இலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெளிவுபடுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று முல்லைத்தீவு குமிழமுனை குருந்தூர் மலைக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது தொல்லியல் திணைக்களத்தினால் குறித்த பகுதியில் செய்யப்படும் ஆய்வுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், இவ்விடத்தில் இருந்த தமிழர்களின் வழிபாடு செய்கின்ற சூலத்தை யார் அகற்றியது என கேட்டார்.
தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரி தாம் அவற்றை அகற்றவில்லை எனக் கூறினார். இராணுவம் தானே இதை அகற்றியது என சிறிதரன் வினவ, தமக்கு தெரியாது என்றார்கள்.
இந்த அகழ்வை எந்தக்காலத்தோடு ஒப்பிட்டு மேற்கொள்கிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வினவியபோது பொலனறுவை காலத்தினை மையமாகக் கொண்டு எனக் கூறியபோது இலங்கையிலே விஜயன் வருகையின் பின்னரே இலங்கைக்கு சிங்கள பௌத்தர்களின் வரலாறுகள் தொடங்குவதாகவும் அதற்கு முன்னரே இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளதாகவும், பஞ்ச ஈச்சரங்கள் அதற்கு சான்றுகள் எனவும் சிலாபத்தில் முன்னேஸ்வரம், மன்னாரில் திருக்கேதீச்சரம், திருகோணமலையில் திருக்கோணேஸ்வரம், மாத்தறையில் தொண்டேஸ்வரம், யாழ்பாணத்தில் நகுலேஸ்வரம் போன்றவையும் இருந்ததாகவும் தமிழர்களே இங்கு பூர்வீகம் குடிகள் என்றும் குறிப்பிட்டார்.
அப்போது அவர் அதிகாரி அவ்வாறான வரலாறு தனக்கு தெரியாது என்றபோது உங்களுக்கு தெரிந்த ஒரே வரலாற்று நூல் மகாவம்சம் மாத்திரமே என்றார். பின்னர் அனைவரும் அவ்விடம் விட்டகன்றனர்.
குறித்த விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிகரன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் போன்றோரும் கலந்து கொண்டனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.