Breaking News


ஒரே வீதிக்கு 10 நிமிட இடைவெளியில் இரண்டு முறை  அடிக்கல் நாட்டப்பட்ட அரசியல் மோதல் இன்று (19) இடம்பெற்றது. அத்துடன், இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சும் விதமாக அங்கஜன் இராமநாதன் அரங்கேற்றும் குடும்ப அரசியலும் அந்த பகுதி மக்களால் விமர்சிக்கப்பட்டது.

வலிகாமம் வடக்கு சேந்தாங்குளம் பகுதியில் இன்று இந்த சம்பவம் நடந்தது.

அரசு நடைமுறைப்படுத்தும்  சப்ரிகம திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சிசபைகளிற்குட்பட்ட வீதிகளை புனரமைப்பதில் அங்கஜன் இராமநாதன் தரப்பு முறையற்ற விதமாக செயற்படுகிறது என்ற விமர்சனம் உள்ளூராட்சிசபைகளினால் வைக்கப்பட்டு வருகிறது.



கூட்டமைப்பினர் முதலில் ஆரம்ப நிகழ்வை நடத்திய போது

தமிழ் மக்கள் பெரும் போராட்டத்தின் மத்தியில் பெற்ற குறைந்த பட்ச அதிகார பரவலாக்கலையும நிர்மூலமாக்கும் விதமாக- உள்ளூராட்சிசபைகளிற்கு தெரியாமல் கோட்டாபய அரசே நேரடியாக அனைத்து திட்டங்களையும் கையாளும் சூழலை உருவாக்க அங்கஜன் இராமநாதன் பகீரத பிரயத்தனம் செய்கிறார் என்பது வலி வடக்கு விவகாரத்தில உறுதியானதாக அரசியல் நோக்கர்களும் குறிப்பிடுகிறார்கள்.

கோட்டாபயவின் பிரதிநிதியாக வடக்கில் தமிழ் மக்களின் அதிகார பரவலாக்கல் முயற்சிகளை பின்தள்ள வைக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார் என்ற விமர்சனத்துடன், தமிழ் அரசியலில் இதுவரையில்லாத வகையில் குடும்ப அரசியலையும் முன்னெடுக்கிறார் என்ற விமர்சனங்களும் அண்மைக்காலமாக தோன்ற ஆரம்பித்துள்ளன.

அந்த விமர்சனம் யாழ்ப்பாண சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்பாட்டாளர்களிற்குள் மெல்ல மெல்ல வலுப்பெற தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், இன்று வலி வடக்கு பிரதேசசபைக்குட்பட்ட சேந்தாங்குளம் ஜே- 222 கிராமத்தில், கடற்கரை வீதியை புனரமைப்பதில் மோதல் ஏற்பட்டது.

வலி வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் சிலர் அங்கு வீதி அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இதன்பின்னர் அங்கஜன் இராமநாதனின் சித்தப்பா குழுவினர் வந்து இன்னொரு ஆரம்ப நிகழ்வை நடத்தினர்.

அங்கஜன் இராமநாதனின் தந்தை சதாசிவம் இராமநாதன் ஏற்கனவே, மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் இணைப்பாளர் என்ற கோதாவில் அங்கஜன் இராமநாதன் சார்பில் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். தற்போது, சித்தப்பாவும் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்தது யார் என சுதந்திரக்கட்சிக்குள்ளேயே கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்

No comments

Note: Only a member of this blog may post a comment.