Breaking News


வவுனியாவிலுள்ள, செட்டிகுளம் பிரதேச சபையை மீட்கவும், நெடுங்கேணி பிரதேசசபை தக்க வைக்கவும் தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் ஒற்றுமை அவசியமாகியுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாணியில் ஒன்றுபட்டு செயற்பட மறுத்து, கட்சி நலனை முன்னிறுத்தி அனைத்து தமிழ் கட்சிகளும் செயற்பட்டால், செட்டிக்குளத்தை தமிழ் தேசிய கட்சிகள் மீண்டும்  கைநழுவ விட நேரிடலாம்.

வவுனியா செட்டிகுளம் பிரதே சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 05, சிறிலங்கா சுதந்திர கட்சி 04, தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பான ஈபிஆர்எல்எப் 03, ஐக்கிய தேசியக் கட்சி 02, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 01, முஸ்லிம் காங்கிரஸ் 01, பொதுஜன பெரமுன 01 என 17 உறுப்பினர்கள் உள்ளனர்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவுடன் சிறிலங்கா சுதந்திர கட்சி (07 உறுப்பினர்கள் ஆதரவுடன்) ஆட்சியமைத்துள்ளது. அதன்போது தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பான ஈபிஆர்எல்எப், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (04 உறுப்பினர்கள்) என்பன நடுநிலை வகித்து சுதந்திர கட்சி ஆட்சிக்கு வழிசமைத்திருந்தனர்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று (12) நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசிய கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டனி சார்பான ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய மக்கள் முன்னனி என்பன ஒன்று சேர்ந்தால் 9 உறுப்பினர்கள் இணைந்து வாக்களித்து பாதீட்டை தோல்வி அடையச் செய்வதுடன், ஆட்சியையும் தென்னிலங்கை கட்சியிடம் இருந்து கைப்பற்ற முடியும்.

இதேவேளை, நெடுங்கேணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மொத்த உறுப்பினர்கள் 26 பேர். தமிழ் தேசிய கூட்டமைப்பு- 8, ஈ.பி.ஆர்.எல்.எவ்- 3, தமிழ் காங்கிரஸ்- 3 ஆசனங்களையும் ஏனைய ஆசனங்களை சுதந்திரக்கட்சி, பெரமுன, ஐ.தே.க, சுயேட்சைகள் பங்கிட்டுள்ளனர்.

நெடுங்கேணி ஆட்சியை கைப்பற்ற பெரமுன, சு.க தரப்புக்கள் முயற்சிக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் காங்கிரஸ் இணைந்தால் மட்டுமே நெடுங்கேணி ஆட்சியை தக்க வைக்கலாம். இதன் வரவு செலவு திட்டமும் இன்று (12) இடம்பெறவுள்ளது.

அண்மையில் நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலில், ஈ.பி.ஆர்.எல்.எவ் உடன் பேச்சு நடத்தி, வரவு செலவு திட்டங்களில் ஆதரவு கோருவதென முடிவானது. அதன்படி, சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும், மாவை சேனாதிராசாவிற்குமிடையில் நடந்த கலந்துரையாடலில், இரண்டு தரப்பிற்குமிடையில் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று செட்டிக்குளம், நெடுங்கேணி பிரதேசசபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பும் இணைந்து செயற்படும். எனினும், இந்த இரண்டு சபைகளிலும் வெற்றியை உறுதிப்படுத்த, தமிழ் தேசிய தரப்புடன், தமிழ் காங்கிரஸ் இணைந்து செயற்பட வேண்டும். வழக்கம் போல பகிஸ்கரிப்பு, நடுநிலையென முடிவெடுத்தால், இதுவரை முன்னணி எடுத்த இந்த முடிவுகளால் மஹிந்த தரப்பு நன்மையடைந்ததை போலவே, இம்முறையும் நன்மையடைவார்கள். அந்த சபைகள் பறிபோகும். தமிழர்களின் எல்லை மேலும் சுருங்கும்

No comments

Note: Only a member of this blog may post a comment.