நடிகை அஹானாவின் வீட்டின் ஆளுயர இரும்புக்கேட்டை ஏறிக்குதித்து வீட்டிற்குள் புகுந்து மர்ம ஆசாமி ஒருவன் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரவு நேரத்தில் எச்சரிக்கையை மீறி வீட்டிற்குள் நுழைந்தவரை தீவிரவாதி என்று பா.ஜ.க குற்றஞ்சாட்டிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
தமிழில் தெய்வ திருமகள், முகமூடி, சத்யம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமாரின் மகளான நடிகை அஹானா மலையாளத்தில் லூக்கா, 18 ஆம் படி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
அஹானா தனது பெயரில் தனியாக யுடியூப்பில் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
வெளிநாடு மற்றும் வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு சென்றால் ரசிகர்களை கவர்வதற்காக தனது வீடியோக்களை யூடியூப்பில் பதிவிடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் திருவனந்தபுரம் மருதன் குழியில் உள்ள அஹானாவின் வீட்டிற்கு இரவு 9 மணி அளவில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் அவரது வீட்டின் ஆளுயர இரும்பு கேட்டை பிடித்து அசைத்தபடி நின்றான்.
வீட்டின் மாடியில் இருந்து வீடியோ எடுத்த வாறே அஹானாவின் தந்தை கிருஷ்ணகுமார் , என்ன வேண்டும் என்று கேட்க, அஹனாவை பார்க்க வந்திருப்பதாக கூறியபடியே, கண்ணிமைக்கும் நேரத்தில், விண்ணை தாண்டி வருவாயா, சிம்பு மாதிரி அந்த ஆசாமி வீட்டின் கேட்டை தாண்டி வீட்டின் காம்பவுண்டுக்குள் குதித்தான்.
இதை சற்றும் எதிர்பாரத கிருஷ்ணகுமார் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்து விட்டு அந்த மர்ம நபரை வீட்டிற்குள் வராமல் தடுத்து நிறுத்தினார்.
விரைந்து வந்த காவல் துறையினர் அந்த நபரை பிடித்து விசாரித்த போது போதையில் இருந்த அந்த நபரின் பெயர் பசில் உல் அக்பர் என்பதும் , நடிகை அஹனாவின் தீவிர ரசிகரான அந்த நபர் அஹனா மீதான ஒரு தலை காதலால், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் கஞ்சா போதையில் வீட்டிற்குள் ஏறி குதித்து நுழைந்திருப்பதும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஆட்கள் விழித்திருக்கும் போதே நடிகையின் வீட்டிற்குள் போதை ஆசாமி நுழைந்த சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வீட்டிற்குள் நுழைந்த பசில் உல் அக்பரின் பின்னணியில் பயங்கரவாதிகளின் பங்கு இருக்கலாம் என்று பாரதீய ஜனதாவின் மாநில தலைவர் சுரேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் கிருஷ்ணகுமார் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதால், சமூக வலைதளங்களில் அவருக்கு பலமுறை மிரட்டல்கள் வந்துள்ளது.
எனவே இரவு நேரத்தில் அவருடைய வீட்டிற்குள் ஏறிக்குதித்த சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் தொடர்பு இருக்கலாம் என்பதால் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட பசில் உல் அக்பரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்