Breaking News


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை கையளிக்க, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரனை (ஜனா) தேடி பொலிசார் பல இடங்களிற்கும் சென்றுள்ளனர்.

எனினும், அவரை சந்திக்க முடியாத சூழ்நிலையில், தடையுத்தரவை அவரது அலுவலகத்தில் பொலிசார் கையளித்தனர்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற பெயரில் மட்டக்களப்பு சிவில் சமூகமொன்றின் ஏற்பாட்டில் திடீர் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவு பெறப்படுமென்பது எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாணக்கியன் எம்.பி உள்ளிட்டவர்கள் அது குறித்து பகிரங்கமாக பேசி, சவால்கள் விட்டு வந்தனர்.

பொலிசாரின் தடையுத்தரவை எதிர்பார்த்திருந்ததை போலவே, இன்று பொலிசாரின் தடையுத்தரவை பெற்று காணொலியாக வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மற்றைய கூட்டமைப்பு எம்.பியான கருணாகரம் கோவிந்தன், அந்த தடையுத்தரவை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால், தற்போது வரை போராட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அவர் தக்க வைத்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிசாரின் விண்ணப்பத்தினடிப்படையில், களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவுடன், மட்டக்களப்பிலுள்ள கோவிந்தம் கருணாகரனின் இல்லத்திற்கு பொலிசார் சென்றனர்.

ஆனால், அங்கு அவர் இருக்கவில்லை.

இதையடுத்து, அவரது அலுவலகத்திற்கு பொலிசார் சென்றனர். அங்கும் எம்.பி இல்லையென உதவியாளர்களால் கூறப்பட்டது.

இதையடுத்து, தடையுத்தரவை அலுவலகத்தில் பொலிசார் கையளித்து சென்றனர்.

அந்த தடையுத்தரவில் கோவிந்தம் கருணாகரனின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.