மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்கள் ஒருவர் சேற்றுக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை தீவு, பிரப்பம் வளைவு பகுதியில் உள்ள வீதியில் குழிக்குள் குடும்பத்தோடு வீழ்ந்து மூழ்கிய மீனவர் ஒருவர் நேற்று முன்தினம் (23) மாலை 5.00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வந்தாறுமூலையில் வசிக்கும் பேதுறு சிவராசா (62) என்பவரே சேறும் சகதியும் நிறைந்த குழிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டவராகும்.
இவர் தனது மனைவி மற்றும் 9 வயது 13 வயதுடைய பேரப்பிள்ளைகள் இருவருடனும் வழமையாக மீன்பிடித் தொழில் செய்து வருபவர் என்றும் சம்பவ தினம் அந்தக் குடும்பத்தினர் பிரப்பம் வளைவுப் பகுதியிலுள்ள வீதியைக் கடந்தபோது அங்கு நீர் நிரம்பியிருந்த வீதியிலுள்ள ஆழமான குழிக்குள் சேற்றில் மூழ்கியுள்ளார்.
வீதியால் தனது 9 வயதுப் பேரனை சுமந்து கொண்டு சென்ற கணவர் வீதியில் இருந்த குழிக்குள் விழ, பின்னால் வந்த மனைவியும் வீழ்ந்துள்ளார்.
இதனை அறிந்த மூன்றாவதாக வந்த 13 வயதான பேரன் தனது தம்பியின் தலைமுடி நீருக்கு வெளியே தெரியவர அவரைப் பிடித்ததிழுத்து வெளியே கொண்டு வந்து விட்டு பாட்டியின் தலைமுடியையும் பிடித்திழுத்து காப்பாற்றிவிட்டு பாட்டனாரைத் தேடிய பொழுது அவர் காணாமல் போயுள்ளார்.
சிறுவன் அப்பகுதியில் கூச்சலிட்டு அயலில் நின்றவர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் தேடிய பொழுது குறித்த நபர் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
No comments
Note: Only a member of this blog may post a comment.