Breaking News


அமெரிக்க அனுசரணையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களிற்கு எதிராக செயற்பட்டு தவறிழைக்காதீர்கள். ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக பேசும் ஆளும் தரப்பு பிரதிநிதிகளின் வாய்களை அடக்குங்கள். இந்தியாவிற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலிருந்து மேலும் தவறிழைக்கிறீர்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சுட்டிக்காட்டியுள்ளார் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி.

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது கடிதம் வருமாறு-

மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன் மொழிந்துள்ள பிரேரணை விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இவ்வேளையில் நாடு எதிர்கொள்ளவுள்ள தர்மசங்கடமான நிலையிலிருந்து அதை காப்பாற்றவும் கண்டிக்கப்பட்ட நாடு என சரித்திரம் கூறப்போவதைத் தடுக்கவும் வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு உங்களுக்கு இதை எழுதுகிறேன்.

நான் ஒரு ஜோதிடனோ அல்லது குறி சொல்பவனோ அல்ல. ஆனால் இந்த நாட்டையும் மக்களையும் இதயபூர்வமாக நேசிப்பவன். பழையவற்றைத் தோண்டியெடுத்து மீண்டும் எனது இதயத்தை புண்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால், கடந்த காலங்களில் நாட்டினதும், மக்களினதும் நலனைக் கருத்தில்கொண்டு சில விடயங்கள் தொடர்பில் நான் எடுத்த உறுதியான தீர்மானங்கள் எனது நாடாளுமன்ற ஆசனத்தையே இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டிருந்தன.

அதுமட்டுமன்றி “துரோகி” என நான் அழைக்கப்படவும் இவை வழி அமைத்தன. இவற்றை நீங்கள் அறியாதவர் அல்லர். மிகவும் சக்தி வாய்ந்த ஒருமனிதன் என்ற வகையில் எனது நேர்மை திறனையும், கௌரவத்தையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். நான் உங்களிடம் இருந்து ஏதாவது உதவியைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளவும் இல்லை. என் மீது செல்வாக்குச் செலுத்தும் அளவுக்கு நீங்கள் எனக்கு எதையும் செய்யவும் இல்லை. அது மட்டுமா? எனது சொந்த நலனுக்காக எனது அந்தஸ்தை நான் எப்போதாவது பயன்படுத்தியதும் இல்லை. கிளிநொச்சியுடனான எனது உறவு ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டது. ஆயினும் கிளிநொச்சியிலோ அல்லது வேறு எங்காவது ஒரு இடத்திலோ எனக்கெனச் சொந்தமாக ஒரு துண்டு காணி கூட இல்லாதவன் நான். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக நான் வசித்து வந்த காணியை அதன் உரிமையாளர் மிக குறைந்த விலையில் எனக்கு விற்பனை செய்துள்ளார். இங்கு என்னைச் சந்திக்க வந்த இளைய மற்றும் மூத்த அரசியல்வாதிகளின் நினைவுச் சின்னமாக இதை பேண இருக்கிறேன்.

அவ்வப்போது நான் எனது ஆலோசனைகளை உங்களுக்கு தெரிவித்துள்ளேன். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெற்றுக்கொண்ட வெற்றி ஒரு கூட்டு முயற்சியால் கிடைத்ததே தவிர அது ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ சொந்தமானது அல்ல. இந்த வெற்றிக்கான பங்களிப்பு வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு இடங்களிலிருந்து கிடைத்துள்ளது. படையில், சேர்த்துக்கொள்ளப்பட்ட இளைஞர்கள், சகல இன மதங்களைச் சேர்ந்த மக்கள் இந்த வெற்றிக்காக தியாகம் செய்துள்ளனர். சுருங்கச் சொன்னால் எமது நாடு மட்டுமன்றி எல்லா நாடுகளுமே வெவ்வேறு வடிவங்களில் இதற்குப் பங்களிப்பு செய்துள்ளன. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஸ்கந்தினேவிய நாடுகள் உட்பட மேலும் பல நாடுகள் மொத்தத்தில் எல்லா நாடுகளுமே விடுதலைப்புலிகளை தடை செய்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக எமது நெருங்கிய அயல் நாடான இந்தியாவின் தமிழ் நாட்டின் கியூ கிளை அதனது பங்களிப்பு இல்லாதிருந்திருந்தால் நாடு அடிமைப்பட்டிருக்கும் என்பதை நிரூபித்திருக்கிறது.

மேன்மை மிகு ஜனாதிபதி அவர்களே,

அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவளிக்க முன்வந்த சகல நாடுகளையும் கண்டித்தவர்களை அடக்கத் தவறியமை நீங்கள் விட்ட மிகப் பெரிய தவறாகும். எந்த ஒரு நாடும் எமது நாட்டை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவற்கான உள்ளார்ந்த நோக்கத்தைக் கொண்டிருப்பதற்கு எமது நாட்டில் என்ன இருக்கிறது. இந்தப் பிரேரணையை ஆதரிப்பதற்கு அல்லது அது தொடர்பில் நடுநிலைமை வகிப்பதற்கு முன்வந்துள்ள நாடுகளைக் கண்டிக்காதிருக்கவும் அவற்றை வரவேற்கவும் முன்வர வேண்டும். ஏனெனில், இந்த தீர்மானம் பௌத்தத்துக்கு எதிரானது அல்ல.

நீங்கள் உலகைச் சுற்றி வந்து இந்தப் பிரேரணைக்கு எதிராக பல்வேறு நாடுகளின் ஆதரவைத் தேடுவது உங்களது இரண்டாவது தவறாகும். இந்த விடயத்தில் நட்பு நாடுகள் கூட ஒன்றில் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கலாம் அல்லது வாக்களிக்காது விடலாம் என்பதை உறுதியாக நம்புங்கள். அநேகமாக எல்லா நாடுகளுமே மனித உரிமை மீறலுக்கு எதிரான உணர்வை அல்லது நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. குடியேற்ற நாட்டு ஆட்சிக் காலத்தில் தமது முன்னோர்கள் மக்களுக்கு செய்தவற்றையிட்டு அவர்கள் ஆத்திரமடைந்திருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம். இவ்விடத்தில் பழையவற்றை நினைவூட்டுவது எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எல்லப்பொல குடும்பத்துக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன என்று யாராவது கேட்டால் அதற்கான பதில் எம்மிடம் இல்லை.

யுத்தத்தின் இறுதி கட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டன, ஆனால் இதற்கு சகல இராணுவ வீரர்களையும் பொறுப்பாக்க முடியாது. அதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. செய் அல்லது செத்து மடி என்பது தான் அவர்களது நிலை. இக்கூற்று ஸ்பானிய படையினர் இங்கிலாந்தை தாக்கிய பொழுது பங்கு கொண்டிருந்த இராணுவத்தினர் சம்பந்தமானது, “அவர்களைச் சுற்றி இடம், வலம், எதிர் என்றில்லாது எங்குமே பீரங்கிகள் முழங்கின, குண்டுகள் பாய்ந்தன. ஆனால் சாதாரண சிப்பாய்கள் ஏன் என்று கேட்க முடியாது. அவர்கள் தமது கடமையை செய்யவேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும். இதுவே அவர்களது பணியாக இருந்தது.” யுத்த முனையில் இருந்த இராணுவ வீர்ர்களின் நிலை இதுதான்.

அவர்களைத் தண்டிப்பதன் ஊடக அவர்களது மனித உரிமைகள் மீறப்படக் கூடாது. ஆனால், உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டிய கடமையும் உரிமையும் உங்களுக்கு உண்டு. நீங்கள் மக்களுக்கான கடமையை செய்யும் அதேநேரம் இராணுவ வீர்ர்கள் தண்டனையிலிருந்து தப்புவதற்கான சட்ட உதவிகளையும் வழங்குங்கள். பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் இதை நீங்கள் தட்டிக் கழிக்க முடியாது,

உங்களது மூன்றாவது தவறு மற்றைய இரு தவறுகளையும் விடப் பெரியது, முக்கியமானது. அது என்னவென்றால் நீங்கள் இந்திய அதிகாரிகளுக்கு வாக்களித்ததற்கு ஏற்ப 13 ஆவது திருத்தத்தை அமுல் படுத்துவது குறித்து அக்கறையின்றி இருக்கிறீர்கள். நீங்கள் அவர்களுக்கு 13 பிளஸ் அதாவது 13க்கு மேலதிகமாக வழங்கப் போவதாக வாக்களித்திருக்கிறீர்கள். மற்றெல்லாவற்றையும் விட மிக மோசமான தவறு இதுவே. இந்திய இராஜதந்திரம் மற்றும் கௌரவம் ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறியிருக்கிறீர்கள் என்பதே இது குறித்த எனது பார்வையாகும்.

25 மே 1995 என திகதியிடப்பட்ட எனது பழைய கோப்பு ஒன்றிலிருந்து கட்டுரை ஒன்றைத் தேடி எடுத்தேன். குறிப்பிட்ட திகதியிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் சிங்கள தினசரியான ‘தினமின’ வில் இந்த கட்டுரை வெளியாகியிருந்தது. இந்தக் கட்டுரை தற்போதைய நிலைக்குப் பொருத்தமானதாகக் காணப்படுகிறது, அதிலிருந்து சில விடயங்களை உங்களுக்கு எடுத்துக் கூறுவதுடன் கட்டுரையின் சிங்கள மற்றும் ஆங்கில பிரதிகளைத் தங்களின் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளேன்.

“இன்றைய இந்திய இலங்கை உறவுகள் என அந்தக்கட்டுரைக்குத் தலைப்பிடப்பட்டிருந்தது”

இந்தக் கட்டுரையில் இந்தியாவும் இலங்கையும் அண்மையில் அதாவது 20 மைல் தொலைவில் இருப்பதைக் குறிப்பிட்டு இரு நாடுகளும் நல்லுறவைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தேன். இதற்கான காரணம் இந்தியா எமது நட்பு நாடு என்பது மட்டுமல்ல தேவை ஏற்படும் போது எமக்கு உதவுவதும் இந்தியாவே என்பதை காட்டுவதற்காகும். நேரு-கொத்தலாவல உடன்படிக்கையில் ஆரம்பித்து சிறிமாவோ-சாஸ்திரி உடன்படிக்கை வரை இந்தியா அண்மைக் காலத்தில் இங்கு குடியேறிய இந்திய வம்சாவளியினரை ஏற்றுக் கொள்ளவும் ஒப்புக் கொண்டது. எமது கட்சி இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இந்தியத் தலைவர்களது தயார் நிலையை எவரும் போற்ற வேண்டும். ஏனெனில், இந்தப் பிரச்சினை அவர்களது சொந்தப் பிரச்சினை அல்ல.

இன்று சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருக்கும் கச்சதீவு பற்றி நான் பின்வருமாறு கூறியிருந்தேன். காலஞ்சென்ற இந்திராகாந்தி அம்மையார் அவர்கள், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கூடப் பெறுமதியற்ற கற்பாறைகள் நிறைந்த தீவு என்று கூறியே கச்சதீவை இலங்கையிடம் கையளித்தார்.ஆனால் இவ்வாறு செய்வதன் ஊடாக தமது நாடு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர் கொள்கிறது என்பதும் அவருக்குத் தெரியும். அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த அவர் இதை ஒரு நட்புறவு சமிக்ஞையாகவே பார்த்தார். இலங்கை ஒருபோதும் தன்னை ஏமாற்றப் போவதில்லை என்றும் அவர் நம்பினார்.

இரு நாடுகளுக்கும் முக்கியமானதும் பொருந்தக்கூடியதுமான பல விடயங்களை அந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்தேன். மற்றெல்லாவற்றையும் விட கச்சதீவு பற்றி நான் குறிப்பிட்டுள்ளவை பற்றிக் கவனம் செலுத்துமாறு நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். அன்றைய இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயகா கேட்டுக்கொண்டதற்கு இணங்க கச்சதீவு கையளிக்கப்படுவதற்கு எதிராக இந்திய மாநிலங்கள் தமது எதிர்ப்பை காட்டின. தமிழ் நாட்டின் எதிர்ப்பு இதில் முக்கியமானது. விடுதலைப்புலிகள் கச்சதீவை அதனது தளமாகப் பாவிக்கும் என அவர் கவலை கொண்டிருந்தார். ஆனால் இந்திரா காந்தி அம்மையார் கச்சதீவு ஒன்றுக்கும் உதவாத கற்பாறை தீவு எனவும் அது கையளிக்கப்படுவதை எதிர்க்க வேண்டாம் எனவும் கேட்டு எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்தினார். இருப்பினும் இந்தத் தீவு என்றோ ஒரு நாள் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது அவருக்குத் தெரியாதது அல்ல. அவ்வாறான சிந்தினை கொண்டவர்களை நாம் குறைகூற முடியாது. ஏனெனில் சீனாவும் இலங்கையும் இப்போது நெருங்கிய உறவுகளைப் பேணிவரும் அதேவேளை, இந்தியா-இலங்கை உறவுகள் தற்போது சீர்கெட்டுள்ளன. எனவே இந்திய இலங்கை உறவுகள் பற்றி அக்கறையுடன் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

இந்தியாவின் இராஜதந்திரம் மற்றும் ஜனநாயகத்திலிருந்து இலங்கை கற்றுக்கொள்ளவேண்டிய பல விடயங்கள் உள்ளன. உண்மையில் மூல ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களுக்குப் பல உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. இப்போது இலங்கை கச்சதீவின் மீது முழு உரிமை கொண்டுள்ளது. பல இந்திய மாநிலங்கள் கச்சதீவை மீளப் பெற வேண்டும் எனக் கோருகின்றன. இவற்றில் தமிழ் நாடு முக்கியமனதாகும். இப்போது இவ் விடயம் நீதிமன்றத்திடம் உள்ளது. மத்திய அரசு வேண்டுமானால் கச்சதீவை மீளப் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு நிகழும் பட்சத்தில் இலங்கையும் மௌனமாகிவிடும். இந்திய அரசு விரும்பினால் உயர் நீதி மன்றமும் அதற்கு அனுமதி அளித்திருக்கும், ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் மத்திய அரசும் கச்சதீவை திரும்ப பெறப்போவதில்லை என அறிவித்துவிட்டது. இத்தகைய ஒரு நிலையில் நாம் என்ன செய்திருக்க வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்.

கௌரவத்துக்குரிய ஜனாதிபதி அவர்களே. முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்திரா காந்தி மரணித்துவிட்ட போதும் அவர் எடுத்த தீர்மானத்தை அவமதிக்கும் வகையில் செயற்படுவதை இந்திய அரசு விரும்பவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினை தேர்தலின் போது முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஓர் இந்திய தலைவர் ஒரு முறை இவ்வாறு கூறினார்.” நாம் நேசிக்கும் சமுதாயத்துக்குப் பொய் கூறி தேர்தலில் வெற்றியீட்டுவதை விட உண்மையை கூறி தோல்வியை ஏற்றுக்கொள்வது சிறந்தது”.

இந்த உணர்வையே இந்திய அரசும் கொண்டுள்ளது. 55 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் இந்த கொள்கையையே நானும் பின்பற்றுகிறேன். 1947இல் நீக்கப்பட்ட சட்ட சபையில் இருந்த தமிழ் உறுப்பினர்களுக்கு தேசபிதா கௌரவ டி.எஸ்.சேனநாயகா அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதி இந்திய பிரஜா உரிமை சட்டத்தின் ஊடாகக் கைவிடப்பட்டது என நான் கூறினால் அது மிகையாகாது என நான் நம்புகின்றேன்.

மேலும் எதிர் கட்சியின் அழுத்தம் காரணமாக காலம் சென்ற எஸ். டப்ள்யூ. ஆர்.டி. பண்டாரநாயகா அவர்கள் பண்டா-செல்வா ஒப்பந்தத்தை தமது கைகளாலேயே கிழித்து எறிந்தார். தவிர, சமஷ்டி கட்சி உறுப்பினர்களும் அதன் தலைவர் எஸ். ஜே.வி.செல்வநாயகமும் அரசுக்கு ஆதரவளித்தபோதும் டட்லி- செல்வா உடன்படிக்கை கிடப்பில் போடப்பட்டது. உங்களால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையும் இயற்கை மரணத்தைத் தழுவிக் கொண்டது.

மேன்மை மிக்க ஜனாதிபதி அவர்களே! கடந்த காலத்தை மறந்து தற்போது நிலவும் நிலமையின் தேவையை உணர்ந்து 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தைரியமாக நடவடிக்கை எடுங்கள். எமது நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக காலம் சென்ற இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் தமது உயிரையே தியாகம் செய்தார். மாபெரும் நாடொன்றின் பெருந் தலைவர் ஒருவருக்கு நீங்கள் செலுத்தும் உயரிய மரியாதை இதுவாகத்தான் இருக்கும். 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்வதன் மூலம் அமெரிக்காவால் பிரேரிக்கப்பட்ட தீர்மனத்துக்கு நீங்கள் பதிலளிக்க முடியும். சர்வதேச விசாரணையைத் தடுப்பதற்கான முதல் நடவடிக்கையாகவும் இது அமையும்.

இறுதியாக இந்தத் திருத்தத்துக்கு வாக்களிக்குமாறு அங்கத்துவ நாடுகளை மனித உரிமை பேரவையில் உள்ள உங்கள் பிரதிநிதிகள் கேட்க வேண்டும். ஏனெனில் அந்தத் திருத்தம் யுத்த காலத்தில் உயிர்களையும் உடமைகளையும் இழந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்குதல் போன்ற விடயங்கள் ஒரு கமிட்டியினால் அதாவது பிரேரணையைச் சமர்ப்பித்த நாடுகளைக் கொண்ட கமிட்டியினால் இந்தியப் பிரதிநிதியின் தலைமையில் ஆராயப்படும். நாட்டின் புகழைக் காப்பாற்றும் பொறுப்பு உங்கள் கைகளிலேயே உள்ளது.

கடமையை உணர்ந்த இந்த நாட்டின் ஒரு பிரஜை என்ற வகையில் எந்த ஒரு நாட்டுக்கும் குழப்பமோ அல்லது வருத்தமோ ஏற்படாத வகையில் எனது கடமையை செய்துள்ளதாக உணர்கிறேன்.

No comments

Note: Only a member of this blog may post a comment.