தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான வரைபு நேற்று ((16) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் கட்சிகள் தரப்பில் இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
இந்த கையொப்ப விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தரப்பில் அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களும்- சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோர் கைபொப்பமிட விரும்பியிருந்தனர். எனினும், பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வரைபில் அந்த கூட்டணி சார்பில் விக்னேஸ்வரனின் கையொப்பம் மாத்திரமே இணைக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர், உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்த போது புதிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 14ஆம் திகதியளவிலிருந்து கையெழுத்து விவகாரம் தமிழ் மக்கள் கூட்டணிக்குள் நீடித்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் செல்வம் அடைக்கலநாதனும் கையெழுத்திட வேண்டுமென விரும்பினார். எனினும், எம்.ஏ.சுமந்திரன் தரப்பில், கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் மாத்திரம் கையெழுத்திடுவார் என கூறப்பட்டுள்ளது.
15ஆம் திகதி காலை 11.30 மணியளவிலேயே, தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் தான் மட்டுமே கையெழுத்திடுவேன் என விக்னேஸ்வரன் தீர்மானித்து விட்டார். பங்காளி தலைவர்களை சின்னப் பொடியளாக அவர் நினைத்திருக்கலாம்.
அந்த முடிவை ஏற்பாட்டாளர்களிற்கு உடனடியாக தெரிவித்தும் விட்டார்.
எனினும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட வேண்டுமென, தமிழ் மக்கள் கூட்டணியின் ஏனைய தலைவர்கள் வலியுறுத்தினர். அன்றைய தினம் 6 மணிக்குள் அனைத்து தரப்பினரும் கையொப்பமிட்டு தர வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
அன்று மாலை தனது தரப்பு பங்காளிக்கட்சிகளை அழைத்த விக்னேஸ்வரன், ஏற்பாட்டாளர்கள் கேட்டதற்கு இணங்க, தான் மட்டுமே கையொப்பிட்டு ஆவணத்தை அனுப்பி விட்டதாக பங்காளிகளிற்கு கூறியுள்ளார்.
எனினும், பங்காளிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, அனைத்து தலைவர்களும் கையொப்பிட்டு ஆவணத்தை அனுப்புவதென முடிவானது. இதன்படி, ஆவணத்தின் புதிய பிரதியில் கையொப்பமிட்ட விக்னேஸ்வரன், பங்காளி கட்சிகளின் தலைவர்களிடமும் கையொப்பம் வாங்கியுள்ளார்.
எனினும், அந்த ஆவணத்தை ஏற்பாட்டாளர்களிற்கு அவர் அனுப்பவில்லை. இரவு 8 மணிக்கு பின்னர், தான் மட்டும் கையொப்பிட்ட ஆவணத்தை அனுப்பியுள்ளார்.
மறுநாள், இந்த விவகாரங்கள் சர்ச்சையான பின்னரும், பங்காளி தலைவர்களிடம் அவர் உண்மையை சொல்லவில்லையென்றே பங்காளிக்கட்சிகள் தெரிவிக்கின்றன. இதனாலேயே, ஏற்பாட்டாளர்கள் விக்னேஸ்வரனின் கையொப்பத்தை மட்டும் வெட்டி பொருத்தினார்களா என்ற சந்தேகத்தை பங்காளிக்கட்சிகள் எழுப்பின.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கையெழுத்து சர்ச்சைக்கு விக்னேஸ்வரனின் அரசியல் அறமற்ற நடவடிக்கையே காரணம்.
முன்னாள் நீதியரசராக தன்னை குறிப்பிட்டு, அறம், நேர்மை, உண்மை பற்றி அடிக்கடி குறிப்பிடும் விக்னேஸ்வரன்- தான் சொல்வதை போல செயற்பட்டாரா என்பதை அவரது பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள்தான் வெளிப்படுத்த வேண்டும்.
No comments
Note: Only a member of this blog may post a comment.