Breaking News


அரசியலமைப்பை மீறியதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் 21 பேருக்கு தண்டனை விதிப்பது குறித்து பாராளுமன்றத்தில் பரிந்துரைகளை வழங்குவதற்காக சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைப்பதற்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் செயல்பட்ட ஊழல் தடுப்புக் குழு மற்றும் ஊழல் தடுப்புச் செயலகத்தை நிறுவுவதில் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அரசியலமைப்பை மீறியதாக குழுவால் பெயரிடப்பட்டவர்களில் மங்கள சமரவீர, பட்டலி சம்பிக ரணவக்க, ரவூப் ஹக்கீம், சரத் பொன்சேக, ஆர்.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், அனுர குமார திசாநாயக்க, ஜே.சி.வெலியமுன, மாலிக் சமரவிக்ரம, ஜெயம்பதி விக்ரமரத்ன, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் அரசியலமைப்பு நீதிமன்றம் இல்லாததால் தனிநபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பரிந்துரைகளை வழங்க புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க குழு பரிந்துரைத்துள்ளது.

அரசியலமைப்பின் மீறல்களுக்கு மேலதிகமாக, இந்த நபர்கள் ஊழல் தடுப்புக் குழு மற்றும் ஊழல் தடுப்புச் செயலகம் மூலமாகவும் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.

ஊழல் தடுப்பு குழு ஒரு அரசு சாரா அமைப்பாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அரச நிதியைப் பயன்படுத்தி அலரி மாளிகையில் கூட்டங்களை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த சந்திப்புகள் பிரதமரின் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த அரச நிதியில் ரூ .33.7 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.

இதற்கிடையில், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் ஊழியர்களுக்கு அரச நிதியைப் பயன்படுத்தி ஊதியம் வழங்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

97 புகார்கள் தொடர்பான விசாரணைகளை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு நிறைவு செய்துள்ளதுடன், இந்த வழக்குகளில் பலவற்றில் உள்ளவர்கள் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க பரிந்துரைத்துள்ளது. இந்த நபர்களில் உதய கம்மன்பில, யோஷித ராஜபக்ஷ, நலக கோதாவேவ, சிவனேசதுரை சந்திரகாந்தன், ரோஹித போகொல்லாகம, உதயங்க வீரதுங்க, வசந்த கரணகொட மற்றும் ஜகத் விஜேவீர ஆகியோர் அடங்குவர்.

மூன்று பேர் கொண்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திரசிறி ஜெயதிலக மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்திர பெர்னாண்டோ ஆகியோர் குழுவின் மற்ற அங்கத்தவர்களாவர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.