Breaking News


தற்போதைய உலக அரங்கில் தனிநாடு என்பது சாத்தியமில்லை. இருந்தாலும், தமிழ் மக்கள் தமது  அபிலாசைகளை பூர்த்தி செய்து சுதந்திரமாக வாழ வேண்டும். இதை நிறைவேற்ற தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பயணிக்க முன்வர வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (3) கிளிநொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் கிளிநொச்சிக்கு வந்திருக்கிறோம். நாங்கள் கட்டங்கட்டமாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வளர்த்து வருகிறோம். தமிழ் மக்களின் கட்சி என்ற அடிப்படையில் வடக்கு கிழக்கு, தலைநகர், மலையகம் என கட்சியை வளர்த்து வருகிறோம்.

ஏற்கெனவே வன்னி மாவட்டத்தில் கட்சி நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறோம். இப்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் கட்சி நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறோம்.

புதிய அரசாங்கம் சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கான திட்டங்களை வைத்திருக்கிறது. அந்த வாய்ப்புகளையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கம்தான் எம்மிடம் உள்ளது. இந்த நோக்கத்துடன் தான் வடக்கிற்கு வந்திருக்கிறோம்.

ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். இதன்மூலம் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தேவைகளை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வாய்ப்புகளை வடபகுதி மக்களும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் கிளிநொச்சியில் எமது கட்சியை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அடுத்து மாகாணசபைத் தேர்தல்களில் நிச்சயமாக எமது கட்சி போட்டியிடும். அதற்கு வேட்பாளர்களையும் தெரிவு செய்து வருகிறோம். யாருடனும் கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பதை கடைசி நேரத்திலேயே முடிவு செய்வோம். எனினும், தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதை நாம் விரும்பவில்லை. ஏனெனில், இதை ஒரு தமிழ் கட்சியாகவே நாம் வளர்த்து வருகிறோம். ஏனைய தமிழ் கட்சிகளுடன் கூட்டு செய்வது பற்றி நாம் சிந்திக்கிறோம். எமது வரவு ஏனைய கட்சிகளை மந்தப்படுத்துவதாகவோ, நீக்குவதாகவோ அமையாது. மக்களிற்கு புதிய தெரிவுகள் தேவை.

வன்னிப்பிரதேசம் எனக்கு பரிச்சயமானது. நீண்ட காலமாக இந்த போராட்டக் களத்தில் நின்று மக்களின் துன்ப துயரங்களில் பங்கு எடுத்தவன் என்ற அடிப்படையில் இந்த மக்களுக்கு பாரிய சேவையாற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்றவே இங்கு வந்திருக்கிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. அவர்கள் சில திருத்தங்களை செய்ய வேண்டும், மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பதாலேயே சில விமர்சனங்களை வைத்தோம். அதுதான் எங்களுடைய நோக்கம். தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடக் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவரை மதிப்பவர்களில் நானும் ஒருவன்இ

அவர்களின் தவறுகளையே சுட்டிக் காட்டி இருக்கிறோம். உதாரணமாக கிழக்கு மாகாணசபை தேர்தலில் 11 ஆசனங்களை எடுத்தும் முஸ்லிம்களிடம் கையளித்தனர்.

அதேபோல கடந்த ரணில் மைத்திரி அரசாங்கத்தை முட்டுக் கொடுத்து காப்பாற்றிக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதுவித பயனும் இல்லாமல் வரவு செலவுத் திட்டத்தை கூட ஆதரித்துக் கொண்டு மக்களை ஏமாற்றினர். இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம். திருத்தங்களை கொண்டு வர வலியுறுத்துகிறோம்.

எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேச்சு நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் கூட தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என கோட்டபாய ராஜபக்ஷ வெளிப்படையான வாக்குறுதி கொடுத்திருந்தார். அதற்கான சட்டப் பிரச்சினைகளை தற்போது எதிர்நோக்கி இருக்கிறார்கள். குறைந்த தொகையினர் தான் தற்பொழுது அரசியல் கைதிகளாக இருக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு முடிவெடுத்து, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க உத்தரவிட்டார். போராளிகள், தளபதிகள் அனைவரையும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்தார். அவ்வாறானவர்கள் எல்லாம் வெளியில் இருக்கின்றனர். அரசியல் கைதிகளாக இருப்பவர்கள் அனைவரும் சாதாரண மக்கள். அவர்கள் நேரடியாக யுத்தத்தில் நிற்கவில்லை. அவர்கள் விடுவிக்கப் பட வேண்டுமென்பதில் நாம் கவனமாக இருக்கிறோம். அதற்கான காலம் கனிந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பதிலை அரசாங்கம்தான் வழங்க வேண்டும். இல்லையா, ஓமா என்ற பதிலை வழங்கினால், மக்கள் அதற்குரிய கடமைகளை செய்வார்கள். அதற்கான அழுத்தத்தை நாம் வழங்குவோம்.

எமது வாழ்க்கையை தமிழ் மக்களிற்காக அர்ப்பணித்தவர்கள். யுத்த களத்தில் சகோதரங்களை நான் இழந்திருக்கிறேன். தமிழ் மக்கள் தமது உறவுகளை, குழந்தைகளை இழந்துள்ளனர். பாரிய இழப்பிலிருந்து மக்கள் மீண்டு வந்துள்ளனர். அதில் பங்கெடுத்து, மக்களிற்கான சிறந்த தீர்வு திட்டத்தை வழங்க வேண்டுமென்பதுதான் எமது நோக்கம்.

தற்போதைய உலக அரங்கில் தனிநாடு என்பது சாத்தியமில்லை. இருந்தாலும், தமிழ் மக்கள் தமது  அபிலாசைகளை பூர்த்தி செய்து சுதந்திரமாக வாழ வேண்டும். இதை நிறைவேற்ற தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக பயணிக்க முன்வர வேண்டும் என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.