Breaking News


நல்லூர் பிரதேசசபையை ரெலோவிடம் வழங்க இலங்கை தழிழ் அரசு கட்சி சம்மதித்துள்ளது. ரெலோவினால் தவிசாளராக பிரேரிக்கப்பட்ட மதுசுதன் அந்த பதவிக்கு பொருத்தமற்றவர் என்ற போதும், ரெலோவின் வற்புறுத்தலால் இந்த இணக்கப்பாட்டிற்கு வருவதாக தமிழ அரசுக்கட்சி அரை மனதுடன் அறிவித்தது.

நல்லூர் பிரதேசசபை தவிசாளர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் இடம்பெற்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், பொ.கனகசபாபதி ஆகியோரும், ரெலோ சார்பில் சுரேன், விந்தன் கனகரட்னம் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இன்றைய சந்திப்பின் தொடக்கத்திலேயே தவிசாளர் வேட்பாளராக தமது தரப்பின் மதுசுதன் களமிறக்கப்பட வேண்டுமென ரெலோ கூறியது. பதிலாக, கோப்பாய் தவிசாளரை உடனடியாக பதவிவிலக வைத்து, தமிழ் அரசு கட்சியிடம் சபையை கையளிப்பதாக கூறினர். எனினும், தமிழ் அரசு கட்சி அதை ஏற்கவில்லை.

கோப்பாயில் தியாகராஜத நிரோஷ் மீது குறைகள் இல்லாத நிலையில் எதற்காக மாற்றம் செய்ய வேண்டும், ஆகவே நல்லூரை தாமே வைத்திருப்பதாக தமிழ் அரசு கட்சி கூறியது.

எனினும், ரெலோ மறுத்தது.

தமிழ் அரசு கட்சி விட்டுக் கொடுக்கவில்லை. இப்படியே நீண்ட நேரம் இழுபறி நீடித்தது.

இதன் பின்னர், தமிழ் அரசு கட்சி உண்மையான விடயத்திற்கு வந்தது. ரெலோ பிரேரிக்கும் மதுசுதன், தவிசாளர் பதவியை அடைவதற்காக மேற்கொண்ட சதி முயற்சிகள் என பெரிய குற்றச்சாட்டு பத்திரம் வாசித்தது.

எனினும், ரெலோ தேசிய அமைப்பாளர் சுரேனின் தேர்தல் பிரச்சார பணியில் ஈடுபட்டதால், மதுசுதனை தவிசாளராக்குவதில், சுரேன் ஒற்றைக்காலில் நின்றார். மதுசுதன் மீதான குற்றச்சாட்டுக்கள் பெருகிக் கொண்டிருக்க, அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற பாணியில், அந்த குற்றச்சாட்டுக்களை தவிர்த்தார்.

ரெலோவின் இன்னொரு உறுப்பினரை தவிசாளராக்கலாமென தமிழ் அரசு கட்சி யோசனை தெரிவித்தது. எனினும், ரெலோ அதை மறுத்தது.

இதன்பின், நல்லூர் பிரதேசசபையின் 4 தமிழ் அரசு கட்சி உறுப்பினர்களும், 2 ரெலோ உறுப்பினர்களும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர்.

முன்னைய தவிசாளர் தியாகமூர்த்தி- சபை ஆரம்பித்த நாளில் இருந்து சபையை செயற்பட விடாமல் சதி நடவடிக்கையில் மதுசுதன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினார். மதுசுதன் சபைக்கு எதிராக ஊடகங்களிற்கு தெரிவித்த கருத்துக்கள் என பெரிய ஆவணமொன்றை சமர்ப்பித்தார்.

இன்னொரு உறுப்பினர்- தான் புகையிலை தொடர்பாக சபையில் பிரேரணை சமர்ப்பித்திருந்த நிலையில், அது தன்னால் சமர்ப்பிக்கப்பட்டதென ஊடகங்களிற்கு செய்தி வழங்கி பிரசுரித்தார். சபைக்கு எதிராக சதி செய்ய எம்முடன் இரகசியமாக பேசினார் என அடுக்கிக் கொண்டே போயினர்.

இதனால் இழுபறி தொடர்ந்த நிலையில், மாவை சேனாதிராசா தலையிட்டு, கூட்டமைப்பின் ஒற்றுமையை கருதி, மதுசுதன் மீதான குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும்- குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் பதவிக்கு வரலாமென ரெலோ விரும்புவதாலும்- அவரை தவிசாளராக்கலாமென்றார்.

ஆனால், வெற்றியடைவோம் என்பதை நிரூபிக்க வேண்டுமென்றார்.

ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுட்ன் தான் பேசியுள்ளதாகவும், அவர் ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும் சுரேன் குறிப்பிட்டார்.

வேறு யார் ஆதரவளிப்பார்கள் என வினவியபோது, சுயேட்சைக்குழு ஆதரவளிக்காது, முன்னணி ஆதரவளிக்காது, சு.க பற்றி தெரியவில்லையென்றார் சுரேன்.

ரெலோ வேட்பாளரை யார் யார் ஆதரிப்பார்கள் என்பதை தீர்மானித்து, நாளை காலை 9 மணிக்கு மீண்டும் கூடும்போது அறிவிக்கும்படி தமிழ் அரசு கட்சி கூறியுள்ளது.

இதேவேளை, நல்லூருக்கு பதிலாக கோப்பாய் பிரதேசசபையை உடனடியாக தமிழ் அரசு கட்சியிடம் ஒப்படைக்கும்படி கூறப்பட்டது. இதற்காக எழுத்துமூல ஆவணமொன்றை தயாரிக்கலாமென தமிழ் அரசு கட்சி கூறியபோது, அப்படியொரு ஆவணம் தேவையி்லை, தாம் சொன்னபடி செயற்படுவோம் என சுரேன் கூறினார்.

அடுத்த ஜனவரி 10ஆம் திகதிக்குள் நிரோஷ் பதவிவிலகுவார் என ரெலோ உறுதியளித்தது.

No comments

Note: Only a member of this blog may post a comment.