Breaking News



சமீபத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழ் மக்களின் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றான பிராம்டன் நகரின் நகரசபையில், பீல் பிராந்திய மற்றும் பிராம்டன் நகரசபை வட்டாரம் 3 மற்றும் 4 இன் மக்கள் பிரதிநிதி மாட்டின் மெடுரசினால் கொண்டவரப்பட்ட பிராம்டன் நகரசபைக் காணியில், தமிழ் மக்களுக்கான நினைவுத்தூபி அமைக்கும் தீர்மானம் ஏகமனதாக சனவரி 20ஆம் நாள் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டபோது, உடனடியாக தனது ரூவிட்டர் பக்கத்தில், அச்சம்பவம் தமிழ் மக்களின் இனப்படுகொலை வரலாற்றை அழித்தொழிக்கும் முயற்சி என தனது கண்டனத்தை திரு மாட்டின் வெளியிட்டிருந்தமை இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

பிராம்டன் நகரின் வளர்ச்சிக்கு வணிகம், கலை, கலாச்சார ரீதியாக தமிழ் மக்கள் வளங்கிவரும் பெரும் பங்கை நினைவு கூர்ந்த மாட்டின், இந்த நினைவுத்தூபியை அமைப்பதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தை பெருமைப்படுத்துவது மட்டுமன்றி அவர்களின் வரலாற்றையும் பதிவு செய்வதாக அமையும் என மேலும் கூறியுள்ளார். 

நினைவுத்தூபி அமைப்பதற்கான தொடர்ந்த முன்னெடுப்புகள் கனடிய தமிழ் மக்களின் குறிப்பாக பிராம்டன் வாழ் தமிழ் மக்களின் ஒன்றிணைந்த முயற்சியாக அவர்களின் முழுமையான பங்களிப்புடன் சிறந்த முறையில் செயல்வடிவம் பெறும் என இம்முயற்சியுடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரம் மேலும் அறியத்தந்துள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.