Breaking News


பொதுச்சுகாதார பரிசோதகர் போன்று நடித்து வீடு ஒன்றிலிருந்து பெறுமதியான தங்க நகைகளை அபகரித்துச் சென்ற யுவதியொருவர் மக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி தொண்டமானாறு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

அவருக்கு உதவிய ஆண் ஒருவரும் பிடிக்கப்பட்டு இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் மக்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தொண்டமானாறு அரசடியில் இன்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.

வீடு ஒன்றுக்குச் சென்ற யுவதி ஒருவர், அங்கிருந்தவர்களை அழைத்து தன்னை பொதுச்சுகாதார பரிசோதகராக அறிமுகப்படுத்தி வெள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

அவர் கறுப்பு நிறத்திலான மழை அங்கி அணிந்திருந்துள்ளார். வீட்டின் சுற்றாடலில் தேங்கி நின்ற வெள்ளத்தை தனது கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்த அந்தப் பெண், ஆடை மாற்றுவதற்கு அறையைத் தருமாறு கேட்டுள்ளார்.

அதனால் அறை ஒன்றை வீட்டிலுள்ளவர்கள் வழங்கியுள்ளனர். அதற்குள் சென்று கதவைப் பூட்டிவிட்டு கொண்ட அந்தப் பெண் அங்கிருந்த பெட்டகத்திலிருந்த 5 பவுண் தங்கப் பவுண் தாலிக்கொடி, சங்கிலி, மோதிரங்கள் ஆகியவற்றை கொள்ளையிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்னர், சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் அறைக்குள் சென்று பார்த்தபோது, பெட்டகத்திலிருந்த நகைகளைக் காணவில்லை. சம்பவம் தொடர்பில் ஊரவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து ஒன்றிணைந்த மக்கள் அவரைத் தேட ஆரம்பித்தனர்.

அதன்போது அந்தப் பெண் ஆண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பலாலி பகுதியில் பயணித்த போது, அவர்கள் இருவரையும் துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தனர்.

இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பட்டனர். பெண்ணின் கைப்பையிலிருந்து பெருமளவு நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நகைகளை இழந்த வீட்டின் உரிமையாளர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, அந்தப் பெண் வேறும் சில வீடுகளுக்குச் சென்று தன்னை கிராம அலுவலகர் எனக் கூறியுள்ளார் என்று ஊரவர்கள் தெரிவித்தனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.