Breaking News


தமிழ் தரப்புக்களை ஓரணியில் திரட்டும் முயற்சிகளிற்கான அழைப்பு விடுவதற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தும் போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அதற்கு பதிலளிப்பது கூட இல்லையென விசனம் தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் வாழிடங்கள், கலாச்சார முக்கியத்துவமான இடங்களை குறிவைத்து கோட்டா அரசு செயற்பட்டு வரும் நிலையில், அதை கூட்டாக எதிர்கொள்வது எப்படியென ஆராய்வதற்காக அனைத்து தமிழ் தேசிய கட்சிகளிற்குமிடையிலான கூட்டம் இன்று (24) இடம்பெற்றது.

இதில் தமிழ் தேசிய பரப்பில் இயங்குவதாக கூறும் அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன. ஒரேயொரு தூய தமிழ் தேசிய கட்சியாக தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை.

இது குறித்து, சந்திப்பின் பின்னர் சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,

அரசு சாராத தமிழ் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரை உள்ளடங்கிய ஒரு ஆலோசனை குழு கூட்டத்தை இன்று நடத்தியிருந்தோம். அரசியல் கட்சிகள் என்று பார்க்கும் போது 10 அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம் இதில் ஒன்பது தமிழ் அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொள்ளவில்லை.

அவர்களுக்கு நேற்று முன்தினம் இடம்பெற்ற பூர்வாங்க கூட்டத்திலும் அழைப்பு விட்டிருந்தோம். அதாவது சட்டத்தரணி சுகாசுடன் தொடர்பு கொண்டபொழுது தான் வெளிமாவட்டத்தில் இருப்பதாகவும் கட்சியினுடைய தலைவர்களை தொடர்பு கொள்ளுமாறு கூறியிருந்தார்.

அதற்கமைய நேற்றையதினம் கட்சியினுடைய பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டபோது பதில் கிடைக்கவில்லை. இரவு நேரம் சுகாசுக்கு, இன்றையதினம் காலை 10 மணிக்கு கூட்டம் இருக்கின்றது என்பதனை உங்களுடைய கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அறிவிக்குமாறு நீண்ட குறும் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தோம். இன்று காலையும் அனுப்பியிருந்தேன் எந்த பதிலும் வரவில்லை. எதிர்காலத்திலாவது அவர்களுடைய ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைக்கும் என நம்புகின்றோம்.

எந்த கட்சி, எந்த முன்னணி என்பதல்ல இங்கு பிரச்சினை. ஒட்டுமொத்த தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய, அசுர வேகத்திலே செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளுவதற்கான ஒரு தந்திரோபாய வேலைத்திட்டங்களை வகுப்பதற்காகத்தான் இந்த கூட்டம் ஒழுங்குபடுத்துள்ளது.

பங்குபற்றிய அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் கேட்டிருக்கின்றோம். நீங்கள் தலா இரண்டு பிரதிநிதிகளை தந்து ஒரு நடவடிக்கை குழுவை அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை ஆராய வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் சார்பிலே ஒரே நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்பது தான் இந்த அமைப்பின் நோக்கம்.

இந்த நடவடிக்கை குழு என்பது மக்கள் போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது ஏனைய விடையங்களை எவ்வாறு கையாள்வது என்பதை பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றுக்கொண்டு ஒரு சரியான இலக்கை நோக்கி நாங்கள் பயணிப்போம்” என தெரிவித்துள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.