Breaking News


பத்து வருடங்களின் முன்னரே விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக கூறும் இலங்கை அரசு, இப்பொழுதும் பிரபாகரனின் படத்திற்கே அஞ்சுகிறதா என கேள்வியெழுப்பியுள்ளார் வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்-

“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தமைக்காக உதயன் பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த ஊடகச் செய்தியை நான் முதலில் நம்பவில்லை.

ஆனால் இப்பொழுது அவ்வாறான செய்தி சரியானது எனத் தெரிகிறது.

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை ஆச்சரியமானதும் அதிர்ச்சியளிப்பதுமானதாகவே காணப்படுகின்றது. இலங்கையில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் வெளிவரும் சகல அச்சு ஊடகங்களிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும்1986 ஆம் ஆண்டிலிருந்தே விடுதலைப்புலிகள் தொடர்பான செய்திகளும், தலைவர் பிரபாகரனது புகைப்படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

1985 ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்த உதயன் பத்திரிகையிலும் அவ்வாறான செய்திகளும், புகைப்படங்களும் இதுவரையில் வெளியிடப்பட்டுள்ளன.

அப்படியிருக்க உதயன் பத்திரிகையை மட்டும் தனிமைப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பது என்பது விளங்கிக் கொள்ள முடியாததும். ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும். அதிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது விசித்திரமானது. புகைப்படம் பிரசுரித்தல் எவ்வாறு பயங்கரவாத நடவடிக்கையாகும் என்பது புரிய முடியாதாகும். அதிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டோம் என்று 2009 ஆம் ஆண்டு மே மாதத்திலேயே, பத்து வருடங்களுக்கு முன்னரேயே பிரகடனப்படுத்திய அரசாங்கம் இப்பொழுது நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதென்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலும், ஊடக அடக்குமுறையின் பறைசாற்றலும் ஜனநாயகப் படுகொலையுமாகும்.

வரலாற்றை வரலாறாக பதிவு செய்வதே ஊடகங்களின் பொறுப்பும் கடமையுமாகும். கடந்த முப்பது வருடங்கள் வரை இந்த நாட்டில் இடம்பெற்ற தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றையும் அதற்கு தலைமை தாங்கிய தலைவர் பிரபாகரனின் நிழற்படத்தையும் பிரசுரிப்பது வரலாற்று பதிவேயன்றி எந்த விதத்திலும் பயங்கரவாத செயற்பாடு அல்ல.

இவற்றை மறைப்பதோ மறுப்பதோ வரலாற்றை மறைப்பதற்குச் சமனாகும். அப்படியாயின் இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்த வரலாற்றையே மறைப்பதாக அர்த்தப்படும். அந்த வகையில் தென்னிலங்கையில் பல நூற்றுக் கணக்கான படைவீரர்கள் தேசிய வீரர்களாக நினைவு கூரப்பட முடியாதே.

உதயன் பத்திரிகையைப் பொறுத்தவரையில் அது பல்வேறு விதமான அரச பய’ங்கரவாதத்தையும் உயிர் இழப்புக்களையும், சொத்து இழப்புக்களையும் சந்தித்த ஊடகம், அவற்றை எதிர்கொண்டு நிலைத்து நிற்கும் தமிழ் ஊடகமாகும்.

தமிழ் மக்களின் உயிர்நாடியாக திகழும் அச்சு ஊடகம் உதயன் பத்திரிகையாகும். தமிழ் மக்களின் வாழ்வுரிமை, மொழி உரிமை, கல்வி, கலாசார உரிமைகளுக்காக அயராது அச்சமின்று ஆரம்பம் முதல் இன்று வரை குரல் கொடுத்து வரும் ஒரு ஊடகம்.

அதற்கெதிரான நீதிமன்ற நடவடிக்கை என்பது ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் இருப்புக்கெதிரான வன்மம் கொண்ட நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

எனவே இந்த நடவடிக்கையை அரசாங்கம் மீளாய்வு செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்“ என்றுள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.