Breaking News


யாழ்ப்பாணத்தில் சாதாரண மக்களிற்கு ஒரு சுகாதார நடைமுறையையும், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிற்கு மற்றொரு சுகாதார நடைமுறையையும் பின்பற்ற முடியாதென சுகாதார வைத்திய அதிகாரிகள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அதிகாரிகள், அரசியல்வாதிகள் விடயத்தில் கண்ணைமூடிக்கொண்டு இருக்க வற்புறுத்தப்பட்டு வரும் தாம், சாதாரண மக்களை மட்டும் ஏன் கறார் நடைமுறையுடன் அணுக வேண்டும்? அதனால் பெருந்தொற்றை கட்டுப்படுத்தலாமா? பலனில்லாத இந்த நடவடிக்கையில் ஏன் நாம் ஈடுபட வேண்டும்? என அவர்கள் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (6) சுகாதார அறிவுறுத்தல்களை கணக்கிலெடுக்காமல் நடத்தப்பட்ட கலந்துரையாடலையடுத்து இந்த புதிய- சிக்கலான நிலைமை உருவாகியுள்ளது.

கொழும்பிலிருந்து அமைச்சர்கள் படையெடுத்து வந்து, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் நடந்தது.

அத்தியாவசியமான கலந்துரையாடல்- அரசை நடத்த அவசியமான கலந்துரையாடல் என்றால் சுகாதார நடைமுறைகளை பேணி, அத்தியாவசியமானவர்களுடன்- குறைந்த ஆளணியுடன்- சுகாதார நடைமுறையை பேணி கலந்துரையாடல் நடக்க வேண்டும். நேற்றைய கலந்துரையாடலில் பெருமளவானவர்கள் அழைக்கப்பட்டு, சுகாதார நடைமுறை பேணப்படாமல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலை நடத்த வேண்டாமென யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி எழுத்துமூலம் அறிவித்தல் விடுத்தும் அதை கணக்கிலெடுக்காமல் கலந்துரையாடல் நடந்தது. சுகாதார பரிசோதகர்களிற்கு திருப்பி கதைத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சாதாரண மக்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார வைத்திய அதிகாரியின் எழுத்துமூல அறிவித்தலை கணக்கிலெடுக்காமல் கலந்துரையாடல் நடக்கும் நிலைமை காணப்பட்டால், ஏன் நாம் தொடர்ந்து “பலமற்ற சமூகத்தின்“ மீது அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டுமென அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

யாழ் மாவட்டத்திலுள்ள பல சுகாதார வைத்திய அதிகாரிகள் இந்த விவகாரத்தில் அதிருப்தியடைந்துள்ளனர். சாதாரண மக்களை கட்டுப்படுத்தி, அதேநேரம் அரசியல், அதிகார பலமுள்ளவர்களை கட்டுப்படுத்தாமல் விடுவதால்- தொற்றை கட்டுப்படுத்த முடியாது. பிறகு எதற்கு சாதாரண மக்களின் வயிற்றெரிச்சலை நாம் வாங்க வேண்டும் என அவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.

இந்த புதிய நிலவரத்தினால், யாழில் சுகாதார நடைமுறைகள் அபாய கட்டத்தை எட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று, சுகாதார வைத்திய அதிகாரியொருவர் தற்துணிவுடன் செயற்பட்டு- மாவட்ட செயலக கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரதேசசெயலாளர், பிரதேசசபை தவிசாளரை தனிமைப்படுத்த நடவடிக்கையெடுத்ததாக தகவல் வெளியாகியிருந்தது. எனினும், குறிப்பிட்ட சுகாதார வைத்திய அதிகாரியை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது அதனை மறுத்தார்.

நேற்று கொழும்பிலிருந்து அமைச்சர்கள் ஜோன்சன் பெர்ணான்டோ, ஜீவன் தொண்டமான், நிமல் லான்சா ஆகியோர் படை பட்டாளத்துடன் வந்திருந்தனர்.

அதுதவிர, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு சென்று வருகிறார். எம்.பிக்கள் அங்கயன் இராமநாதன், க.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், எம்.எ.சுமந்திரன், சிறிதரன், த.சித்தார்த்தன் ஆகியோர் நாடாளுமன்ற அமர்வுகளிற்காக கொழும்பு சென்று வந்தனர்.

அதுதவிர, கொழும்பை வசிப்பிடமாக கொண்ட எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்து, பொது நிகழ்வுகளிலும், பொதுமக்கள் வீடுகளிற்கும் சென்று வருகிறார்கள்.

அவர்களின் படை பட்டாளம் வேறு.

ஆனால், சாதாரண மக்கள் கொழும்பிலிருந்த வந்தால் வீடுகளில் தனிமைப்படுத்தல் மற்றும் பிசிஆர் சோதனை என அந்தந்த பகுதி சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்களால் படாய்ப்படுத்தப்படுவார்கள்.

ஏன் இப்படியான ஒரு பாரபட்சமான அணுகுமுறையை நாம் மனச்சாட்சிக்கு விரோதமாக மேற்கொள்ள வேண்டுமென்ற கேள்வி, சுகாதாரத்துறைக்குள் எழுந்துள்ளது.

அரசியல்வாதிகள், அவர்களின் பரிவாரங்களினால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லையா? அல்லது அவர்களினால் தொற்று ஏற்பட்டால் பரவாயில்லையென அரசு கருதுகிறதா என்ற கேள்வியெழுந்துள்ளது.

No comments

Note: Only a member of this blog may post a comment.