மாணவர்களிற்கு நாமம் வைத்தாரா துணைவேந்தர்?: போராட்டத்தில் இன்று நடந்தது என்ன? - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

மாணவர்களிற்கு நாமம் வைத்தாரா துணைவேந்தர்?: போராட்டத்தில் இன்று நடந்தது என்ன?


முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்களில் பல்கலைகழக மாணவர்களின் போராட்ட அணுகுமுறை தொடர்பில் மாணவர்களின் ஒரு சாரர் மற்றும் அரசியல் தரப்புக்களிற்குள் கடுமையான அதிருப்தி உருவாகியுள்ளது.

துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜாவின் நடவடிக்கைகளில் மாணவர்களின் ஒரு பகுதியினர் ஏமாற்றமடைந்து விட்டனர் என, இன்னொரு பகுதியினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணியினர், ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டம் தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருந்த போது, அந்த மண்டபத்திற்குள் முன்னறிவித்தல் இல்லாமல் பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் நுழைந்தனர்.

அங்கு கூட்டம் நடப்பதை, 3 கட்சிகளில் ஏதோ ஒரு கட்சியின் பிரமுகர்களே மாணவர்களிற்கு தகவல் வழங்கியிருப்பர்.

திங்கள்கிழமை கதவடைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் கோரிக்கையை அரசியல் கட்சிகளால் மறுக்க முடியவில்லை. கதவடைப்பு போராட்டத்திற்கு அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதற்குள் ஞாயிற்றுக்கிழமை துணைவேந்தரை த.சித்தார்த்தன் எம்.பி சந்தித்த போது, மாணவர்களை நேரில் சந்திக்க தயாராக இருக்கிறேன் என துணைவேந்தர் தெரிவித்தார்.

அதேநாளில், மாவை சேனாதிராசாவின் ஏற்பாட்டில் சமரச பேச்சு திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களிற்கும், துணைவேந்தருக்குமிடையிலான சந்திப்பு, பல்கலைகழகத்திற்கு வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நிலைமையை சுமுகமாக்குவது பற்றி இதில் ஆராயப்படவிருந்தது.

இதற்குள் எம்.ஏ.சுமந்திரனும் துணைவேந்தரை சந்திக்க கோரியிருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடுதிப்பென மாணவர்களின் போராட்டக்களத்திற்கு துணைவேந்தர் சென்றார். காலை 7மணிக்கு தூபிக்கான அடிக்கல் நாட்டலாம், போராட்டத்தை விடுங்கள் என்றார்.

இதை மாணவர்களின் ஒரு பகுதியினர் ஏற்றனர். இன்னொரு பகுதியினர் நிராகரித்தனர். இன்று கதவடைப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், காலையிலேயே அடிக்கல் நாட்டல் நிகழ்வு நடப்பது, போராட்டத்தை திசைதிருப்பும் நோக்கமுடையது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனினும், மாணவர்களின் ஒரு பகுதியினர் துணைவேந்தருடன் முரண்பட விரும்பவில்லை. ஒழுக்காற்று நடவடிக்கையாக வகுப்பு தடைவிதிக்கப்பட்டு, சர்ச்சையின் பின்னர் அண்மையில் மீள பல்கலைகழகத்தில் இணைக்கப்பட்ட மாணவர்களும் அதிலிருந்தனர். சர்ச்சையை கிளப்பாமலிருக்க அவர்கள் விரும்பியிருக்கலாம்.

எப்படியோ, எதிர்பார்த்தபடி கதவடைப்பில் குழப்பம் ஏற்பட்டது. தூபி அமைக்கப்படுவதால் பிறகெதற்கு கதவடைப்பு என்ற சந்தேகம் மக்களிற்கு ஏற்பட்டது.

அரசியல் கட்சிகளிடம் கதவடைப்பு கோரிக்கையை விடுத்த பல்கலைகழக மாணவர்கள், தெளிவான முடிவொன்றை எட்டுவதற்கு முன்னர்- காலையிலேயே போராட்டத்தை முடிப்பது பொறுப்பற்ற நடவடிக்கையென அரசியல் தரப்புக்கள் சுட்டிக்காட்டின.

எனினும், மாணவர்கள் காலை 7.00 மணிக்கு பின்னரே போராட்டத்தை கைவிட தயாராகி, ஊடகங்களை சந்திக்க விரும்பினர்.

எனினும், சில காரணங்களினால் ஊடகங்கள் தரப்பில் அங்கு காலையிலேயே செல்லவில்லை. இந்த ஒரே காரணத்தினாலேயே காலை 10.30 மணி வரை மாணவர் போராட்டம் நீண்டது.

ஒருவேளை, ஊடகங்கள் தரப்பிலிருந்து நேரகாலத்துடனேயே சென்று, மைக் வைத்திருந்தால், நன்றி வணக்கம் சொல்லிவிட்டு காலை 8 மணிக்கு முன்னதாகவே மாணவர்கள் வீடுகளிற்கு சென்றிருப்பார்கள்.

அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால், கதவடைப்பு பிசுபிசுப்பதுடன், மக்களிற்கு சலிப்பும் ஏற்படும்.

போராட்ட அறிவிப்புக்களோ, போராட்ட முயற்சிகளோ முக்கியமல்ல. அந்த செயல்முறை பற்றிய புரிதலும், அர்ப்பணிப்பும் அவசியம். அது, இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களிடம் இருந்ததாக தெரியவில்லை.

அடிக்கல் நாட்டிய பின்னர், தூபி அமைக்கப்படுமா என்ற உத்தரவாதமும் மாணவர்களிடமிருக்கவில்லை. “தூபி அமைக்க கேட்டோம். துணைவேந்தர் கோரிக்கையை ஏற்று அடிக்கல் நாட்டினார். போராட்டத்தை முடித்தோம்“ என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூபி அமைப்பதை உறுதிசெய்யுமாறு அரசியல் தரப்பினர், மாணவர்களிடம் குறிப்பிட்டனர்.

மாணவர்களின் ஒரு பகுதியினர் தூபியை இன்றே அமைப்போம் என கூறிய போதும், துணைவேந்தர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பின்னர், போராட்டக்களத்திலிருந்து மாணவர்கள் சார்பில் துணைவேந்தருடன் தொலைபேசியில் பேசினார். உடனே தூபி அமைக்கும் சிவாஜிலிங்கத்தின் கோரிக்கையை துணைவேந்தர் நிராகரித்தார். எப்பொழுது தூபி அமைக்கலாமென சிவாஜிலிங்கம் கேட்டபோது, நான் சொல்லும் வரை அதை யாரும் செய்ய வேண்டாம் என துணைவேந்தர் குறிப்பிட்டார்.

பல்கலைகழக வளாகத்திலிருந்து இராணுவம், பொலிசார் எப்பொழுது விலக்கப்படுமென சிவாஜிலிங்கம் கேட்டபோது, நாளை காலை வரை அவகாசம் வழங்கும்படி துணைவேந்தர் குறிப்பிட்டார்.

நாளை இராணுவம், பொலிசார் பல்கலையில் நிலைகொண்டிருந்தால், பல்கலைகழகத்திற்கு வெளியே போராட்டம் நடக்குமென சிவாஜிலிங்கம் எச்சரித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைகழக மாணவர்களிற்கு துணைவேந்தர் நாமம் வைத்தாரா என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.