை நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டும் அங்கு நினைவேந்தல் நடத்தப்பட்டது. அப்போது 5 பேர்தான் அஞ்சலி செலுத்தினோம். புலனாய்வாளர்கள், படையினர் என 40 பேர் சூழ நின்றனர்.

இதன் காரணமாகத்தான் அந்த இடத்தை நாங்கள் தெரிவு செய்தோம். அந்தக் கூட்டத்திலேயே ஏற்பாட்டாளர்களுக்கு விளக்கமாக கூறினேன்.

பொலிகண்டி கிழக்கு என்பது விடுதலைப்புலிகள், ரெலோவின் படகுகளின் கேந்திர நிலையமாக இருந்தது. தளபதி சூசையின் கேந்திர நிலையமாக அது இருந்தது.

இந்தப் பேரணியில் முக்கியமான விடயம் வெளியிலிருந்து உத்தரவுகள் வழங்கப்பட்டன. சாமியாரை முன்னால் நிறுத்திவிட்டு பின்னாலிருந்து உத்தரவுகள் வழங்கப்பட்டன. சாமியாரில் இதில் பிழை இல்லை.

இதில் அரசியல்வாதிகள் வேண்டாம் என்பது போன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் திகதி பொத்துவிலில் பேரணி ஆரம்பமான போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்லாமல் விட்டிருந்தால் அந்த பேரணி பொத்துவிலோடு முடிந்திருக்கும். அங்கு போன பாராளுமன்ற உறுப்பினர்களை குறை சொல்வது சரியல்ல. அதிலே மிக முக்கியமாக முன்னணியில் சுமந்திரனும் சாணக்கியனும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது.

அவர்களுக்குடன் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். எல்லோரும் சேர்ந்து இதை சாதித்தோம் என்பதை புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிப்பது சரியல்ல.

சில கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை பேசலாம். தீர்த்துக் கொள்ளலாம். அதை விடுத்து திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்னால் வைத்து கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக நடந்து கொண்டார்கள் என அறிவிக்கின்றார். எங்கள் வீட்டு பிரச்சினையை கூட பொதுவெளியில் பேச வேண்டிய அவசியமில்லை. அதன் எதிரொலியாக திருகோணமலையிலிருந்து பேரணியில் சுமந்திரன் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு வேறு தனிப்பட்ட காரணங்களும் இருந்திருக்கலாம்.

முன்னுக்கு நாங்கள் தான் வர வேண்டும் என சாமியாரை வேள்விக்கு கொண்டு செல்வதைப் போல வளையம் பிடித்துக்கொண்டு கொண்டு சென்றார்கள். இதெல்லாம் தேவையில்லை. அவர்கள் தலைமை தாங்கி முன் செல்லலாம் என்று எங்களுக்கும் உடன்பாடு இருந்தது. முதலில் மதத்தலைவர்கள், பின்னால் பல்கலைக்கழக மாணவர்கள், பின்னால் சிவில் சமூகத்தினர், பின்னால் அரசியல்வாதிகள் என கூறினார்கள்.

நான் ஒன்றை தெளிவாக கூறுகிறேன். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது. இது தனிப்பட்டவர்களின் வெற்றியல்ல. எல்லோரும் இணைந்த இனத்தின் வெற்றி. இதை புரிந்து கொள்ளாமல் அவர் வேண்டாம், இவர் வேண்டாம் என சொல்ல முடியாது. தனிப்பட்ட கட்சி பிரச்சனைகளை வேறு இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்.

3ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒரு ஆலோசனை கூட்டம் கூடினார்கள். ஆலோசனை கூட்டம் முடிவடையும் கட்டத்திலேயே சொன்னார்கள். நான் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. என்னுடைய கருத்தை ஏற்பாட்டு குழுவின் மாவட்ட பொறுப்பாளராக இருந்த குணாளனிடம் கூறினேன்.

பருத்தித்துறை நகரசபை உபதலைவர், உறுப்பினர் என கூறிக்கொண்டு வந்தவர்கள், தாங்கள் ஆலடியில் நடத்தப்போவதாக கூறினார்கள். நான் சொன்னேன், அவர்கள் நடத்த விரும்பினால் வல்வெட்டித்துறை நகரசபைக்குள் வந்தாலும் பொலிகண்டி மேற்கில் நீங்கள் வந்து நடத்துங்கள். அதேபோல் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருக்கு உறுப்பினர்களுக்கும் சொன்னேன், அவர்களுக்கு ஆதரவு வழங்குங்கள் என்று. இதில் என்னுடைய இடம் உன்னுடைய இடம் என்று பிரச்சினைகள் தேவையில்லை.

சிலர் நினைக்கிறார்கள் கல் வைத்த இடம் ஊறணியென. அது வல்வெட்டித்துறை என. அது தவறானது. அதுவும் பொலிகண்டிதான். பொலிகண்டி செம்மீன் படிபகத்தில்தான் கல் நாட்டப்பட்டது.

4ஆம் திகதி இரவு திருகோணமலைக்கு சென்று, 5ஆம் திகதி பேரணியில் இணைந்து கொண்டேன். அன்று வவுனியாவில் தங்கியிருந்த போது, ஏற்பாட்டாளர்களின் கூட்டம் நடந்தது. அப்போது சீலன் என்கிற சிவயோகநாதனிடம் எனது ஆலோசனைகளை சொன்னேன்.

6ஆம் திகதி வல்வெட்டித்துறை நான் தொடர்பு கொண்டபோது, 1500 சாப்பாட்டுப் பார்சல்களை தயார் செய்யும்படி கூறப்பட்டுள்ளதே தவிர வேறு ஒன்றும் சொல்லப்படவில்லை என்றார்கள். நான் சாமியாரையும் சிவயோகநாதனையும் சந்திப்பதற்கு கிளிநொச்சியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காவல் இருந்தேன்.

சாமியாரின் தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டுடிருந்தது. ஏதாவது தடை உத்தரவு வழங்கப்பட்டாலும் என்பதற்காக அவர் அப்படி செய்து வைத்திருக்கிறார் என கூறினார்கள்.சிவயோகநாதனை தொடர்பு கொண்டேன். 15 நிமிடத்தில் தொடர்பு கொள்வதாக கூறினார். ஆனால் தொடர்பு கொள்ளவில்லை.

நள்ளிரவில் என்னுடைய அலுவலகத்திற்கு சென்ற போது, இரத்தத்தில் சீனியின் அளவு 524 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், ஊசியை ஏற்றிவிட்டு இரவோடு இரவாக பல இடங்களிற்கும் பேசி எனது ஆலோசனையை சொன்னார்கள். அதிகாலை 2.40 மணிக்கு தமது பாதையை சொன்னார்கள். நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை தீருவில், நெடியகாடு என போட்டிருந்தனர்.

மதியம் 3 மணியளவிலேயே ஆலடியா, செம்மீன் படிப்பகமா என்ற பட்டிமன்றம் ஆரம்பித்ததாக தகவல் வந்ததும், நான் பலரை தொடர்பு கொண்டு மாற்று யோசனைகளை சொன்னேன்.

அடிக்கல் நாட்டுவதெல்லாம் திட்டத்தில் இருக்கவில்லை. திடீரென செய்யப்பட்ட ஏற்பாடு.

ஆனால், சுமந்திரனும், சாணக்கியனும் அதில் போராட்டத்தை முடித்து வைப்பதை போல நடந்து கொண்ட விதம் பிழையானது. பொலிகண்டி ஆலடியில் மக்கள் வற்புறுத்தியிருக்கலாம். ஆனால், தலைவர்கள் தலைமை தாங்கி சரியான வழிகாட்ட வேண்டும். ஆனால் அப்பொழுது தலைமைத்துவம் இல்லாமல் போய் விட்டது.

நான் திக்கம் சந்திக்கு போய்க்கொண்டிருந்த போது, சுமந்திரனும், சாணக்கியனும் நிகழ்ச்சியை முடித்து விட்டதாக செய்தி வந்தது.

பின்னர் சாமியார் அங்கு வந்து, பிரகடனம் வாசித்து முடித்து வைக்கப்பட்டது.

சாமியாரும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்க தலைவி லீலாவதியும் உரையாற்றிய போது அரசியல் தலைவர்கள் சரியாக நடக்கவில்லையென்றார்கள். எங்கள் எல்லோருடைய பங்களிப்பில் வந்து விட்டு, இப்படியான கருத்துக்களை கூற முடியாது என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.