Breaking News


புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மரக்கறி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட நபருடன் தொடர்புடைய 65 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேருமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எழுமாறாக நடத்தப்பட்ட பி சிஆர் பரிசோதனையில் நேற்று வெளியான முடிவுகளில் (26) ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் .

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (26) நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியை சேர்ந்த மரக்கறி மொத்த வியாபாரி ஒருவரே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்

இவர் தம்புள்ள பகுதிக்கு சென்று மரக்கறிகளை பெற்று வந்து புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு, விசுவமடு சந்தை வியாபாரிகளுக்கு வழங்குபவர்.

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தம்புள்ளவிற்கு செல்பவர்கள் உள்ளிட்ட மரக்கறி வியாபாரிகள் சிலரிடம் அண்மையில் எழுமாறாக பி சிஆர் மாதிரிகள் பெறப்பட்டது. எழுமாறாக பி சி ஆர் மாதிரிகளை பெற்றமையால், மாதிரிகள் பெறப்பட்ட யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. இப்படி, மாதிரி பெறப்பட்ட ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்

இந்நிலையில் நேற்று (26) மாலை பி சிஆர் முடிவுகள் கிடைக்கும் வரை குறித்த நபர் சமூகத்தில் நடமாடியுள்ளார். இதனால் புதுக்குடியிருப்பு பகுதி அபாய வலயமாகுமா என மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது. பாதிக்கபட்டவர் கிளிநொச்சி கிருஷ்ணாபுரத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு நோயாளர் காவுவண்டியில் அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் மரக்கறி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட நபருடன் தொடர்புடைய 65 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேருமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல்வேறுபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இராணுவத்தினர் சந்தை வளாகம் மற்றும் வர்த்தக தொகுதிகளை கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதே நேரம் பொலிசார் குறித்த தொற்றாளியுடன் தொடர்புகளை மேற்கொண்ட நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கிராமங்களுக்குச் சென்று குறித்த தொற்றாளியுடன் நேரடியாக தொடர்புகளை மேற்கொண்டிருந்த நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கையிலும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.

இப்பகுதிகளில் சந்தைை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பல இடங்களிலும் மீன் வியாபார மரக்கறி வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த தொற்றாளி தம்புள்ள சந்தையில் இருந்து மரக்கறிகளை புதுக்குடியிருப்பு, விசுவமடு, உடையார்கட்டு உள்ளிட்ட சந்தைகளுக்கு வினியோகம் செய்பவர் என்பதாலும், நேற்று இரவு வரை குறித்த நபர் சமூகத்தில் நடமாடி இருப்பதனாலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

புதுக்குடியிருப்பு தொற்றாளரில் வீரியம்மிக்க வைரஸ்... பலரிற்கு தொற்றியிருக்கும் ஆபத்து!


அவரது உடலில் வீரியம் மிக்க கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டதால், அவருடன் தொடர்பிலிருந்தவர்களிற்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையை தொடர்பு கொண்டு பிசிஆர் சோதனைக்குள்ளாகும்படி கோரப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.