பவித்ரா, கணவரிற்கு தொற்று: சுயதனிமைப்படும் முக்கியஸ்தர்கள்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

பவித்ரா, கணவரிற்கு தொற்று: சுயதனிமைப்படும் முக்கியஸ்தர்கள்!


கொரோனா தொற்றிற்குள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அவரது கணவர் காஞ்சன ஜெயவர்த்தன ஆகியோருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பவித்ரா வன்னியாராச்சியும், கணவரும் ஹிக்கடுவையிலுள்ள ஹொட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சிலுள்ள பவித்ரைா வன்னியாராச்சியின் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. தொடர்புடைய ஊழியர்கள் பிசிஆர் சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

பவித்ரா வன்னியாராச்சியுடன் கடந்த 5 நாட்களில் தொடர்புபட்டிருந்தவர்கள் பட்டியல் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இதில், இந்த பட்டியலில் சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் உள்ளனர்.

இதிலிருந்து, அமைச்சருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்படும் என்றார்.

கொரோனா தொற்று கண்டறியப்படுவதற்கு முன்னர் பவித்ரா வன்னியாராச்சி பல கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார். நெலும் மாவத்தையிலுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்திற்கும் சென்றார். அங்கு பெரமுனவின்  தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

பெரமுனவின் தலைமை அலுவலகம் நேற்று மூடப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டது. பசில் ராஜபக்ஷ நேற்று தனது சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தபோதிலும் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டதாக கூறினார். அவர் நாளை மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வார்.

அமைச்சர் பவித்ரா, செவ்வாய்க்கிழமை குறுகிய நேரம் நாடாளுமன்றத்தில் இருந்தார்.