Breaking News


  • 2009 முடிவடைந்த இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட மக்களுக்காக நினைவு தூபி ஒன்றை கட்டுவதற்கு மாணவர்கள் முயன்றார்கள்.

ஆனால் அவர்களின் முயற்சி ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

தொடர்ந்து வந்த மாணவர் ஒன்றியங்கள் முயற்சி எடுத்தாலும் அது கைகூடாமலே போய் கொண்டிருந்தது. ஆனால் மீண்டும் 2018இல் அதை கட்டுவதற்கான முயற்சி எடுத்தார்கள் மாணவர்கள்.

அப்போது கூட பல தரப்பட்ட தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அப்போது இலங்கை ஜனாதிபதியின் செயலாளராக இருந்த கலாநிதி ஒஸ்டின் பெர்னாண்டோ அந்த முயற்சியை கை விடுமாறு எச்சரித்திருந்தார். தொலைத்தொடர்பு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த பொழுது துணைவேந்தர் பேராசிரியர் ஆர். விக்கினேஸ்வரனுக்கு நேரிடையாக இந்த எச்சரிக்கையை அவர் விட்டிருந்தார் .

ஒஸ்டின் பெனாண்டோ ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆலோசகராக கடமையாற்றியிருந்தவர். தவிரவும் இந்தியா, அமெரிக்கா, சீனா, யப்பான் போன்ற நாடுகளுடனான வெளியுறவு கொள்கைளுடன் தொடர்பு கொண்டவர் . இலங்கை அரசு இனப்படுகொலை செய்யவில்லை என்பதை கூறும் ஒருவர் .
2015 மைத்திரிபால சிறிசேனா கடமையேற்றவுடன் அவருக்கான செயலாளராக பொறுப்பேற்று கொண்டவர் .

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழுவின் ஆதிக்கத்துக்குட்பட்ட நிகழ்வு ஒன்றுக்கு ஜனாதிபதி செயலகம் தலையிட்ட சம்பவம் இதுவாகதான் இருக்கும்.

இருந்தாலும் மாணவர்கள் தொடற்சியாக முயற்சியினை மேற்கொண்டு 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அன்று ” முள்ளிவாய்க்கால் நினைவு தூபி ” யை அமைத்தார்கள்.

அப்பொழுது துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஆர். விக்கினேஸ்வரனுக்கு பல அழுத்தங்கள் இருந்தும் மேற்படி நினைவுத்தூபி அமைப்பதற்கு தடை எதுவும் விதிக்கவில்லை.

கிட்ட தட்ட அதே காலப்பகுதியில்தான் யாழ்ப்காணப் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பொங்குதமிழ் பிரகடன பதாகையும் மாணவர்களால் புதிதாக சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அழுத்தங்களுக்கு அடிபணிந்து, இந்த இரண்டு நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்தாமல்விட்டது மட்டும் அல்லாமல் அந்த திறப்பு விழாக்களிலும் பங்கு பற்றியிருந்தார் துணைவேந்தர் பேராசிரியர் ஆர். விக்கினேஸ்வரன்.

இதனாலேயே எந்தவித விசாரணைகளுமின்றி, அவரை துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கியிருந்தார்கள். வெறுமனவே ஒரு கடிதம் மூலம் அவரது பதவி பறிக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் ஏன் பதவி பறிக்கப்படுகிறது என்பதற்கான விளக்கமும் இருந்திருக்கவில்லை.

துணைவேந்தர் ஒருவர் விசாரணையின்றி பதவி நீக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமும் இதுவாகதான் இருக்கும்.

அவரது பதவி நீக்கம் தொடர்பான முடிவு தேசிய பாதுகாப்பு சபையில் எடுக்கப்பட்டதாக உறுதிப்படுத்த முடியாத சில செய்திகள் சொல்லியிருந்தன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைப் பதவிநீக்கம் செய்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறையானது பல்கலைக்கழகச் சட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) ஒரு குழுவானது, நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருடனான கூட்டத்தில் சுட்டிக்காட்டியது.

அதற்குப் பதிலளிக்கையில், “முழுச் செயன்முறையும் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் பெறப்பட்ட தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்தது” என்று அமைச்சர் கூறினார்.

இவை எல்லாம் உறுதிப்படுத்தி நிற்பது ஒன்றைதான். பேராசிரியர் ஆர்.விக்கினேஸ்வரனின் பதவி நீக்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. துணைவேந்தரை பதவி நீக்கம் செய்வதாயின் ஒன்றில் அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்க வேண்டும் அல்லது நிதி கையாடல் செய்திருக்க வேண்டும். ஆனால் பேராசிரியர் ஆர்.விக்கினேஸ்வரன் அந்த இரண்டில் எதையுமே செய்யாதவர். ஆகவே அவரின் பதவி நீக்கம் பல்கலைக்க மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அப்பால் , இராணுவ உயர் அதிகாரிகளால் எடுக்கப்பட்ட ஒன்று .

இலங்கையின் வரலாற்றில் உயர் கல்வி துறை ஒன்றில் இராணுவம் நேரடியாக தலையிட்ட முதலாவது சந்தர்ப்பமாக இதை நோக்கலாம் .

அதன் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு தகுதி வாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் கந்தசாமி நியமிக்கப்பட்டு அவரினால் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் நடத்தப்பட்டு வந்தது .

2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் தற்பொழுது துணைவேந்தராக இருக்கும் பேராசிரியர் சிறீ சற்குணராஜா நியமிக்கப்பட்டார் .

மென்போக்கான தன்மை கொண்ட அவர் துணைவேந்தராக நியமித்த அன்றே யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதியை போய் சந்தித்திருந்தார் .

பேராசிரியர் ஆர்.விக்கினேஸ்வரனின் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் காத்திரமான எதிர்ப்பை பதிவு செய்ய தவறிவிட்டிருந்தது. அவருக்காக குரல் கொடுக்க அரசியல்வாதிகளும் தவறியிருந்தார்கள்.

இருப்பினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் , ஈபி ஆர் எல் எவ் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் போன்றோர் பெயரளவான அறிக்கை ஒன்றின் மூலம் அந்த செயலை கண்டித்திருந்தார்கள் .

நீதிக்காக குரல் கொடுத்து , இறுதிவரை போராடியிருக்க வேண்டிய யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் பெயரளவான அறிக்கைகளுடன் தங்கள் போராட்ட பரப்பை சுருக்கி கொண்டிருந்தது.

இதன் விளைவையே தற்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைகழக சமூகம் அனுபவிக்கிறது.

தற்பொழுது மாணவர்கள் மற்றும் மக்கள் போராடும் போராட்டமாவது இதற்கான ஒரு நிரந்தர தீர்வு பெற்று தருவதாக அமைய வேண்டும் .

நாட்டில் அமைக்கப்பட்ட பல கட்டடங்கள் உரிய அனுமதி பெறப்படாமல் கட்டப்படுவதும் பின்னர் அனுமதி பெறப்படுவதும் ஒன்றும் புதிய சம்பவங்கள் அல்ல . ஏன் வடக்கு – கிழக்கு பகுதியில் அமைந்துள்ள விகாரைகளில் எத்தனை விகாரைகள் உரிய அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்டிருந்தன ? பின்னர் அது பிரச்சனையா கிளப்பட்ட பொழுது, அனுமதிகள் பெறும்
நடைமுறைகளை பின்பற்ற வைத்து , அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லயா ?

அதே மாதிரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள “முள்ளிவாய்க்கால் நினைவு தூபி”க்கு உரிய அனுமதிகளை கல்வி அமைச்சு வழங்கவேண்டும் .

அதுவரை இந்த போராட்டம் தொடர வேண்டும். அரசியல்வாதிகள் முதல் கொண்டு அனைவரும் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இல்லையேல் ” இது இத்துடன் முடிந்து விட போவதில்லை “

” நந்தி சின்னம் வரை தொடரும் “

No comments

Note: Only a member of this blog may post a comment.