Breaking News


ஜப்பானிற்கு உயர்கல்விக்காக சென்ற இலங்கை இளைஞன் ஒருவர், அங்குள்ள செல்வந்த வீட்டு மகளை இரகசியமாக இலங்கைக்கு அழைத்து வந்த பரபரப்பு சம்பவம் கடந்த சில தினங்களின் முன் இடம்பெற்றது. அது குறித்த செய்திகள் பரவலாக வெளியாகியிருந்தன.

சுமார் 8 மாதங்கள் இலங்கையில் தலைமறைவாக இருந்த அந்த ஜோடி கடந்த 25ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டனர்.

அந்த ஜோடியின் கதை இது.

ரத்நாயக்க முதியன்சலாகே கசுன் மதுஷங்க பண்டாரா (24) பலகத்துரை கொச்சிக்கடையில் வசிப்பவர். கசுனுக்கும் ஒரு சகோதரி உள்ளார். க.பொ.த. உயர்தரத்தில் நீர்கொழும்பு புனித பீட்டர் கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி பயின்றார். பாடசாலைக் கல்வியை முடித்த சிறிது நேரத்திலேயே, கசுன் நீர்கொழும்பு டெமன் சந்தியில் உள்ள ஜப்பான் மொழி கல்லூரியில் கல்வி கற்றார்.

பின்னர், உயர்கல்விக்காக 2016, ஜூலை 7 அன்று ஜப்பானிற்கு சென்றார். ஜப்பானின் சைட்டமா ப்ரிபெக்சரில் உள்ள டோவன் கல்லூரியில் கல்வி கற்றார்.

ஜப்பானில் செலவுகளை சமாளிக்க ஒரு வேலை தேடிய கசுன், செப்டம்பர் 2017 இல் ஜப்பானின் சிசுவாகா ப்ரிபெக்சரில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒரு மனிதவள நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

அந்த நிறுவனம் 53 வயதான ஒதிதி சோரி என்பவரால் நடத்தப்பட்டது. அந்த நிறுவனம் ஜப்பான் முழுவதும் நிறுவனங்களிற்கு ஆட்களை வழங்கிய மனித வள நிறுவனம்.

அவரது கணவர் இறந்துவிட்டார். அவரது மூத்த மகள் மற்றும் மகனும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். செப்டம்பர் 3, 2004 அன்று பிறந்த அவரது இளைய மகள் ஒதிதி சோரா ஜப்பானில் உள்ள ஒரு பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் படித்தார்.

ஒதிதி சோரியின் மனித வள நிறுவனத்தின் மூலம் ஒரு கொங்கிரீட் பணி தளத்தில் வேலை கிடைத்தது.

கசுனிற்கு ஜப்பானிலிருந்த இன்னொரு இலங்கையருடன் நட்பு ஏற்பட்டிருந்தது. 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரையும் அழைத்துக் கொண்டு ஓடிடி சோரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த அறிமுகம் வலுத்து, ஒடிடி சோரியும், கட்டான நபரும் நெருக்கமான தொடர்பை பேணியுள்ளனர்.

2019 நடுப்பகுதியில் ஓதிதியின் 15 வயது மகள் ஒதிதி சோராவிற்கும், 24 வயது கசுனிற்குமிடையில் காதல் மலர்ந்தது. இருவரும் இரகசியமாக காதலை வளர்த்து வந்தனர்.

ஒரு கட்டத்தின் ஒதிதிக்கு தனது மகளின் காதல் தெரிய வந்தது. இதையடுத்து அவரும், கட்டான நண்பரும் காதலை எதிர்த்தனர். இந்த விவகாரம் காரணமாக கசுன் மற்றும் சோரா மீது தாக்குதல் நடத்தியதாக இவரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த சூழலில் கசுனும், சோராவும் இலங்கை செல்ல முடிவு செய்தனர். இலங்கையில் பிரச்சனையின்றி வாழலாமென கசுன் தெரிவித்திருந்தார்.

மார்ச் 12, 2020 அன்று, ஜப்பானின் நரித ஏர்லைன்ஸிர் இருவரும் புறப்பட்டு, அன்று மாலை 4 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தனர்.

தனது மகள் காணாமல் போனதும், அது பற்றி விசாரித்து, காதலனுடன் தப்பிச் சென்றதை அறிந்தார் தாயார். அவர் உடனடியாக ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகத்தை அழைத்து தனது மகளை இலங்கையர் கடத்திச் சென்றதாகவும், விமான நிலையத்தில் தடுத்து வைக்கும்படியும், விமான நிலையத்தில் தனக்கு நெருக்கமான ஒருவர் வந்து மகளை பொறுப்பேற்பார். தான் உடனடியாக  இலங்கைக்குத் வருவதாக கூறினார்.

கட்டான நபர் அப்போது இலங்கையில் இருந்தார். அவர்தான் சோராவை பொறுப்பேற்க வரவிருந்தார்.

கசுனும் சோராவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததும், ஜப்பானிய தூதரகம் மற்றும் விமான நிலைய பொலிசாரின் தலையீட்டின் மூலம் அவரை, தாயின் நெருங்கிய நண்பரான கட்டான நபரிடம் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் சிறுமி எதிர்ப்பு தெரிவித்தார். அவருடன் செல்ல முடியாதென மறுத்து விட்டார்.

இதன்பின்னர், கொச்சிக்கடையிலுள்ள கசுனின் வீட்டிற்கு அருகிலுள்ள ஹொட்டல் ஒன்றில் ஒதிதி சோராவை தூதரக அதிகாரிகள் தங்க வைத்தனர். சிறுமியின் தாய் ஜப்பானிலிருந்து வரும் வரை சோராவை தங்க வைத்ததுடன், அவருக்கு துணையாக கசுனின் சகோதரியையும் தங்க வைத்தனர்.

சோரா இரண்டு நாட்கள் மட்டுமே ஹொட்டலில் தங்கினார். அதாவது, மார்ச் 14, 2020 அன்று, சோராவின் தாய் இலங்கைக்கு வந்திருப்பதை கநுன் அறிந்தார். அவர் தனது காதலியை ஜப்பானுக்கு அழைத்துச் செல்வார் என்று பயந்து, அவளை ஹொட்டலில் இருந்து அழைத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

மகள் கடத்தப்பட்டதை அறிந்ததும், ஒதிதி சோரி கொச்சிக்கடை பொலிசில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டையடுத்து, கொச்சிக்கடை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த கடத்தல் குறித்து பொலிசார், நீர்கொழும்பு நீதிமன்றத்தில் அறிக்கை அளித்த பின்னர், இளம் ஜோடி வெளிநாடு செல்வதை தடைசெய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், சிறுமியின் கடத்தலுக்கு ஒத்துழைத்த கசுனின் சகோதரி மற்றும் தாயும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தப்பிச் சென்ற உறவினரின் காரும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டது. கைதான இருவரும் 2020 ஜூன் 12 மற்றும் 18 ஆகிய திகதிகளில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மகளை கண்டுபிடிக்க முடியாதநிலையில் தாயார் சியோரியும் ஜப்பான் சென்றார்.
இருப்பினும், கொச்சிக்கடை பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில், கடந்த சில தினங்களில் விசாரணையை துரிதப்படுத்தினர்.

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் கடத்தல் குறித்து அறிவித்ததுடன், சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்கள் மூலமாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, கடந்த 25ஆம் திகதி கொச்சிக்கடையிலுள்ள பெண்ணொருவரிடமிருந்து, பொலிஸ் ஓ.ஐ.சிக்கு அழைப்பொன்று சென்றது. அங்குள்ள வீடொன்றில் இளம் ஜோடி தங்கியிருப்பதாகவும், தேடப்படும் ஜோடியாக இருக்கலாமென்றும் கூறினார்.

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பிரிவனர் துரிதமாக செயற்பட்டனர். அன்று மாலையே பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவொன்று அந்த வீட்டிற்கு சென்றனர்.

குறிப்பிட்ட வீட்டை பொலிசார் சுற்றிவளைத்தனர். அந்த வீடு கசுனின் தாயின் சகோதரிக்கு சொந்தமானது. வீட்டு அழைப்பு மணியை அழுத்திய போது, யாரும் பதிலளிக்கவில்லை. உள்ளே யாரும் இருப்பதை போல காட்டிக்கொள்ளவில்லை. இதையடுத்து பொலிசார் வீட்டு கூரை வழியாக உள்ளே அவதானித்த போது, வீட்டில் இளம்ஜோடி பதுங்கியிருந்தது தெரிய வந்தது.

இருவரும் பொலிசாரின் காவலில் எடுக்கப்பட்டனர். கடந்த 8 மாதங்களாக பல பகுதிகளிலும் இவர்கள் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. 15 வயது 5 மாதங்களாக இருந்தபோது, ஜப்பானிலிருந்து காதலனுடன் புறப்பட்ட சோராவிற்கு தற்போது 16 வயதும் 2 மாதங்களும். அவர் 5 மாத கர்ப்பிணியாகவும் இருக்கிறார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவ கிளினிக் ஒன்றிறகு சோரா சென்று வந்துள்ளார். முஸ்லிம் பெண்ணை போல முகத்தை மறைத்துக் கொண்டு கிளினிக்கிற்கு சென்று வந்துள்ளமை தெரிய வந்தது.

அத்துடன், எந்த சந்தர்ப்பத்திலும் கசுனை பிரிந்து ஜப்பான் செல்ல மாட்டேன் என்றும், அவருடனேயே வாழப்போகிறேன் என்றும், தனது விருப்பத்துடனேயே ஜப்பானிலிருந்து புறப்பட்டு வந்ததாகவும் பொலிசாரிடம் தெரிவித்தார்.

26 ஆம் திகதி நீர்கொழும்பு மேலதிக நீதிவான் சம்பிக ராஜபக்ஷ முன் இருவரும் முற்படுத்தப்பட்டனர். 16 வயதிற்கும் குறைந்த பெண்ணை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்தியமை, பாலியல் பலாத்காரம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் டிசம்பர் 3 ஆம் திகதி வரை கசுன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சோராவை மொரட்டுவவில் உள்ள பராமரிப்பு மையமொன்றில் தங்க வைக்க உத்தரவிட்டார்.

8 மாதங்களாக பொலிசாரிற்கு தண்ணீர் காட்டி, கடந்த 10 நாட்களாக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட ஜோடி இப்பொழுது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.