Breaking News


நாளை நடைபெறவுள்ள யாழ் மாநகரசபை தேர்தலில் வி.மணிவண்ணன் களமிறங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு தகவல்கள் உலாவுவதுடன், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வி.மணிவண்ணன் தனது முடிவை சற்று முன்னர் திடீரென அறிவித்தார். இதேவேளை, மணிவண்ணனின் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, மணிவண்ணன் களமிறங்குவார் என்ற தகவல் அரசல்புரசலாக அடிபட்டது.

அண்மையில் மணிவண்ணனின் வீட்டுக்கு எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று நீண்ட மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதன் பின்னரே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இதேவேளை, நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல விடயங்களில் இரு தரப்பும் நெருக்கமாக செயற்பட்டன.

இதேவேளை, யாழ் மாநகரசபை முதல்வராக மீண்டும் ஆனல்ட் தெரிவாவதை எம்.ஏ.சுமந்திரன் விரும்பியிருக்கவில்லை. இதனால், கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சொலமன் சூ சிறிலை களமிறக்க கேட்டுக் கொண்டார்.

மாநகரசபை தேர்தல் முடிந்த கையோடேயே, சிறிலை முதல்வராக்க வேண்டுமென பல தரப்பும் கோரியிருந்தன. அவர் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக செயற்பட்டவர் என்ற காரணத்தையும் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும், அப்போது அதையெல்லாம் கணக்கிலெடுக்காத எம்.ஏ.சுமந்திரன், ஒற்றைக்காலில் நின்று ஆனல்ட்டை முதல்வராக்கினார்.

எனினும், இப்பொழுது- ஆனல்ட் அண்மையில் சுமந்திரனுடன் முரண்பட்டு விட்டார் என்பதால்- சிறிலை முதல்வராக்க சுமந்திரன் ஆதரவாளர்கள் தீவிரமாக செயற்பட்டு வந்தனர். அது குறித்து சமூக ஊடகங்களிலும், ஆதரவு பத்திரிகைகளிலும் எழுதி வந்தனர். இதில் மிகப்பெரிய சுவாரஸ்யம்- சிறில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்பதால் அவரே பொருத்தமானவர் என அவர்கள் எழுதி வருவதுதான்.

ஆனல்ட் முதல்முறையாக முதல்வராக நியமிக்கப்பட்ட போதே, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் சிறில் மாநகரசபை உறுப்பினராக இருந்தார். அப்போது யாருடைய கண்ணுக்கும் தெரியாத சிறில் இப்பொழுது, வரிப்புலி உடையுடன் சுமந்திரன் ஆதரவாளர்களின் கண்ணிற்கு தெரிய ஆரம்பித்துள்ளார்.

இந்த பின்னணியில், ஆனல்ட்தான் வேட்பாளர் என இன்று அறிவிக்கப்பட்டதும், மணிவண்ணனின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மணிவண்ணனின் நகர்விற்கான திரைக்கதையை எம்.ஏ.சுமந்திரன்தான் எழுதினார் என்பதற்கு இதுவரை ஆதாரம் எதுவுமில்லையென்பதையும் நேர்மையாக குறிப்பிட்டு விடுகிறோம். வரும் நாட்களில்தான் இது குறித்து தீவிரமாக ஆராய வேண்டும். எனினும், அந்த வாய்ப்பை நிராகரிக்க முடியாத ஏதுநிலைகள் தென்படுகின்றன.

மணிவண்ணனை ஆதரிக்கும்படி ஈ.பி.டி.பியுடன் எம்.ஏ.சுமந்திரன் பேச்சு நடத்தினார் என்றும் பரவும் தகவல்களையடுத்து, இன்று இரவு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு தமிழ் பக்கம் இது குறித்து வினவியது. அவர் அந்த கருத்தை ஆமோதிக்கவோ, மறுக்கவோ இல்லை. நாளை மணிவண்ணனை ஈ.பி.டி.பி ஆதரிக்குமா என கேடடபோதும், ஆதரிப்பதாகவோ எதிர்ப்பதாகவோ பதிலளிக்கவில்லை.

வழக்கமாக இப்படியான சந்தர்ப்பங்களில் பிடிகொடுக்காமல் அரசியல் தலைவர்கள் பேசுவதை போலவே பேசினார். அவர் சொன்ன பதில்- எமது மாநாகரசபை உறுப்பினர்கள் நாளை காலை கூடி, களநிலவரத்திற்கு ஏற்ப முடிவெடுப்பார்கள் என்றார்.

கள யதார்த்தத்தின்படி, ஆனல்ட்டை விட, மணிவண்ணனை ஈ.பி.டி.பி ஆதரிக்க வாய்ப்புள்ளது. மணிவண்ணனை ஆதரிப்பதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சறுக்க வைக்கலாம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் சறுக்க வைக்கலாம்.

ஆக, மணிவண்ணனின் நகர்வின் திரைக்கதையை யார் எழுதினார்கள் என்பதை விட, இது நடந்தால் தமிழ் தேசிய கட்சிகளிற்கு சறுக்களே நிகழும். தமிழ் தேசிய கட்சிகளிற்குள் பிளவொன்றை ஏற்படுத்த முடியும்.

No comments

Note: Only a member of this blog may post a comment.