Breaking News


முதலாவது லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி சுவீகரித்தது.

இன்று இரவு காலி கிளாடியேட்டர்ஸ் அணியை 53 ஓட்டங்களால் வீழ்த்தி கிண்ணத்தை வென்றனர்.

அதிகமாக ஒரு தலைப்பட்டசமாக ஆட்டம் அமைந்தது, இரசிகர்களிற்கு சுவாரஸ்ய குறைவை ஏற்படுத்தினாலும், பெருந்தொற்றின் போது வெற்றிகரமான தொடர் நடத்தி முடிக்கப்பட்டதில் திருப்தியடையலாம்.

மற்றும்படி, யாழ்ப்பாண அணியென கூறப்பட்ட போதும், இறுதிப் போட்டி, அரையிறுதி போட்டிகளில் எந்த வடக்கு, தமிழ் வீரரும் ஆடவில்லை. இதனால் தொடர், தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை.

வெற்றிக்கூட்டணியொன்று களமிறக்கப்பட்டதாக, வழக்கமான கிரிக்கெட் காரணம் கூறப்பட்டாலும், அந்த பிராந்திய வீரர்களும் இணைக்கப்பட்டு, அவர்களையும் கொண்ட அணியின் பலத்துடன் களமிறங்குவதே நியாயமானது. தற்பேதைய அணிச்சேர்க்கை, அணி நிர்வாகத்திற்கு உதவலாம். ஆனால் வடக்கு கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவாது.

இன்று நாணயச்சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் முதலில் ஆடி, 6 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை சேர்த்தனர். கடைசிக்கட்டத்தில் திசர பெரேரா காட்டடி அடித்ததே ஸ்கோர் எகிற காரணம். அவர் 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களை பெற்றார். சொய்ப் மாலிக் 35 பந்துகளில் 46 ஓட்டங்கள் பெற்றார்.
தொடக்க கூட்டணிக்கு அவிஸ்க பெர்ணான்டோ, ஜொனதன் சார்லஸ் 44 ஓட்டங்களை பெற்றனர். அவிஸ்க 27, சார்லஸ் 26 ஓட்டங்களை பெற்றனர்.
தனஞ்ஜய லக்ஸன் 36 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

பதிலளித்து ஆடிய காலி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை பெற்றது. தொடக்க வீரர் ஹசரத்துல்லா முதல் ஓவரிலேயே வீழ்ந்தார்.

காலியின் முதுகெலும்பும், இந்த தொடரில் அதிக ஓட்டங்களை குவித்தவருமான தனுஷ்க குணதிலக 1 ஓட்டத்துடன் ரன் 2வது ஓவரில் வீழ்ந்தார். தவறான புரிந்துணர்வில் கொஞ்சம் தயங்கி, பின்னர் நடு பிட்சில் பந்து வீச்சாளர் சுரங்க லக்மலுடன் மோதி ரன் அவுட்டானார்.

பின்னர் பானுக ராஜபக்ச 17 பந்துகளில் 40ஓட்டங்கள் விளாசினார். அவரும் வீழ்ந்த பின்னர் காலி வரிசையாக காலியானாது. இடையில், பாகிஸ்தானின் அசாம் கான் 17 பந்துகளில் 36 ஓட்டங்கள் பெற்றார். அதில் 4 சிக்சர்கள் உள்ளன. சில அனாயாசமான ஷொட்களை ஆடினார்.

ஷகான் ஆராய்ச்சிகே 17, செகான் ஜெயசூரிய 15. இவர்கள் மட்டுமே இரட்டை இலக்க ஓட்டம் எடுத்தனர். 7 வீரர்கள் ஒன்றை இலக்க ஓட்டம்.

காலியின் விரட்டலில் சுவாரஸ்யமே இருக்கவில்லை. தனுஷ்க குணதிலகவின் புண்ணியத்தில் இறுதிக்கு எட்டிப்பார்த்த திருப்தியுடன் விடைபெற்றார்கள்.

சொகைப் மாலிக், உஸ்மான் சின்வாரி தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.