விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தப்பக்கூடாது என்பதாலேயே கப்பலில் மக்களை வெளியேற்றவில்லை; சக்திவாய்ந்த நாடு கப்பல் தருவதாக சொன்னார்கள்: மஹிந்தவை புகழும் சாக்கில் காலை வாரும் சமரசிங்க! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தப்பக்கூடாது என்பதாலேயே கப்பலில் மக்களை வெளியேற்றவில்லை; சக்திவாய்ந்த நாடு கப்பல் தருவதாக சொன்னார்கள்: மஹிந்தவை புகழும் சாக்கில் காலை வாரும் சமரசிங்க!


யுத்தத்தின் இறுதி கட்டங்களில் தமிழ் பொதுமக்களை கப்பல் மூலம் வெளியேற்றுவதற்கான ஒரு “சக்திவாய்ந்த நாட்டிலிருந்து” வந்த முயற்சியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்தார்.

அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

ஒரு “சக்திவாய்ந்த நாட்டின்” வெளிநாட்டு தூதர் தலைமையிலான தூதுக்குழு ஒன்று மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டிருந்தபோது வடக்கில் சிக்கிய ஆயிரக்கணக்கான பொதுமக்களை வெளியேற்ற ஒரு கப்பலை வழங்கியதாக கூறினார்.

இருப்பினும், அப்போதைய ஜனாதிபதி அந்த சக்தி வாய்ந்த நாட்டின் இராஜதந்திரிக்கு மற்றொரு நாடும் ஒரு கப்பலை வழங்கியிருப்பதாகவும், எனவே இந்த விஷயத்தை அவர்களுடன் பேசிவிட்டு சொல்வதாக அந்த தூதரிடம் தெரிவித்தார் என மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

வேறொரு நாடு உண்மையில் ஒரு கப்பலை வழங்கியதா என்று பின்னர் அப்போதைய ஜனாதிபதியிடம் தான் கேட்டதாக சமரசிங்க கூறினார்.

வடக்கில் சிக்கியுள்ள எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் கப்பலில் ஏறி தப்பிக்க முயற்சிப்பார்கள் என்று அஞ்சியதால் தான் அப்படி கூறியதாக மஹிந்த தன்னிடம் கூறினார் என்றும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி இந்த வாய்ப்பை ஏற்கத் தயாராக இல்லை என்று கூறியதாகக் குறிப்பிட்டார்.

ராஜபக்ச ஒரு வலுவான தலைவர் என்பதையும், எதையும் ஒப்புக்கொள்ள அவர் தயாராக இல்லை என்பதையும் காட்டுகிறது என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த கருத்திற்கு எதிரான பிரதிபலிப்புக்கள் வெளியாகியுள்ளது. மக்கள் வெளியேறாத விதமாக இராணுவத்தடைகள் ஏற்படுத்தப்பட்டு, யுத்த வலயத்தில் தமிழ் மக்களிற்கு எதிராக போர்க்குற்றங்களை ராஜபக்ச குடும்பம் இழைத்தது என்ற குற்றசசாட்டை மஹிந்த சமரசிங்கவும் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், இலங்கையில் நடந்தது இனஅழிப்பே என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் வெளியான நிலையில், “சக்தி வாய்ந்த நாடு“ பற்றி குறிப்பிட்டுள்ளார்.