Breaking News


அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்க விரும்புகின்றோமே தவிர அரசாங்கத்தின் அடிமைகளாக, பங்காளிகளாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்.

இன்று (3) கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில,

அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்க விரும்புகின்றோமே தவிர அரசாங்கத்தின் அடிமைகளாக, பங்காளிகளாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கிறது. வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகள், தார்ப்பரியங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இன்று அத்துமீறிய குடியேற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கிழக்கில் அத்துமீறிய குடியேற்றங்கள் நடக்கின்றன. தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டால் மாத்திரம்தான் மாற்றத்தை உருவாக்கலாம். அதற்கான முதற்படியாக இருக்க நான் விரும்புகிறேன்.

மாகாண சபைகள் மக்களின் அங்கீகாரம் இல்லாத சபைகளாக ஆளுனர்களின் கைகளில் இருக்கிறது. மாகாணசபைத் தேர்தல்களை நிச்சயமாக நடத்த வேண்டும். இந்த வருட இறுதிக்குள் தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தேர்தல் நடக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். நாங்கள் வடக்கு கிழக்கு என்று பிரித்துப் பார்ப்பதில்லை. தமிழ் மக்களாகப் பார்க்கிறோம். அவர்களிற்கு தலைமைத்துவம் வழங்குவதே நோக்கம். எனக்கு அனுபவம் உள்ளது. சிறந்த இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும்.

போராட்ட காலத்தில் 15 வருடமாக நான் வடக்கில் கடமையாற்றி இருக்கிறேன். வடக்கு கிழக்கு என்ற பிரிவில்லாமல் எமது தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருந்தால் மாத்திரம் தான் பலத்தை நாங்கள் பெறுவோம். தற்போது நாங்கள் தேவை என்பதை தமிழ் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அந்த நேரத்தத்தை தான் நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். மாகாணசபை தேர்தலில் அனைத்து தமிழ் பிரதேசங்களில் நாங்கள் போட்டியிடுவோம்.

No comments

Note: Only a member of this blog may post a comment.