Breaking News


புதிய அரசியலமைப்பிற்கான யோசனையாக, அரசியலமைப்பு வரைபு எதையும் சமர்ப்பிப்பதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

அரசிடம் சமர்ப்ப்பிப்பதற்கென மூத்த சட்டத்தரணி கனகஈஸ்வரனின் தலைமையில் வரைபு பணி நடந்து வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று (19) கொழும்பில் நடைபெற்றது. இதன்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

புதிய அரசியமைப்பிற்கான யோசனைகளை கட்சிகள் சமர்ப்பிக்கும்படி அரசாங்கம் கோரியிருந்தது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தனது யோசனையை சமர்ப்பித்துள்ளது. க.வி.விக்னேஸ்வரன் தனது யோசனையை சமர்ப்பிக்க தயாராக வரைபு செய்து வருகிறார். வடக்கு மாகாணசபையின் தீர்வு யோசனையை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரைபை சமர்ப்பிப்பதில்லையென முடிவு செய்துள்ளது.

இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ்பக்கத்துடன் பேசியபோது-“கனகஈஸ்வரன் தலைமையில் வரைபு ஒன்றை தயாரித்தாலும், இப்பொழுது பகிரங்க ஆவணமாக அதை சமர்ப்பிப்பதில்லையென முடிவு செய்துள்ளோம். ஏனெனில், அப்படியொரு வரைபை சமர்ப்பித்தால், அதிலுள்ள ஒவ்வொரு விடயங்களையும் எடுத்து வைத்து தென்னிலங்கையில் ஆளாளுக்கு அரசியல் செய்வார்கள்.

கடந்த முறை நாம் ஒரு வரைபை சமர்ப்பித்தோம். இடைக்கால அறிக்கை வந்தது. அதிலுள்ள சில சொற்களை எடுத்து வைத்து இரண்டு தரப்பிலும் அரசியல் செய்தார்கள்.

இம்முறை கோட்டாபய அரசு ஒரு புதிய அரசியலமைப்பை தயாரிக்கவுள்ளதாக அறிவித்து, மக்கள் ஆணையை பெற்றுள்ளது. அவர்களிற்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், ஒரு வாய்ப்பை உருவாக்க இந்த முடிவை எடுத்தோம்.

ஆனால் ஒரு ஆவணம் சமர்ப்பிப்போம். இனப்பிரச்சனையின் தோற்றம், அரசியலமைப்புக்களில் ஏற்பட்ட குறைபாடுகள், 13வது திருத்தம், அது குறித்த மஹிந்த அரசின் வாக்குறுதிகள், வெளிநாட்டு தலைவர்களிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள், தமிழர்களின் அபிலாசை போன்றவற்றை ஒவ்வொரு தலைப்புக்களில் வழங்கவுள்ளோம். ஆனால், எமக்கு இதுதான் தேவையென்பதை ஆவண ரீதியாக இப்பொழுது வழங்க மாட்டோம்“ என்றார்.

சட்டத்தரணி கனகஈஸ்வரன் தலைமையில் தயாரிக்கப்படும் வரைபு பணி கைவிடப்படுமா என தமிழ் பக்கம் வினவியபோது,

“இல்லை. அது கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் உள்ளது. அந்த ஆவணத்தை உடனடியாக சமர்ப்பிக்கவில்லை. விரைவில், அரசுக்கும் கூட்டமைப்பிற்கும் பேச்சு நடக்குமென நம்புகிறோம். அடுத்த கட்டத்தில், இந்த பேச்சுக்கள் வளர்ச்சியடையும் சந்தர்ப்பத்தில் அவற்றை வழங்குவோம்“ என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.