Breaking News


வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக முன்னைய யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனை களமிறக்க எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நிர்வாக அனுபவமுடையவர் என்ற கோதாவில் அவரை களமிறக்குவதன் மூலம் மாவை சேனாதிராசாவிற்கு செக் வைக்கலாமென சுமந்திரன் தரப்பு திட்டமிட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நா.வேதநாயகனை களமிறக்க எம்.ஏ.சுமந்திரன் தரப்பு சில காலமாக திட்டமிட்டு வந்தது. அவர் யாழ் மாவட்ட அரச அதிபராக இருந்த போதே இதற்கான பேச்சுக்கள் இருந்தன.

இதனால், அபிவிருத்தி திட்டங்களில் வேதநாயகன் நேர்மையற்ற விதமாக செயற்பட்டதாக கூட்டமைப்பின் மற்றைய எம்.பிக்கள் அதிருப்தியடைந்து, பிரமரின் செயலாளரிடமே முறையிட்டிருந்தனர். சுமந்திரன் ஊடாகவே யாழ்ப்பாணத்தில் அதிக அபிவிருத்தி திட்டங்களை மாவட்ட அரச அதிபராக, தனது அதிகாரத்தின் மூலம் அவர் செயற்படுத்தினார்.

இதனாலேயே, அவர் வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக வரும் போது அதை ஆதரிப்பதில்லையென கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இரண்டும் அப்போதே முடிவு செய்து விட்டன.

இந்த நிலையில், வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க மாவை சேனாதிராசா தயாராகி வரும் நிலையில், அவரை கழற்றி விட வேதநாயகனை களமிறக்கும் நகர்வை எம்.ஏ.சுமந்திரன் ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பில் வேதநாயகனை அண்மையில் சந்தித்து பேசியதாகவும் அறிய முடிகிறது.

எனினும், இம்முறை மாவை சேனாதிராசாவே முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க வேண்டுமென தமிழ் அரசு கட்சியின் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். கடந்த முறை இப்படித்தான் விக்னேஸ்வனை வேட்பாளராக களமிறக்க சுமந்திரன் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவை சுட்டுக்காட்டுவதுடன், தமிழ் அரசியலில் சுமந்திரனினால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அனைவரினாலும் ஏற்பட்ட விளைவுகளையும் உட்கட்சி கூட்டங்களில் சுட்டிக்காட்ட தயாராகி வருகிறார்கள்.

No comments

Note: Only a member of this blog may post a comment.