Breaking News


மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதில் நிலவிய இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிற்குள் நீடித்த இழுபறி, நேற்று (11) மட்டக்களப்பில் சுமுகமாக பேசி தீர்க்கப்பட்டது.

கடந்த வாரம் மட்டக்களப்பு மாநகரசபை வரவு செலவு திட்ட அமர்வு இடம்பெற்ற போது, அமர்வின் ஆரம்பத்திலேயே வரவு செலவு திட்டத்தை தாம் ஆதரிக்கப் போவதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழ்ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்தது.

முதல்வர் தி.சரவணபவன் தமிழ் அரசு கட்சிக்காரர். பிரதி தவிசாளர் ரெலோ. பிரதி தவிசாளர் உள்ளிட்ட ரெலோவினரை அவர் கிஞ்சித்தும் கணக்கெடுக்கப்பதில்லையென்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்த முறுகல் இருந்து வரும் நிலையில், அண்மைக்காலமாக சாணக்கியன் தரப்பினர், கோவிந்தம் கருணாகரனிற்கு எதிரான நகர்வை செய்து வருகிறார்கள். இதன்படி, வெல்லாவெளி பிரதேசசபையின் ரெலோ தவிசாளர் சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தை, சாணக்கியனின் அணியை சேர்ந்த ஒருவர், கருணா தரப்புடன் கைகோர்த்து எதிர்த்தார்.

அந்த சம்பவத்துடன் தனக்கு தொடர்பில்லையென சாணக்கியன் கூறினாலும், அரசியல் தெரிந்தவர்களிற்கு அதன் பின்னணி தெரிந்திருந்தது.

போதாதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பை எம்.ஏ.சுமந்தினும், கொறடா பொறுப்பை சி.சிறிதரனும் விட்டு விலக மாட்டோம் என அடம்பிடித்து வருவதால், ரெலோவினர் கடுப்பாகி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மட்டக்களப்பில் இரு தரப்பினரும் கலந்து கொண்ட சமரசப் பேச்சு நடந்தது. ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை சிறப்பு பொறுப்பாளர் பொ.செல்வராசா, பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், இரா.சாணக்கியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மாநகரசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தாம் தமிழ் அரசு கட்சியை எதிர்க்கவில்லை, முதல்வரையே எதிர்க்கிறோம், வேறு ஒருவரை முதலவராக பெயரிடுமாறு ரெலோ மாநகரசபை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மாநகரசபை நிர்வாக ரீதியான புரிந்துணர்வின்மை இதன்போது பேசித்தீர்க்கப்பட்டது. மாகரசபைக்குள் ரெலோ தரப்பிற்கு எழும் அதிருப்திகளை பொ.செல்வராசாவிடம் தெரிவித்தால் அவர் உடனுக்குடன் தீர்வை பெற்றுக்கொடுக்க ஏற்படானது.

வரும் 15ஆம் திகதி வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.