Breaking News


முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள உள்ளிட்டவர்களை பொலிசார் தடைசெய்ய முயன்றனர். இழுபறியின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டனர். ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பிறர் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகிறது என மக்கள் முறையிட்டமை, நாளை (18) தொல்பொருள் ஆய்வு பணிகளை ஆரம்பிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (17) குருந்தூர் மலைக்கு சென்றது.

அகழ்வாராய்ச்சிக்காக அந்த பிரதேசத்தை அளவீடு செய்த நிலஅளவை திணைக்கள அளவையாளர், அது பௌத்த வழிபாட்டிடம் அமைந்திருந்ததாக அடையாளம் காணப்பட்ட பிரதேசம் என குறிப்பிட்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகரதலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் க.விஜயகுமார் உள்ளிட்டவர்களுடன் ஊடகவிலயாளர்களும் குருந்தூர் மலைக்கு சென்றனர்.

அங்கு அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், குருந்தூர் மலைக்கு செல்ல முடியாதென்றனர்.

அதன்போது, பொலீசாருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் தர்க்கம் உருவானது. குருந்தூர் மலையில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளதை கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டிய போதும், பொலிசார் அடம்பிடித்தனர்.

பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அவர்களுடன் வந்த ஏனையவர்களையும் மாத்திரம் சென்று பார்வையிட அனுமதித்துள்ளார்கள். எனினும், ஊடகவியலாளர்களை அனுமதிக்க முல்லைத்தீவு பொலிசார் அனுமதி மறுத்துள்ளார்கள்.

இந்த சம்பவங்களை பொலிசார் வீடியோ படம் பிடித்தார்கள்.

இதேவேளை, நாளை அங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கவுள்ளன. இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் இந்த பணிகள் ஆரம்பிக்கின்றன. பேராதனை பல்கலைகழக மாணவர்களும், தொல்பொருள் திணைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தொல்பொருள் துறை இயங்கும் நிலையில், பேராதனை பல்கலைகழக மாணவர்களை அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபடுத்துவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இராணுவத்தின் ஏற்பாட்டிலேயே இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் நடப்பதாகவும் மக்கள் பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.