Breaking News


இ.போ.ச வடபிராந்திய முகாமையாளராக நியமனம் வழங்கப்பட்ட குணபாலச்செல்வனின் நியமனம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளை அடுத்து சுமுகமான தீர்வு கிடைக்குமென போராட்டத்தை முன்னெடுத்த போக்குவரத்து சங்க ஊழியர்கள் மத்தியில் அமைச்சரது பிரதிநிதியாக கலந்துகொண்ட கந்தசாமி கமலேந்திரன் மற்றும் வேலும்மயிலும் குகேந்திரன் ஆகியோர் உறுதியளித்துள்ளதை அடுத்து முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டமும் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்பதாக வடபிராந்திய முகாமையாளராக அண்மையில் நியமனம் செய்யப்பட்டிருந்த குணபாலசிங்கம் இன்றையதினம் பதவியேற்கஇருந்த நிலையில் குறித்த நியமனத்தை இரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அங்கஜன் இராமநாதனது தலையீட்டையடுத்து இந்த குழப்பம் ஏற்பட்டது.

வடக்கில் 7 போக்குவரத்து சாலைகளிலும் பல தொழிற்சங்கங்கள் பலமாக உள்ள போதும், யாழ்ப்பாணத்தில் மிகச்சில உறுப்பினர்களுடன் பலவீனமாக கோட்டாபய, அங்கஜன் ஆதரவு தொழிற்சங்கம் உள்ளது.

இந்நிலையில் அவர்கள் தவிர்ந்து ஏனைய இ.போ.ச தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.

அத்துடன் குறித்த விடயத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு வடபிராந்திய போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் கொண்டுசென்று தமக்கான நியாயத்தை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் துறைசார் அமைச்சு அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான தீர்வை சுமுகமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கந்தசாமி கமலேந்திரன் தலைமையிலான அமைச்சரது பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கோண்டாவில் சாலைக்கு சென்று போராட்டத்தை முன்னெடுத்த ஊழியர்களுடன் கலந்துரையாடியதுடன் அது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் தெரியப்படுத்தியிருந்தனர்.

அத்துடன் ஊழியர்களின் நன்மை கருதி அவர்களது விருப்புகளுக்கு ஏற்றவாறான தீர்வே காலக்கிரமத்தில் பெற்றுத்தரப்படும் என்றும் அமைச்சரது பிரதிநிதிகளால் போராட்டகாரர்களுக்கு தெரியப்படுத்தியதுடன் புறக்கணிப்பை நிறைவுக்கும் கொண்டுவந்திருந்தனர்.

நாளை காலை 10 மணிக்குள் குணபாலன் பதவியேற்பார் என உறுதிமொழியளிக்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.