Breaking News


அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் இலங்கையில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருமென மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் தொடர்பில் ஆராய இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் தடுப்பூசி தயாரிப்பு முயற்சி தொடர்பில் அந்த குழுக்கள் அவதானம் செலுத்தி வருகின்றன. இது தொடர்பாக நாங்கள் திறந்த நிலையிலிருக்கிறோம் என்றார்.

இங்கிலாந்தில் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஃபைசர் / பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை இலங்கை போன்ற வெப்பமண்டல நாட்டில் பராமரிக்க முடியாது என்றார். அந்த தடுப்பூசியை -70 டிகிரி செல்சியஸில் வைக்க வேண்டும் என்றார்.

“குளிர்ந்த காலநிலை நிலைமைகளைக் கொண்ட நாடுகளில், இதைச் செய்யலாம். இலங்கையில், இரத்த வங்கி மற்றும் சில பல்கலைக்கழகங்களில் மட்டுமே இதுபோன்ற வசதிகள் உள்ளன. வெகுஜன தடுப்பூசிக்கு ஒவ்வொரு சுகாதார பிரிவிலும் இதுபோன்ற ஏற்பாடுகளை நாங்கள் நிறுவ முடியாது. இது நடைமுறைக்கு மாறானது” என்றார்.

வெற்றிகரமான தடுப்பூசியை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மட்டுமே அங்கீகரிக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.