Breaking News


தமிழ் பேசும் மக்களின் பூர்வீக பகுதியான வடக்கு கிழக்கு ஒரு பிராந்தியமாக அங்கீகரிக்கப்பட்டு, பிராந்தியங்களின் ஒன்றியமாக இலங்கையின் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலமைப்பு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பிற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் யோசனை நேற்று அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒரு மக்கள் கூட்டத்திற்கு உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்படுமானால், அவர்கள் சர்வதேச சட்டத்தினடிப்படையில் வெளியக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதை நினைவு படுத்துகிறோம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பு உருவாக்கத்திற்கான நிபுணர் குழுவுக்கு கூட்டமைப்பின் யோசனைகள் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நேற்று அனுப்பினார். இலங்கை தமிழரசுக் கட்சி என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் இயங்கும் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவற்றின் கூட்டான- தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இந்தக் கருத்துக்களை முன்வைக்கிறேன் என தெரிவித்து, சம்பந்தன் இந்த யோசனைகளை நேற்று அனுப்பியுள்ளார்.

இருபத்தொரு பக்கங்களைக் கொண்ட இந்த யோசனையில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு-

13வது திருத்தத்துக்கு பின்னர் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து யோசனைகளும், இணக்கப்பாடுகளும், வாக்குறுதிகளும் ஒற்றையாட்சியை விடுத்து சமஷ்டி கட்டமைப்பிலான ஆட்சிமுறையையே பிரேரித்துள்ளன.

புதிய அரசியலமைப்பு வரையப்படுமாக இருந்தாள்ல் அர்த்தமுள்ள விதமாக அரச அதிகாரங்கள் பகிரப்படுவது அதன் மையப்பொருளாக இருக்க வேண்டும்.  மத்திய மற்றும் பிராந்தியங்களில் ஐக்கியத்தை கொண்டதாக அரசு முறை அமைய வேண்டும். இதில் ஒரு பிராந்தியமாக தமிழ் பேசும் மக்களின் பிரதான வாழிடமான வடக்கு கிழக்கு இருத்தல் வேண்டும்.

சிங்களம் தமிழ் ஆங்கிலம் ஆகிய மூன்றும் அரசகரும மொழியாக வேண்டும்.

நாடாளுமன்றத்துக்கு பதில் கூறக்கூடிய விதமான சம்பிரதாய ஜனாதிபதி பதவியில் இருப்பார். பிரதமரின் ஆலோசனைப்படி அமைச்சர்களை ஜனாதிபதி நியமிப்பார். அமைச்சர்களின் அமைச்சுக்களை தீர்மானிக்கும் அதிகாரம் பிரதமரிடம் இருக்கவேண்டும்.

ஒவ்வொரு பிராந்தியத்திலும் பிராந்திய சபையின் அங்கீகாரத்திற்கு அமைய, முதலமைச்சர் வழங்கும் பரிந்துரைப்படி ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.

பின்வரும் துறைகளில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். காணி, சட்டமும் ஒழுங்கும், சுகாதாரம், வீடமைப்பு மற்றும் கட்டடங்கள், விவசாயமும் விவசாய சேவையும், நீர்ப்பாசனம், கடற்தொழில், விலங்கு வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீள்குடியமர்வு,ம் புனர்வாழ்வும், உள்ளூராட்சி நிர்வாகம், பிராந்திய பொது சேவைகள் மற்றும் கலாச்சாரம், கூடடுறவு மற்றும் கூட்டுறவு வங்கிகள், தொழிற்சாலைகள், வரிவிதிப்பு,  மத்திய நிதி அளிப்பு, வெளிநாட்டு நேரடி முதலீடுகள், சர்வதேச மற்றும் உள்ளூர் கடன்கள், மானியங்கள்.

நீதித்துறையில் அரசமைப்பு நீதிமன்றங்கள் தனியாக இருக்க வேண்டும். பிராந்திய மேல் நீதிமன்றங்களே அடிப்படை உரிமை மீறல் குற்றங்களை விசாரிக்கும் நியாயாதிக்கம் கொண்டவையாக இருக்க வேண்டும்.

பிராந்திய முதலமைச்சரின் இணக்கத்துடன் தான் பிராந்தியங்களில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட வேண்டும். பின்னர் பிராந்திய சபை அதை அங்கீகரிக்க வேண்டும்.

காணி அதிகாரம் பிராந்தியத்திற்கு பகிரப்படவேண்டும். சட்டமும் ஒழுங்கும் பிராந்தியத்திற்கு பதிக்கப்பட்டமையால் ஒவ்வொரு பிராந்திய பொலிஸ் இருத்தல் வேண்டும்.

கூட்டமைப்பினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட யோசனையின் முழுமையான வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.