Breaking News


காலத்தினை இழுத்தடிப்பதற்காகவும் சாட்சியங்களை மறைப்பதற்காகவும் கால நீடிப்பினை கோருவதற்காக ஒரு போலித்தனமான முறையில் யுத்த குற்றங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்று ஒரு குழுவினை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ் மக்களையும் சர்வதேசத்தினையும் ஏமாற்றுகின்ற ஒரு கண்துடைப்பு, காலத்தினை நீடித்து மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடாகும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் சிங்கள பௌத்த மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் துரிதமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்வியை ஏற்படுத்தியுள்ளதுடன் பல்வேறு ஆதங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

1958ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரையில் தமிழ் மக்கள் திட்டமிட்டு இனஅழிப்பு செய்யப்பட்டனர். அடுத்ததாக அவர்கள் பாரம்பரியமாக வாழுகின்ற காணிகளை அபகரிக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அடுத்த கட்டமாக கலாசார அழிப்பு நடைபெற்று வந்தது. அந்த வகையில் தான் 1958ல் ஆரம்பித்த தமிழ் மக்கள் மீதான அழிப்பு என்ற விடயம் 2009ஆம் ஆண்டில் ஒருவகையில் அவர்கள் முடித்திருக்கின்றார்கள். அடுத்த கட்டங்களான காணி அபகரிப்பு, கலாசார அழிப்பு போன்ற விடயங்கள் இன்றும் நடைபெற்றுவருகின்றன.

இதற்கு சிறந்த உதாரணமாக தெற்காசியாவிலே சிறந்த நூலகம் என்று சொல்லப்படுகின்ற யாழ் நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றிருந்தது. யாழ்பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை திட்டமிட்டு அழித்திருந்தார்கள். அடுத்த கட்டமாக குருத்தூர் மலையில் அமைந்திருக்கின்ற ஆதிசிவன் ஆலயத்திற்குரிய சூலம் பிடுங்கப்பட்டு அந்த இடத்தில் புத்தபெருமான் எழுந்தருளச் செய்யப்பட்டிருக்கின்றார்.

ஒரு இனத்தை இல்லாமல் ஆக்குவதென்றால் இனத்தை அழிப்பது, இரண்டாவதாக அவர்களுடைய காணிகளை திட்டமிட்டு அபகரிப்பது, மூன்றாவதாக அவர்களுடைய கலாசாரச் சின்னங்களை அழித்தொழிப்பது. இந்த அரசாங்கம் போகின்ற பாதையைப் பார்க்கின்றபோது பேரின இனமயமாக்கல், பௌத்தமயமாக்கலுக்குரிய வேலைத்திட்டத்தின் கீழ் துரிதமாக பயணித்துக்கொண்டிருக்கின்றது.

உலக நாடுகளெல்லாம் கொரொனா தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும், கொரொனாவை தடுக்கவேண்டுமென்று ஏங்கிக்கொண்டிருக்கின்ற அதேவேளை இந்த நாடு கலாசார அழிப்பு விடயங்களிலும் காணி அபகரிப்பு விடயங்களிலும் ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு உதாரணமாக மயிலத்தமடு, மாதவனை பிரச்சினையை சொல்லலாம். 2015க்கு முற்பட்ட காலத்தில் வேறு மாவட்டங்களில் இருந்துவந்து குடியேறியவர்கள் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் எமது பண்ணையாளர்களுக்கு தொல்லை கொடுக்கும் பணியை மேற்கொண்டனர். 2015க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

புதிய அரசாங்கம் வந்ததும் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் மீண்டும் வந்துள்ளனர். பழையபடி இனமுறுகல், இனமோதல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கிழக்கு மாகாண ஆளுனர் பெரும்பான்மையின மக்களை இங்குகொண்டுவந்து குடியேற்றுவதில் அக்கறையாக இருந்து வருகின்றார்.

கிழக்கு மாகாணத்தில் இனமுறுகல், இனமோதல்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அப்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தமது பயிர்களை கால்நடைகள் அழித்துவிட்டதாக கூறி 17 வழக்குகளை கரடியனாறு பொலிஸ் மூலமாக ஏறாவூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். வேறு மாவட்டங்களில் இருந்துவந்து சட்ட விரோதமாக காணிகளைப் பிடித்து சட்ட விரோதமாக காடுகளை அழித்து,சட்ட விரோதமாக பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு, கால்நடைகளை சட்ட விரோதமாக கொலைசெய்கின்றனர், பண்ணையாளர்கள் தாக்கப்படுகின்றனர். மறுபக்கத்தில் சட்ட விரோதமாக செய்யப்பட்ட பயிர்களை கால்நடைகள் அழித்துவிட்டது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோன்று 06 பண்ணையாளர்கள் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவமானது கரடியனாறு பொலிஸ் பிரிவில் நடைபெற்ற நிலையில் மஹோயாவில் நடந்த சம்பவமாக சோடித்து மஹோயா நீதிமன்றத்தில் மஹோயா பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு பண்ணையாளர்களினை வேறு மாவட்டங்களில் இருப்பதுபோன்று காட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இனஅழிப்பு மூலமாக, கலாசார அழிப்பு மூலமாக,காணி அபகரிப்பு மூலமாக தமிழ் பேசுகின்ற மக்கள் ஒடுக்கப்படுகின்ற, அடக்கப்படுகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த விடயங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் கடந்துவிட்டது. இதுவரைக்கும் ஜனாதிபதி யுத்ததின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், இனஅழிப்பு தொடர்பான விடயங்கள், யுத்தக்குற்றச்சாட்டுகள் எந்தவிதமான கருத்துகளும் வெளியிடவில்லை. காணாமல் போனவர்களை மறந்து விடுங்கள், காணாமல் போனவர்களை மண்ணைத்தோண்டி தேடிப்பாருங்கள் என்று விமல் வீரவங்ச போன்றவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

தற்போது ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் இது தொடர்பான விடயங்கள் பேசப்படவுள்ள நிலையில் இலங்கையிடம் பல கேள்விகள் முன்வைக்கப்படவுள்ளன.ஏற்கனவே 34:1,30:1,40:1 பிரேரரணைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வந்துள்ளது.

தற்போது மனித உரிமை பேரவையில் இவை கேள்விக்குள்ளாகப்போகின்றது என்ற காரணத்தினால் காலத்தினை இழுத்தடிப்பதற்காகவும் சாட்சியங்களை மறைப்பதற்காகவும் கால நீடிப்பினை கோருவதற்காக ஒரு போலித்தனமான முறையில் யுத்த குற்றங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு என்று ஒரு குழுவினை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ் மக்களையும் சர்வதேசத்தினையும் ஏமாற்றுகின்ற ஒரு கண்துடைப்பு, காலத்தினை நீடித்து மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடாகும். இதனை மக்கள் ஒரு துளியும் நம்பமாட்டார்கள்.

அரசாங்கத்தின் பக்கம் நின்று தலையாட்டிக்கொண்டிருப்பவர்கள் அனைத்துக்கும் தலையாட்டுவார்கள். அதனைவிட ஜெனிவாவுக்கும் சென்று இங்கு ஒரு பிரச்சினையும் இல்லையென்று சொல்வதற்கு கூட சாட்சியமாக இருப்பார்கள். இதுவே உண்மை நிலையாகும்.

No comments

Note: Only a member of this blog may post a comment.