வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷை கைது செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சி அரசியல் பழிவாங்கல் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
மல்லாகம் நீதிமன்றத்தில் பிணை கோரி தாக்கல் செய்த மனுவிலும், கைது முயற்சி அரசியல் பழிவாங்கல் என தியாகராஜா நிரோஷ் குறிப்பிட்டுள்ளார்.
யாழிலுள்ள ஆளுங்கட்சி எம்.பியும், அவரது அப்பாவுமே “நிரோஷை ஒரு நாளாவது உள்ளுக்க போட வேணும்“ என ஒற்றைக்காலில் நிற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட அரசியல்வாதியும், அப்பாவும் செய்யும் “அளப்பறை அரசியல்“ தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கும் கொண்டு செல்ல கூட்டமைப்பின் வட்டாரங்கள் தீர்மானித்துள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது.
அண்மையில் வடமராட்சியில் தவிசாளருக்கு தெரியாமல் அங்குள்ள வீதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு சென்ற தவிசாளர் த.ஐங்கரனுடன், ரௌடிகள் பாணியில் சிலர் நடந்தனர். இது குறித்து சமூக ஊடகங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன. அவர்கள் ரௌடிகள் அல்ல, குறிப்பிட்ட அரசியல்வாதியின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பின்னர் தகவல் வெளியாகியது.
நாடாளுமன்ற தேர்தல் காலத்திலும், எந்த ஒதுக்கீடும் இல்லாமல் பல வீதிகளில் “சும்மா“ அடிக்கல்லை அவர் நாட்டியதாக கூட்டமைப்பினரால் குற்றம்சுமத்தப்பட்டது. அப்போதும் பல இடங்களில் கூட்டமைப்பினருடன் மோதினர்.
வலி கிழக்கு பிரதேசசபைக்குட்பட்ட அச்செழு அம்மன் கோயில் வீதியை புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை பெயர்ப்பலகை நாட்டியுள்ளது. அரசின் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாட்டின் எந்த வீதியையும் புனரமைப்பு செய்யலாமென சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், பிரதேசசபைகளிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் தலையிடும் விவகாரம் இது என குறிப்பிட்டு, வலி கிழக்கு தவிசாளர் அதனை அகற்றியிருந்தார்.
அதற்கு எதிராக, வீதி அபிவிருத்தி அதிகாரசபையினாலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிரோஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரும் மனு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் நாடாளுமன்றத்தில் பிரதமரை சந்தித்து யாழில் நிலவும் “சண்டித்தன் அரசியல் பற்றி முறையிட கூட்டமைப்பு வட்டாரங்கள் தீர்மானித்துள்ளன
No comments
Note: Only a member of this blog may post a comment.