Breaking News


கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் இதுவரை 2 மாணவர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு 122 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கின் கொரோனா நிலவரம் பற்றி இன்று (6) செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்திலே நேற்று 496 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஐந்து பேர் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு- பட்டாணிச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். கிளிநொச்சி பொறியில் பீடத்தில் கொரோனா தொற்றுடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மாணவனின் உறவினர்கள் இவர்கள். இந்த குடும்பத்துடன் தொடர்புபட்ட இன்னொருவருடன் அடையாளம் காணப்பட்டு இருப்பதால் இதுவரை அந்த கிராமத்திலிருந்து எழு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது அந்தக் கிராமம் முடக்கப்பட்டுள்ளது. அங்கு பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களது குடும்ப தலைவர் கொழும்பில் இருக்கிறார். அவர் அடிக்கடி மன்னாருக்கு வந்து வந்து சென்றிருக்கிறார். அவருக்கு கொழும்பிலே தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த தகவல் கிடைத்ததும் மன்னாரில் அந்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது. அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்ட போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களோடு தொடர்புடையவர்களை இனங்காணப்பட்டு எருக்கலம்பிட்டி பகுதியில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் கேகாலை மாவட்டத்தில் இருந்து வந்த இன்னுமொரு மாணவிக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மாணவனுக்கு அங்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது அங்கே 122 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், மருதனார்மடம் கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளருடன் தொடர்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்த ஒருவர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொழும்பில் இருந்து வந்து இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் டிசம்பர் மாதத்தில் 153 பேருக்கும், ஜனவரி மாதத்தில் இன்றுவரை 24 பேருக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் யாழ் மாவட்டத்தில் 11 பேருக்கும், வவுனியா மாவட்டத்திலிருந்து 7 பேருக்கும், மன்னார் மாவட்டத்திலிருந்து 5 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்குமாக 24 பேருக்கு இன்று வரை தொற்று உறுதியாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் கொழும்புக்குச் சென்று அங்கே ஒரு விடுதியில் தங்கியிருந்த போது அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அந்த முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் அங்கிருந்து தப்பி கிளிநொச்சிக்கு வந்திருக்கிறார்கள்.

அதன்பின்னர் அந்த 11 பேரில் மூன்று பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக எங்களுக்கு அறியக் கிடைத்தது. அந்த மூன்று பேரும் இனங்காணப்பட்டு தற்போது சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். ஏனையவர்கள் தற்போது இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு இருகிறார்கள். அவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகளை நாங்கள் இரண்டு வாரங்களின் நிறைவில் மேற்கொள்ள இருக்கிறோம்

No comments

Note: Only a member of this blog may post a comment.