Breaking News


பொதுச்சுகாதார பரிசோதகர்களின் முகத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் காறி உமிழ்ந்த சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக, பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நிமோஷா ரத்னவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர் எச்சில் உமிழ்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் இருவர், நோயாளர் காவு வண்டியின் சாரதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 5 சுகாதார பரிசோதகர்கள் கடமையிலிருந்து விலகியுள்ளனர்.

பண்டாரகம, அட்டலுகம பிரதேசம் கொரோனா அபாய வலயமாக காணப்படுகிறது. முடக்கப்பட்ட அந்த பகுதியில் 300 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த பகுதி மக்கள் பிசிஆர் சோதனைக்கு ஒத்துழைக்காததால் சில தினங்கள் முன்னர் வரை, சுகாதார அதிகாரிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்க முயன்றபோது, அவர் அதற்கு உடன்படவில்லை. சுகாதார பரிசோதகர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை வீட்டில் இருக்கும்படி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்திவிட்டு, தமது வாகனத்தில் வந்து ஏறினர்.

இதன்போது திடீரென வாகனத்தின் அருகில் வந்த கொரோனா தொற்றாளர், “நீங்களும் கொரோனாவை வாங்குங்கள்“ என அவர்களின் முகத்தில் எச்சிலை உமிழ்ந்தார்.

இதையடுத்து, அங்கு பிசிஆர் சோதனை செய்வது இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.