Breaking News


வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதன் இடமாற்றம் அரசியல் பழிவாங்கல் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்கும்பான் உள்ளிட்ட சில இடங்களில் சுமார் 50 ஏக்கர் காணிகளை கடற்படடை சுவீகாிக்க முயன்ற விவகாரத்தில், ஒரு மக்கள் நேய அதிகாரியாக வேலணை பிரதேச செயலாளர் செயற்பட்டிருந்தார்.

போராட்டக்களத்திற்கு சென்று, மக்களின் நிலைப்பாட்டை கேட்டறிந்து, அதை காணி, பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி வைத்தார். அந்த அமைச்சிலிருந்து பதில் வரும் வரை காணி அளவீட்டு பணிகளை நிறுத்தி வைத்தார்.

வடக்கில் பெரும்பாலான அரச உயதிகாரிகள் இவ்வளவு வெளிப்படையாக, போராடும் மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பதில்லை.

ஆனால், வேலணை பிரதேச செயலாளர் செவிசாய்த்தார்.

அதனாலேயே, அரசாங்கத்தினால் அவர் இடமாற்றப்பட்டார் என ஆரம்பத்தில் ஊகிக்கப்பட்டது. அப்படியே பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால், உண்மை அதுவல்ல.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அரசியல் தலையீட்டின் பின்னணியியே அவர் இடமாற்றம் செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் கணிசமான பிரதேச செயலகங்கள் அங்கஜன் இராமநாதனின் அரசியல் செல்வாக்கிற்குட்பட்டுள்ளதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்திருந்தன. கடந்த பொதுத்தேர்தல் சமயத்தில் யாழ் மாவட்ட செயலகத்தின் உயரதிகாரிகள் சிலருடன் இணைந்து தேர்தல் விதிமீறலில் அவர் ஈடுபட்ட குற்றச்சாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு வரை சென்றது.

அந்த விவகாரம் இழுபறியில் இருந்து வருகிறது.

தற்போது, யாழ்ப்பாணத்தின் கணிசமான பிரதேச செயலகங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அங்கஜன் தரப்பு, யாழிலுள்ள இன்னொரு அரச கூட்டணி பிரமுகரான டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவு வட்டத்தை உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அண்மையில் தீவகத்திற்கு நிகழ்வொன்றிற்கு சென்ற அங்கஜன், தான் அரசியல் செய்ய தீவகம் வரவில்லையென கூறியிருந்தார். ஆனால், அவர் தீவகம் மற்றும் கிளிநொச்சியில் தற்போது அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளார் என்பதே உண்மை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பல தரப்பினர் பல விமர்சனங்கள வைத்து வந்தாலும், அரசாங்க அதிகாரிகள் மீது அதிகளவான தலையீடு செய்வதில்லையென்பதை அரச அதிகாரிகளே ஏற்றுக்கொள்வார்கள். அரசியல் பழிவாங்கல், அரசியல் தலையீடு என்பன ஏனைய தரப்புக்களை விட குறைந்தளவிலேயே அவர் மேற்கொள்வதுண்டு.

இந்த இயல்பு, அங்கஜன் தரப்பிற்கு வாய்ப்பாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டாலும், அங்கும் அங்கஜனின் தலையீடு ஆரம்பித்துள்ளது. அண்மையில் கிளிநொச்சி சமுர்த்தி வங்கி கணினி மயமாக்கல் நிகழ்வொன்றில் இரு தரப்பு இழுபறியினால் கிளிநொச்சி அரச அதிபர் நிகழ்வை தவிர்த்துக் கொண்டார்.

கண்டாவளை பிரதேச செயலகத்தையும் அங்கஜன் தரப்பு கட்டுப்படுத்த முயல்வதாக தெரிகிறது.

இரு தரப்பும் தற்போது திரைமறைவில் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

வேலணை பிரதேச செயலாளர் இடமாற்றம்

வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதன் ஆரம்த்திலிருந்தே தமது பிரதேசத்தில் அரசியல் தலையீட்டை தவிர்த்து வந்துள்ளார். எனினும், புதிய அரசில் வழக்கமான அரசாங்க உதவிகள், நிவாரணங்கள், திட்டங்கள் அனைத்தையும் தமது சிபாரிசின் மூலம் நடைமுறைப்படுத்துவதாக அங்கஜன் தரப்பு போலியான பிம்பத்தை பாமர மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயன்று வருகிறது.

முன்னைய நல்லாட்சி அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கம்பெரலிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழான சில வீதிகளையும் அங்கஜன் தரப்பு உரிமை கோரி திறந்து வைத்தது, நிதியொதுக்கீடு செய்யாமல் வீதிகளிற்கு அடிக்கல் நாட்டியது என ஏராளம் தகவல்கள் சக வலைத்தளங்களில் ஏற்கனவே பரவி வந்தது.

இந்தவகையான அரசியலை வேலணையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

அரசல் புரசலாக இன்னொரு தகவலும் வெளியாகியிருந்தது. அண்மையில் வழங்கப்பட்ட நிவாரணத்திட்டமொன்றில், தமது பட்டியலை குறிப்பிட்ட அரசியல் தரப்பினர் சமர்ப்பித்த போதும், பிரதேசசெயலாளர் அதை கணக்கிலெடுக்காமல் விட்டார், குறிப்பிட்ட அரசியல் தரப்பினரின் ஆதரவாளர் தனது வீட்டை இடித்து விட்டு வீட்டுத்திட்டத்தில் வீடு கேட்டமை நிராகரிக்கப்பட்டமை போன்ற விடயங்களின் தொடர்ச்சியாகவே இடமாற்றம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதன்பின்னரே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிரதேசவாசிகள் சந்தித்து பேசி, விடயத்தை தெரிவித்துள்ளனர். உடனடியாக, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்ச்சருடன் பேசிய டக்ளஸ், தனது அதிருப்தி தெரிவித்ததாக அறிய வருகிறது.

அரசியல் காரணங்களிற்காக அதிகாரிகள் பந்தாடப்படும் அரசியலை “அபிவிருத்தியின் நாயகர்கள்“ என தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகளினாலேயே வடக்கில்- குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த மோசமான அரசியல் கலாச்சாரம் நிச்சயம் அரச நிர்வாகத்தில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

மக்கள் நேர அரச நிர்வாகம், பொதுமக்களிற்கு இலகுவான அரச சேவை முறை பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேசிக் கொண்டிருக்கிறார். எனினும், சுயாதீனமாக அதிகாரிகள் பணியாற்ற முடியாத விதமாக, அரசியல் அழுத்தம் அதிகாரிகளிற்கு பிரயோகிக்கப்படும் மோசமான நிலைமை, நாட்டின் ஒரு பகுதியில் நீடிப்பதை அவர் அறியாமலிருக்கிறாரா?.

அங்கஜன் தரப்பும் கோட்டா அரசின் பங்காளிதான். டக்ளஸ் தேவானந்தா தரப்பும் கோட்டா அரசின் பங்காளிதான். ஆனால், டக்ளஸ் தேவானந்தா ஒரு தமிழ் தரப்பு. அங்கஜனிற்கு அப்படியான அடித்தளமில்லை. அங்கஜனை பலப்படுத்துவது தனியாக அரச தரப்பை பலப்படுத்துவதாக மட்டுமே அமையும். அரச நிர்வாகத்தில் அரசியல் தலையீடு ஆபத்தானது என்றாலும், வேறொரு விதமான- உத்திரீதியான சாதகமான அம்சத்தையும் இதில் அணுகலாம். அதாவது, டக்ளஸ் தேவானந்தா அதிக தலையீடு மேற்கொண்டு, அரச அதிகாரிகளை கட்டுப்படுத்துவது கூட தமிழ் மக்களிற்கு தற்போது ஏற்படும் அபாயத்தை தற்காலிகமாக தடுத்து நிறுத்தலாம்.

No comments

Note: Only a member of this blog may post a comment.