Breaking News


ஒரு நாடு ஒரு சட்டம் என ஜனாதிபதி தெரிவிக்கின்ற போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொள்ளும் பெரும்பான்மையினத்திற்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பகுதியில் மேய்ச்சல் தரை காணிகளை ஊர்காவல் படையினருக்கு முந்திரிகை செய்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகளில் உள்ள சுமார் 1500 ஏக்கர் காணிகள் கம்பிவேலிகள் அமைக்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு வருவதை காணமுடிந்தது.

படுவான்கரை பகுதியில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்போது இங்குள்ள கால்நடைகள் இப்பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காக கொண்டுசெல்லப்படுகின்றது.

தற்போது விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது அப்பகுதியில் ஊர்காவல் படையினர் காடுகளை வெட்டி காணிகளை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவது குறித்து கால்நடை பண்ணையாளர்களினால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்;டது.

அப்பகுதிக்கு சென்ற மட்;டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து கால்நடை பண்ணையாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.

நீண்டகாலமாக தாங்கள் இப்பகுதியில் கால்நடைகளை தமது முதாதையர்கள்முதல் மேய்த்துவருவதாகவும் ஆனால் தற்போது தமது மேய்ச்சல் தரையினை சுற்றி முந்திரிகை வளர்ப்பு என கூறி வேலியமைக்கப்படுவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் சிறிய மரக்குச்சு வெட்டும்போது தம்மை பொலிஸார் கைதுசெய்து வழக்கு தாக்கல் செய்வதாகவும் ஆனால் இங்கு பெரியளவிலான தேக்கு மரங்கள் கூட வெட்டப்படும் நிலையில் அதனை யாரும் கண்டுகொள்வதில்லையெனவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

படையினர் முகாம் வேலி அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் முட்கம்பிகள் கொண்டு வெலிகள் அமைக்கப்படுவதன் காரணமாக தாங்கள் மாடு மேய்க்கும்போது பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

மேய்ச்சல் தரைகள் சேனைப்பயிர்ச்செய்கை இடங்களாக மாற்றப்படுகின்றன.இது பெரும்பான்மையினத்தின் குடியேற்றங்களாகவும் மாறிவருகின்றன.பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட காத்தார்மல்லிச்சேனை பகுதிக்கு நாங்கள் வந்து இங்கு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடினோம்.

கால்நடை பண்ணையாளர்கள் தங்களது வாடிகளில் ஒரு தீப்பெட்டி வைத்திருக்க முடியாது, பாதுகாப்புக்காக ஒரு கத்தி வைத்திருக்க முடியாது, கால்நடைகளை வைத்திருப்பவர்கள் ஒரு கம்புகூட வெட்ட முடியாத நிலையிலும் அவ்வாறு வெட்டினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு பெருமளவான பணம் தண்டப்பணமாக அறவிடப்படுகின்றது.

இந்த நிலையில் பகுதியை பார்க்கும்போது மிகவும் மனவேதனையாக இருக்கின்றது. பயன்தரும் பலமரங்கள் வெட்டிவீழ்த்தப்பட்டு அந்த மரங்கள் கொண்டே பல தசாப்தங்களாக மேய்ச்சல் தரையாக வரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்தும் முள்கம்பிகளைக் கொண்டு வேலிகள் அமைக்கப்படுகின்றது. அந்தவேலியில் மாடுகள் படும்போது ஏற்படும் காயங்கள் இலகுவில் மாறாது என பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த பகுதி மட்டுமல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவுலானையில் இருந்து பட்டிப்பளையில் மணலேற்றம், காத்தார்சேனை,விச்சுக்குளம் உட்பட பல பகுதிகள் இதேபோன்று வவுணதீவீல் வெட்டிப்போட்டசேனை, செங்கலடியில் கார்மலை, மயிலத்தமடு, மாதவனை போன்ற பகுதிகள் கபளிகரம் செய்யப்படுகின்றது.

இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் ஒரு நாடு,ஒரு சட்டம் என்று கூறுகின்றார். ஆனால் இங்கு பண்ணையாளர்களுக்கு ஒரு சட்டமும் இங்குவந்து குடியேறுபவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்துகின்றது. எல்லைகளில் செயற்படும் ஊர்காவல் படையினர் எல்லைப்பகுதிகளை அழித்து தமிழ் பேசும் மக்களை இனப்பரம்பல் ரீதியாக குறைப்பதற்கான நடவடிக்கைகளாகத்தான் இதனை நோக்குகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியென்ற மாயைக்குள் தள்ளி வெறும் கொங்கிறிட் பாதைகளையும் சிறியசிறிய அபிவிருத்திகளையும் மேற்கொண்டு தமிழ் மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் இவ்வாறான பொருளாதார அழிவுகளை பார்த்துக்கொண்டு ஒரு இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் தங்களுக்குள்ளேயே அடிபடுகின்றார்கள். மாவட்ட செயலகத்தில் அலுவலகர்களை கூட்டி அபிவிருத்தியென்ற பெயரில் கூட்டங்களை நடாத்துகின்றார்களே தவிர மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கியமான பொருளாதாரத்தை அழிக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 06இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளும் அதன் மூலம் நேரடியாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களும் அவர்கள் மூலமாக பல ஆயிரக்கணக்கான குடும்பங்களும் பலனடைந்து கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான பொருளாதாரத்தின் அழிவினை தட்டிக்கேட்க முடியாத நிலையே இருக்கின்றது. அபிவிருத்தியென்பது கட்டிடங்கள் கட்டுவதும் கொங்கிறிட் பாதைகள் அமைப்பது மட்டுமல்ல. தனிமனிதனின் பொருளாதாரத்தினை வளர்ப்பதன் மூலம்தான் அபிவிருத்தி செய்ய முடியும்.

அந்தவகையில்இந்த நாட்டின் அரசாங்கத்தினால் திட்டமிட்டு அழிக்கப்படும் எமது மக்களின் பொருளாதாரம். எமது மாவட்டத்தினை உண்மையில் நேசிப்பவர்களாக இருந்தால் அவர்கள் இந்த பகுதிக்கு வர வேண்டும். வெறுமனே மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளை கூட்டி கூட்டங்களை நடாத்தாமல் எல்லைப்பகுதிகளுக்கு வந்து எமது பொருளாதாரம் எங்கெல்லாம் நசுக்கப்படுகின்றதோ அங்கு அந்த பொருளாதாரத்தினை வளப்படுத்தாவிட்டாலும் இருக்கின்ற பொருளாதாரத்தினையாவது கட்டிக்காப்பதற்காவது இப்பகுதிகளுக்கு வருகைதந்து இந்த மக்களின் கண்ணீரை துடைக்கவேண்டும் என்பது எங்களது வேண்டுகோளாகும்.

நாங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருப்பதனால் எங்களுக்கு வாக்களித்து என்ன பிரயோசனம் என்று சிலர் கேட்கின்றனர். ஒரு மனிதன் வாழ்வதற்கு அவனுக்கு ஒரு வீடு வேண்டுமானால் அவருக்கு அவரின் காணி உரிமையாக இருக்க வேண்டும். அவரின் பெயரில் அது இருக்க வேண்டும். அதேபோல நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழர்களின் பிரதேசம் பாதுகாக்கப்படவேண்டும்,வடகிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு ஆட்சி நிலவ வேண்டும் என்று நாங்கள் பாடுபட்டு வருகின்றோம்.

இங்கு மேற்கொள்ளப்படுவதுபோன்றான அழிவுகள், கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமானால் காணி உரிமையுடன் கூடிய அதிகார பரவலாக்கல் எங்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகின்றோம்.

உரிமைகள் பறிக்கப்பட்டு அழிவுக்குள் கொண்டுசென்ற தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தினையும் உயர்த்துவதற்கு இராஜங்க அமைச்சர், அபிவிருத்திக்குழு தலைவர் உட்பட அனைவருமாக நாங்கள் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் இப்பகுதிக்கு வந்து மக்களின் பிரச்சினைகளை பார்க்க வேண்டும்.

அரசாங்கம் தமிழர்களை நசுக்குவது மாத்திரமல்லாமல் இந்த நாட்டில் இருந்து விரட்டியடிப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என்றார்.No comments

Note: Only a member of this blog may post a comment.