3 உள்ளூராட்சிசபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஆதரவளிக்கும்படி ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கூட்டமைப்பின் சார்பில் நேரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கூட்டமைப்பில் இணைந்து செயற்படும் ஜனநாயக போராளிகள் கட்சியினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி டக்ளஸ் தேவானந்தாவை, யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகரசபை, நல்லூர் பிரதேசசபை, திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேசசபை ஆகியவற்றில் தவிசாளர் தெரிவு மீள இடம்பெறவுள்ள நிலையில், இந்த 3 சபைகளிலும் ஆதரவளிக்குமாறு ஜனநாயக போராளிகள் கோரிக்கை விடுத்தனர்.
அரசியல் குழப்பங்களினால் உள்ளூராட்சி நிர்வாகம் கலைவது முறையற்றது என்ற கருத்தை இரு தரப்பும் கொண்டிருந்தனர்.
உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பக்கு ஆதரவளிக்கும்படி டக்யளஸ் தேவானந்தாவிடம் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ஈ.பி.டி.பி ஆதரவளித்தது. பின்னர், நடந்த செய்தியாளர் சந்திப்பொன்றில், தாம் ஈ.பி.டி.பியிடம் ஆதரவு கோரவில்லையென சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்தார்.
இதை டக்ளஸ் மீண்டும் சுட்டிக்காட்டினார். இம்முறை கூட்டமைப்பு தரப்பிடமிருந்து ஈ.பி.டி.பி எதை எதிர்பார்க்கிறது என ஜனநாயக போராளிகள் தரப்பினால் கேட்கப்பட்டது. தான் எந்த நிபந்தனையையும் எதிர்பார்க்கவில்லையென குறிப்பிட்ட டக்ளஸ் தேவானந்தா, தமது கட்சியுடன் ஆலோசித்து சாதகமான முடிவொன்றை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.