Breaking News


உடுவில் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளிற்கு மறுஅறிவித்தல் வரை விடுமுறை வழங்க கல்வித்திணைக்களத்தை கேட்டுள்ளோம். சந்தை வியாபாரிகள் 398 பேர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாடசாலை, அத்தியாவசிய சேவைகளிற்கும் செல்ல முடியாது. இன்று இரவு கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாள் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மருதனார்மடத்தில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதும், நேற்று மருதனார்மடம் பொதுச்சந்தையில் பணிபுரியும் 398 பேரின் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றில் 283 மாதிரிகள் யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில பரிசோதிக்கப்பட்டன.

அவர்களில் 6 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. ஏற்கனவே தொற்று உறுதியானவரின் மனைவி, மூன்று குழந்தைகள், அவரது மாமியார், மைத்துனர் ஆகியோருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் கோப்பாய் சிகிச்சை நிலையத்திற்கு நேற்றிரவு அனுப்பப்பட்டனர்.

யாழ் போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் 104 மாதிரிகள் இன்று மீள ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. அவற்றின் முடிவுகள் இன்று மாலையில் வெளியாகும். இதைவிட 114 மாதிரிகள் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் முடிவும் இன்று மாலை கிடைக்கும். முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுவில் பிரதேச செயலக பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இன்று மாலை கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் – தொற்று உறுதிசெய்யப்படுமெனில்-சில கிராமசேவகர் பிரவுகள் மட்டும் தொடர்ந்து முடக்கப்படும். ஏனைய கிராமசேவகர் பிரிவுகள் விடுவிக்கப்படும்.

இந்த 398 மாதிரிகளில் 238 பேர் உடுவில் பிரதேச செயலக பிரிவை சேர்ந்தவர்கள். 160 பேர் ஏனைய பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்தவர்கள். அனைவரும் மருதனார்மடம் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்.

இந்த முடிவுகள் எப்படியாக இருந்தாலும் 398 பேரும், அவர்களது குடும்பத்தினருடன் 2 வாரங்களிற்கு சுயதனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். 2 வார முடிவில் மீண்டும் அவர்கள் பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள்.

மருதனார் பொதுச்சந்தை, நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும். பொதுச்சந்தை, பிரதேசத்தை தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

யாழ் மாவட்டங்களின் ஏனைய சந்தைகளில் இருந்து மருதனார்மடத்திற்கு பொருட்களை வாங்க வர்த்தகர்கள் வருவதால், ஏனைய பொதுச்சந்தைகளில் இருப்பவர்களிற்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் எமக்குள்ளது. இதனால் ஏனைய பொதுச்சந்தைகளில் வியாபாரம் செய்பவர்களையும் பிசிஆர் சோதனைக்குட்படுத்தவுள்ளோம்

இன்னொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுவில் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிற்கும் மறுஅறிவித்தல் வரை விடுமுறை வழங்க கல்வித்திணைக்களத்திற்கு சிபாரிசு வழங்கியுள்ளோம். நிலைமையை பொறுத்து அடுத்த கட்ட தீர்மானத்திற்கு செல்வோம்.

இன்றைய முடிவில் குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தொற்றடன் அடையாளம் காணப்பட்டால் அந்த பகுதிகளை முடக்க நடவடிக்கையெடுக்கப்படும். ஏனைய பகுதிகள் விடுவிக்கப்படும்.

398 சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்த உத்தியொகத்தர்களோ, மாணவர்களோ செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏனைய முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அத்தியாவசிய சேவையிலுள்ளவர்கள் பணிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த பிரதேசத்தின் ஊடாக போக்குவரத்த செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கும்.

இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாராவது காய்ச்சல், தொண்டைநோ, இருமல் போன்ற அறிகுறிகளை கொண்டிருந்தால் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அவசர இலக்கமான 0212226666 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.